Author: யசோதா.பத்மநாதன்
•5:37 PM


 சிலப்பதிகாரத்தில்  ஒரு இடம் வருகிறது. மாதவி தன்னை அழகு படுத்துகிற இடம் அது. மாதவி அணிந்த நகைகள் பற்றிய பட்டியல் ஒன்று அதில் வருகிறது.அந்தப் பட்டியல் பாட்டில் சுமார் 30க்கு மேற்பட்ட நகைகளை அணிந்து அவள் தன்னை அழகு படுத்தி இருக்கிறாள்.



அந்தப் பாடல் வரிகள் இவைதான்.

”நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து, 85

குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து, 90

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம் 95

கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து, 100

கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து, 105

தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள், 110

இதைப்பார்த்ததும் ஈழத்தின் வடபுலத்தைச் சேர்ந்த பேராசிரியர். க. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய காதலியாற்றுப்படை என்ற புத்தகத்தில் - (1903 - 1968 ) நாட்டார் வாழ்வியலைப் பதிவு செய்த அந்தக் கவிதை இலக்கியத்தில் - வந்த அணியப்பட்ட நகைகள் பற்றிய பட்டியல் பாட்டு நினைவுக்கு வந்தது. அந்தப் பாடல் இது தான்.



” நன்னாள் பார்த்து பொன்னை உருக்கி
மணவினைக்கென்றே வரைந்திடு தாலியும்
அட்டியல், பதக்கம், பிலாக்கு, மூக்குத்தி,
பூரானட்டியல்,கீச்சிக் கல்லட்டியல்,
கடுகுமணிக்கொலுசு, கவுத்தோர் காதுப்பூ,
வாளி, சிமிக்கி, வளையல், தோடு,
பட்டணக்காப்பு, பீலிக்காப்பு,
பாதசரமொடு சங்கிலிச் சிலம்பு
தூங்கு கடுக்கண், நட்டுவக்காலி,
அரும்புமணிமுரு கொன்றப்பூவும்,
ஒட்டியாணம், மொழிபெறு நுதலணி
அரைஞாண் கயிறொடு அரைமூடிச் சலங்கை
சித்திர வேலை செய்திடும் போது........”

எனப் பட்டியல் இட்டபடி தொடர்கிறது இப்பாடல்.

பண்டய தமிழர் வாழ்வில் அணியப்பட்ட நகைகளின் பட்டியலைப் பார்க்கும் போது மலைப்பே மிஞ்சுகிறது.

1. அழகியலில் தமிழருக்கு இருந்த புலமை, நாட்டம் மற்றும் செய்நுட்பத் திறமை என்பது ஒன்று.

2. பெண்கள் எவ்வளவு தூரத்துக்கு புறத்தே தம்மை அழகுபடுத்திக் கொள்வதில் நாட்டமுடன் இருந்திருக்கிறார்கள் என்பது இன்னொன்று.

இந்தப் புற அழகு இரண்டு வகையாக இருக்கிறது. ஒன்று பொன்னகை. இரண்டு புன்னகை. முன்னதை விட பின்னது கொஞ்சம் செளகரிகம் என்ற போதும் இன்றும் அது மட்டும் போதும் என்று சொல்லும் பெண்ணோ ஆணோ இல்லை இல்லையா?





|
This entry was posted on 5:37 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On March 21, 2014 at 12:37 PM , ந.குணபாலன் said...

தமிழ்ப் பாடத்தை நம்மில் பலர் வேண்டாவெறுப்பாய் படித்திருக்கிறோம். மாணவரைக் கவரும் வகையில் பாடம்சொல்லிக் கொடுக்கும் ஆசான்களும் அருமை. அதனால் சங்க இலக்கியப் பாடல்கள் ஏதோ இன்னொரு மொழியில் அமைந்தன போன்ற ஒரு உணர்வைப் பலருக்கும் தரக்கூடும். ஆன காரணத்தால் சங்கப் பாடல்களை இன்றைய மொழி நடைக்கேற்ப விளக்கம் தந்தும் எழுதும் படி வேண்டிக் கொள்ளுகிறேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக்கு ஏற்ப.

 
On July 4, 2014 at 8:00 AM , Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பாடல்களுக்கேற்ற புகைப்படங்கள், செய்திகள்.தங்களின் பதிவை சிகரம் பாரதி மூலமாக
அறிந்தேன். வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in