Author: யசோதா.பத்மநாதன்
•2:39 PM
புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

புது வருஷத்தில் பிள்ளையார் சுழி போட்டு படலை திறக்கிறது ஈழத்து முற்றம்!



மாற்றங்கள் பல வந்து விட்டன. பண்பாட்டில், பழக்கவழக்கங்களில், அன்றாட வாழ்வில், வாழும் வழிகளில் என பல கூறுகளிலும் அது தன் இருப்பை காட்டி வருகிறது.

கால ஓட்டங்களில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே! யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் சங்கடப் படலை என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்டமுறை ஒன்று இருந்தது. இது ஒரு மறைந்து போகும் பாரம்பரிய அமைப்பு முறையாகும். நடை பயணமாக வரும் வழிப்போக்கர்களுக்குச்  சங்கடங்களை  தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை சங்கடப் படலை என காரணப் பெயர் பெற்றிருக்கலாம்.

அதன் அமைப்பு முறை படலைக்கு நிழல் கொடுக்கும்  வகையில் ஒரு கூரை அமைப்பு உயரத்திலும் பாதசாரிகள் இருந்தோ கிடந்தோ இளைப்பாறிப் போகும் வகையில் சீமேந்தினால் அமைக்கப்பட்ட மேடை கீழேயும் அமைந்திருக்கும். அருகில் மண்பானையில் குடி தண்ணீர் வைக்கப்பட்டிருந்தலும் மரபு. சில படலை அமைப்புகள் நிழல் மட்டும் கொடுத்த படி இருப்பதும் இயல்பு. அவை இப்போது வெகுவாக அருகி வருகின்ற போதும் சில இடங்களில் அவை இன்றும் புழக்கத்தில் இருக்கக் கானலாம். அவற்றின் சில படங்களைக் கீழே காண்க.

 (படங்கள்: நன்றி; கூகுள் இமேஜ்)











இவ்வாறே தெரு மூடி மடங்களும் அமைந்திருந்தன. தெருவையே மூடியவாறு அமைந்திருக்கும் கீழ்கண்ட இத்தகைய நிழலும் ஆறுதலும் தரும் அமைப்புடய வீதி ஒழுங்கைக் கொண்டிருந்த வாழ்க்கை முறை ஒரு கால கட்டத்தின் வடபகுதித் தமிழரின் ஒப்புரவான வாழ்க்கை முறைக்கு சாட்சியாக அமைந்துள்ளன.







கோயில் திருவிழாக்களின் போது தண்ணீர் பந்தல்கள் அவ்வாறான அமைப்பை ஒத்த வகையில் போடப்படுவதும் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தாகசாந்தி செய்து அனுப்புதலும் தண்ணீர் பந்தல் போடும் தொண்டர்களின் சேவையின் பாற்படும்.



தண்ணீர் பந்தல் 

கூடவே தண்ணீர் தொட்டியும்  மாடுகள்முதுகு சொறிவதற்கான ஆவுரோஞ்சிக் கற்களும் (ஆ - மாடு, உரோஞ்சி - சொறிதல், கல் - கல்) ஆங்காங்கே பொது இடங்களில் சுமைகளோடு வரும் நடை பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சுமைதாங்கிக் கற்களும் அம் மக்களின் வாழ்க்கை முறையினை சொல்லும் இன்னொரு அம்சமாகும். வாய் பேசா ஜீவன்களின் சங்கடங்களை அறிந்து அவைகளுக்கு தேவையான விடயங்களைப் பொது இடங்களில் அமைத்து வாழ்ந்து வந்த ஒரு வசந்த வாழ்க்கையினை சொல்லும் அந்த விடயங்கள் எல்லாம் இப்போது வெறும் காட்சிப் பொருளாக மாத்திரம் அமைந்து போனது காலத்தின் கட்டளை போலும்.




ஆவுரோஞ்சிக்கல்லும் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கான தொட்டியும்

ஆனால், இந்தியாவிலோ சற்று வேறுபட்ட முறையில் அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. நம் ஊரில் காணப்பட்டிருக்கும் படலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் திண்ணை போன்ற அமைப்பு முறைகள் அங்கு வீட்டோடு சேர்த்து அமைக்கப்படிருப்பதை அவர்களின் பாரம்பரிய வீடுகளில் காணலாம்.

இந்திய வீட்டோடு கட்டப்பட்டுள்ள திண்னைகள்






ஆனால் நாற்சார வீடுகள் கேரளாவைப் போன்று இலங்கையிலும் சிங்கள தமிழ் மக்களிடையே பிரபலம் பெற்றிருந்த கட்டிடக்கலையாகும்....


ஆனால் இவ்வாறு இலங்கையின் வட பகுதியில் வீட்டுப் படலையோடு அமைக்கப்பட்டிருந்த கூரையும் திண்ணையும் சேர்ந்ததான அமைப்பு முறை அங்கு மட்டும் தனித்துவமாகக் காணப்பட அங்கு நிலவிய சாதி அமைப்பு முறையும் ஒதுக்கப்பட்ட மக்கள் தம் வீடுகளுக்கு வருவதைத் தடுப்பதற்காகவே அத்தகைய அமைப்புகள் அங்கு ஒரு கால கட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன என்றும் தலித் எழுத்தாளர் டானியலும் பேராசிரியர்.சிவத்தம்பியும் கருதுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அவை ஆராய்ச்சி செய்து நிறுவுவதற்கு வேண்டியன.

இப்போது சிட்னி என் வசிப்பிடமாகி வருடங்கள் பலவாயிற்று. 30, 35 வருடங்களுக்கு முற்பட்ட பல வீடுகள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் தொடர்மாடி வீடுகள் முளைத்து வருகின்றன. இப்படியான மாற்றங்களை எதிர் கொள்வது பல வேளைகளில் சிரமமாக பார்க்க கவலை அளிக்கும் விடயமாக இருக்கிறது. 

என் வீடு அமைந்திருக்கிற பாதையில் உள்ள பல வீடுகளில் இருந்த பல மூதாதையர்கள் இடம்பெயர்ந்து மூதாதையர்கள் விடுதிகளுக்கு போகிறார்கள். போகிற போது இள வயதில் இருந்து தாம் வசித்து வந்த வீடுகளை தம் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டோ, விற்று விட்டோ போகிறார்கள். கைமாறும் வீடுகள் மிக விரைவாகவே தன் சோபையை; பாரம்பரியத்தின் அழகை இழந்து அந்த இடத்தில் நவீன மோஸ்தரிலான வீடுகளும் தொடர்மாடிக் குடி இருப்புகளும் முளைத்து விடுகின்றன. கண்ணுக்கு முன்னால் நடைபெறும் இத்தகைய மாற்றங்களை பார்க்க பல வேளைகளில் கஸ்ரமாக இருக்கிறது.

நடந்து போகின்ற வேளைகளில் பூங்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டோ, களை பிடுங்கிக் கொண்டோ நிற்கும் மூதாட்டிகளை; புன்னகையோடு நலமா நீ என விசாரிக்கும் தோல் சுருங்கிய கிழவர்களை எல்லாம் இப்போதெல்லாம் காண முடிவதில்லை. அவர்கள் இருந்த இடங்களை போனோடு சல்லாபிக்கும் அருகாமைகளைக் கவனிக்காத; கவனிக்க விரும்பாத, கனவுகளில் மிதக்கும் இள முகங்களும் புது மோஸ்தரிலான வீடுகளும்.

அண்மையில் ஒரு வணிக சஞ்சிகையில் பார்த்தேன். ஒருவர் எழுதி இருந்தார்.தொழில்நுட்பம் வருவதற்கு முன்பான வாழ்க்கை முறையைக் கடசியாகச் சந்தித்த சந்ததி நாங்கள் தான் என்று. அதனால் தான் இதகைய வலியோ என்னமோ.

இரண்டையும்; இரண்டு விதமான வாழ்க்கை முறையையும் ஒரு வாழ்க்கைக் காலத்தில் - ஒரு மெலனியத்தில் சந்தித்திருக்கிறோம். 

இப்போதெல்லாம் அவற்றை அழிவதற்கிடையில் புகைப்படமாகச் சேமித்துக் கொள்ள தோன்றுகிறது. 

இவற்றை படமாக எடுக்கத் தோன்றியதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது இங்கு பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு பிடித்த முறையில் தமிழையும் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கற்பித்துக் கொடுக்க அவர்களுடய கண்களூடாக நம் நாட்டு வாழ்வியலைச் சொல்லிக் கொடுக்க நான் கையாள விரும்பும் ஒரு உத்தியும் இது வாகும். ( அது சம்பந்தமாகச் சேமிக்கத் தொடங்கிய பல புகைப்பட ஆவணங்கள் சேமிக்கப்பட்ட அரைவாசியில் நிற்கிறது. என் வாழ்க்கைக்காலத்துக்குள் அதனைச் செய்து முடித்து விட வேண்டும்.)

அவுஸ்திரேலிய பாரம்பரிய வீடுகளில் சில அதிசய ஒற்றுமைகள் உண்டு.(இனி வரும் படங்கள் நான் எடுத்தவை)

1. சங்கடப்படலை போன்ற அமைப்பு







படலைக்கு நிழல் தருவது போன்ற அமைப்பு இங்குள்ள பழைய வீட்டு அமைப்போடு கூடப் பிறந்தவை. ஆனால் அவை கொடி மலர்கள் படர வீற்றிருக்கும். அவற்றின் சில படங்களையே மேலே காண்கிறீர்கள்.

புகைக்கூடுகள்: அங்கும் இங்கும்

நம் ஊரிலும் புகைக்கூடுகள் இருக்கின்றன. இங்குள்ள பாரம்பரிய வீடுகளிலும் புகைக்கூடுகள் இருக்கின்றன. வெளித்தோற்றத்தில் புகைக்கூடுகள் துல்லியமாய் வெளித்தெரியும். ஆனால் இவை இரண்டுக்கும் உபயோகங்களில் பெருத்த வேறுபாடுண்டு. 

அங்குள்ள புகை போக்கிகள் சமையல் அறையில் இருந்து விறகடுப்பின் புகையை போக்க அமைக்கப்பட்டிருக்கும். இங்குள்ள புகை போக்கிகள் குளிர்காலத்து குளிரைப் போக்க வரவேற்பறைக்குள் விறகுகள் போட்டு எரிக்க பயன் பட்டு வந்தன. இவை கணப்படுப்புகள். இப்போதெல்லாம் இத்தகைய புகை போக்கிகளோடு வீடுகளை இங்கு யாரும் கட்டுவதில்லை. அதற்கான தேவையும் இல்லாது போயிற்று. அந்தப் பாரம்பரியத்தின் இடத்தை மின்சாரத்தில் இயங்கும் கணப்புகளும் குளிர் சாதனங்களும் நிரப்ப இப்போது வீட்டின் வெளிச் சுவர் புறமாக ஒரு சிறு கருவி மட்டும் வெளித்தெரிகிறது. 

அது வீட்டின் வெளிப்புற அமைப்பில் பாரிய வித்தியாசத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

இப்போதெல்லாம் மிக அபூர்வமாகக் காணப்படும் கணப்படுப்பு கொண்ட பாரம்பரிய அவுஸ்திரேலிய வீட்டின் படங்களைக் கீழே காண்கிறீர்கள்.






இவை எல்லாம்; இத்தகைய வீடுகள் எல்லாம் காலப்போக்கில்; இன்னும் என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு தசாப்தங்கள் கடந்தால் கூடக் காணக்கிட்டாது.



வெளி விறாந்தைகள் கொண்ட வீடுகள்




இவற்றோடு ஒத்ததான நம்மூர் வீடுகளின் படங்களை எடுக்க இன்னும் காலம் கனியவில்லை.



ஈழத்து முற்றத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நத்தார், புது வருட வாழ்த்துக்கள்! அன்பும் அமைதியும் சுபீட்சமும் எங்கும் நிறைவதாக!

     அன்பே சிவம் !


|
This entry was posted on 2:39 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 comments:

On January 3, 2014 at 5:31 AM , வர்மா said...

எழுத்தாளர் டானியலும் பேராசிரியர்.சிவத்தம்பியும் சொல்வது உண்மைதான். டானியல் எழுத்தாள்ர்.தலித் எழுத்தாளர் என முத்திரைகுத்தவேண்டாம். தெருமூடி மடங்கள் அல அழிந்துவிட்டன.புத்தாண்டில் பிள்ளையார் சுழி போட்டதற்கு நன்றி.

 
On January 4, 2014 at 12:21 AM , யசோதா.பத்மநாதன் said...

வணக்கம் வர்மா. புத்தாண்டு வாழ்த்துக்கள். முதன் முதல் வந்து கருத்துத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

தாழ்த்தப்பட்ட/ ஒடுக்கப்பட்ட/ ஏழை மக்களுக்காக குரல் கொடுத்த எழுத்துக்கள் டானியலுடயவை என்பது என் அபிப்பிராயம். அது தவறெனில் தயவு செய்து திருத்தவும்.

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க வெளியீடு ஒன்றில் டானியல் சுட்டிக் காட்டிய கருத்து அது.அதனை அரசியல் தீர்வு குறித்து ஜேர்மனியில் நடந்த மாநாட்டுக் கலந்துரையாடலில் தலித் மக்களின் நியாயம் கோரி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையில் இலங்கையர் ஜனநாயக முன்னணி 11.11.2006: 12.11.2006 ல் இதனை முன் வைத்து வாதாடியது.

எழுத்தாளர் என அழைப்பதில் எனக்கு ஆட்சேபனை நிச்சயமாக இல்லை வர்மா.

தெருமூடி மடம் ஒன்று வடமராட்சியில் சிவன் கோயிலுக்கு முன்பாக இன்றும் இருப்பதாக வாழும் மரபு என்ற வலைப்பூ கருத்து சொல்கிறது.அதனை வரலாற்றுத் துறை பேராசிரியர் செ.கிருஸ்னராசா 2010ல் எழுதிய ‘தெருமூடிமடம்’ என்ற கட்டுரையும் மெய்ப்பிக்கிறது.அது பற்றி தினகரனில் பெப்.14, 2010ல் கலாநிதி.செ.குணராசாவும் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வர்மா. நாம் அங்கு இல்லாததால் தவறுகள் நேர்ந்தால் உங்களைப் போன்றவர்கள் தான் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

 
On January 4, 2014 at 12:49 AM , யசோதா.பத்மநாதன் said...

பேராசிரியர் கிருஸ்னராசா எழுதிய கட்டுரை 2008ம் ஆண்டுக்குரியது. தவறுதலாக 2010 என அச்சாகி விட்டது.

கலைக்கேசரியில் பேராசிரியர் புஸ்பரட்னம் எழுதி உள்ள’உடுப்பிட்டி ஒல்லாந்தர் காலத் தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு’ என்ற கட்டுரையும் சுவாரிசமான பல தகவல்களைக் கொண்டிருக்கிறது.

 
On January 4, 2014 at 2:48 PM , தனிமரம் said...

காலமாற்றம் நம் வீட்டுடமைப்பு முறைகள் பல இன்று மாற்றம் கண்டு வருவதை அழகிய படங்களுடன் வரலாற்று ஆவணமாக தொகுத்த விதம் அருமை!

 
On January 4, 2014 at 3:28 PM , 2008rupan said...

வணக்கம்
ஈழத்தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை சித்தரிக்கும் கட்டிடக்கலை பற்றிய பதிவு சிறப்பாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 
On January 4, 2014 at 3:41 PM , யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஈழத்தில் படலைகள் பல விதம், அதில் பல தச்சு வேலை தெரிந்தவர் உதவியின்றி தாமே அமைப்பது, படலை இலகுவாக அசைய காலுக்கு மூரிச் சிரட்டை அல்லது பின் குழியுள்ள போத்தல் அடி, அத்துடன் தானே பூட்டக்கூடைய அமைப்பு கவர்த்தடியுள் வழுக்கிச் செல்லும் பனை மட்டை அதன் நுனியில் அளவான பாரத்துடன் கல்.
இத்தொழில் நுட்பம் கிராமத்தில் பார்த்து வியந்ததுண்டு.
அரிய படங்களுடன் சிறந்த ஆவணம்.

 
On January 5, 2014 at 1:09 AM , யசோதா.பத்மநாதன் said...

உடனே வந்து கருத்தினைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தனிமரம்.

ரூபன், உங்களுக்கும் என் அன்பும் நன்றியும்.

புது வருஷ வாழ்த்துக்கள்.
வாழி! நலம் சூழ!!

தொடர்ந்து நம்மோடு இணைந்திருங்கள்!

 
On January 5, 2014 at 1:33 AM , யசோதா.பத்மநாதன் said...

வணக்கம் யோகன்,

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.எனக்குத் தெரியாமல் போன பல விடயங்களை சொல்லி இருக்கிறீர்கள்.

ஒற்றைக் கதவுள்ள படலைகள், இரட்டைக் கதவுள்ள படலைகள்,தகரத்தால் ஆனவை, பனையோலையால் அமைக்கப்பட்ட படலைகள்,மதில் சுவரோடு அமைக்கப்பட்ட படலைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான அமைப்பு கொண்டவை.

நீங்கள் இன்னும் நுட்பமாய் போய் அதன் தொழில்நுட்பத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் யோகன்.

உங்கள் கருத்துக்களால் இப்பதிவு தனிச் சோபை பெறுகிறது.

எனக்குப் பிடித்த படலை வேலிப் பொட்டு. :) இரண்டு வீடுகளுக்கு நடுவில் இருக்கும் அந்த வேலிப்பொட்டு சொல்லும் உறவுகளோடு வாழ்ந்திருந்த ஓர் அன்னியோன்னியத்தை இல்லையா?

புத்தாண்டு வாழ்த்துக்களும் உரியதாகுக!

பாராண்ட மன்னர் புகழ் போலே! உலகாண்ட புலவர் தமிழ் போலே!! நம்மோடு இணைந்திருங்கள்.

 
On January 5, 2014 at 9:03 AM , வர்மா said...

திறந்தபின் தானாக மூடும் கதவை, படலை என்ற பெயரில் நம்மவர்கள் தான் உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.பருத்தித்துறை சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள தெருமூடி மடம் இன்றைக்கும் உள்ளது. அபிவிருத்தி என்ற பெயரில் எப்போ அழிக்கப்படுமோதெரியாது.மந்திகைக்கு அருகிலும் ஒன்று இருந்தது. அந்த இடத்தைக்கடக்கும் போது மனது வலிக்கும்.டானியலைப்பற்றிய உங்களது அபிப்பிராயம் சரியானது தான். அவருடைய எழுத்தின் வலிமையை ப்பொறுக்கமாட்டாதவர்கள்தான் நாகரீகமாக தலித் என்ற முத்திரையைக்குத்தி அவரைப்போன்றவர்களை ஒதுக்கினார்கள் என்பது எனது அபிப்பிராயம்

 
On January 6, 2014 at 3:13 PM , யசோதா.பத்மநாதன் said...

மிக்க நன்றி வர்மா.

சிக்கனத்துக்கு பேர் போன தமிழர் உள்ளூர் மூலப்பொருட்களை புத்தி சாதுர்யமான தொழில்நுட்பத்தோடு பயன்படுத்தி வந்திருந்தனர் போலும். ஆனால் சிங்கள மக்களுடய படலைகள் சிறந்த செதுக்கல் வேலைப்பாடுகளுடன் காணப்படும் இல்லையா? கலை வெளிப்பாடுகளில் அவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார்கள்.

மந்திகைக்கு அருகில் ஒரு தெருமூடி மடம் இருந்ததாகச் சொன்னீர்கள்.யாழ்ப்பாணத்தில் பண்டார மடம், உப்பு மடம், முத்தட்டு மடம், மருத னார் மடம், ஆறுகால் மடம், கந்தர் மடம், நாவலர் மடம், செட்டியர் மடம், சுப்பர் மடம், ஒட்டு மடம், பண்டத்தரிப்பு மடம், சாரையடி மடம், சங்கத்தானை மடம், பனைமுனை மடம், நெல்லியடி மடம், திருநெல்வேலி மடம், மடத்துவாசல் ஆகிய இடங் களில் இத்தகைய தங்குமிடங்கள் இருந்ததற்கான சான்றுகள் இருந்ததாக ’யாழ்ப்பாணம் ஓர் அறிமுகம்’என்ற நூல் சொல்கிறது.

யாழ்ப்பாணத்தின் வீதி தர்மம் பற்றி அது மேலும் சொல்லுகையில்,’சத்திரங்கள், தெரு மூடிமடங்கள், பொது நன்னீர்க் கிணறுகள், தங்குமடங்கள், கால்நடைகளுக்கான துரவுகள், ஆவுரஞ்சிக் கற்கள், நீர்த்தொட்டிகள், நீர்க்குண்டுகள், தலைச்சுமைப் பயணிகளுக்கான தெருவோரச் சுமைதாங்கிகள், தெருவோர நிழல் மரங்கள், தனி வழிப்பயணத்தில் பயத்தினைப் போக்கத் தெருவோரச் சிறு தெய்வச் சின்னங்கள், சங்கடப் படலைக் கொட்டில்களில் வழிப்போக்கர் தெருவழிப் பயணிகளின் தாகத்தைத் தீர்க்கப் பானைகளில் நிறைந்த குளிர் நீர் அல்லது மோர் என ஊர்தோறும், தெருதோறும் தர்மம் விரிந்து கிடந்தது.’ என்று சொல்கிறது.

 
On January 6, 2014 at 3:52 PM , யசோதா.பத்மநாதன் said...

சுமார் இதே காலப்பகுதியில் (150 வருடங்களுக்கு முன்னால்?) ஒடுக்கப்பட்ட / தாழ்த்தப்பட்ட / பாமர ஏழை மக்கள் கிணறுகளில் தண்ணீர் அள்ள அனுமதிக்கப்படவில்லை என்பதும்; அதன் நிமித்தம் அவர்கள் தமக்கென ஒரு கிணறு வெட்டிய போது அதற்குள் நஞ்சினை ஊற்றிய கைங்கரியத்தை ‘உயர்குடி’ செய்தது என்ற விடயத்தையும் நிச்சயம் நாம் இங்கு சொல்லியாக வேண்டும்.

ஆறுமுகநாவலரின் குறிப்புகள் சில பாரதூரமானவை. அவைகளைப்பற்றி மு. நித்தியானந்தன், ‘யாழ்ப்பாணத்து சாதியம்; காலணித்துவ சமரசம்’ என்ற தலைப்பில் நல்லதொரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

இதுவும் சொல்லப்பட வேண்டிய ஒரு வாழ்க்கை முரண்.

நன்றி வர்மா.

 
On January 12, 2014 at 3:08 AM , வர்மா said...

நெல்லியடியில் ஒரு மடம் இருந்தது 65 க்குப்பின் அது இல்லாமல் போய்விட்டது என நினைக்கிறேன்.ஆறுமுகநாவலரின் சைவசமய கேள்விபதில் புத்தகத்தைத்தடை செய்யவேண்டும்.இது பற்றி அண்மையில் ஜீவநதி ஆசிசியர் பரணீதரனும் தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.தண்ணீர்ப் பிரச்சினையைத்தான் தண்ணீர் தண்ணீர் என்ற நாவலில் டானியல் எழுதி உள்ளார்.

 
On September 17, 2014 at 7:14 PM , Unknown said...

18 - 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஜாதி அடிப்படையிலேயே சமூகம் இயங்கியது. இதனால்தான் கண்டி இராசதானியில் அரச குடும்பத்தில் ஆண் சந்ததி இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டிலிருந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்துச் சென்று சிங்கள அரச பெயர் கொடுத்து மன்னராக்கினார்கள்.
கிணற்றில் விஷம் கலந்தது சிலரது அறியாமையால் விளைந்த சம்பவமாகும். அது ஒரு isolated incident. அதை வைத்து ஒட்டு மொத்த 'உயர்குடி' மக்களையும் சாடக்கூடாது. 20ஆம் நூற்றாண்டில் கூட ஒரே சாதி மக்கள் மத்தியில் கூட காணிப் பிரச்சனை, கோவில் திருவிழாக்கள் காரணமாக வெட்டுக் கொத்துகள் நடைபெற்றுள்ளன.
வட இந்தியாவில் நிலவிய வர்ணாசிரமம் தான் தென்னிந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் சாதி என வடிவமெடுத்தது. வர்ணாசிரமம் ஒரு சமூக அமைப்பு. இப்போது நிறுவனங்களில் ஒவ்வொரு நிலையில் மேலாளர், அதிகாரி, நிதியாளர், விற்பனையாளர், எழுத்தர், உதவியாளர் என முறைமை இருப்பது போல அக்காலத்தில் அது சமூக முறையாக உள்ளது. இன்று அரசியலில் கூட ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள் என வகைப்படுத்தப் பட்டு அவர்களுக்கென்று இடங்களும் ஒதுக்கப் படுகின்றன. ஒரு அதிகாரி ஜனாதிபதியின் ஆசனத்தில் உட்கார முடியாது. அதைத்தான் வர்ணாசிரமம் சொல்லியது. வர்ணாசிரமத்தில் பிறப்பினால் மட்டும் ஒருவர் தனது நிலையை பெறமுடியாது. பிராமணர் வேதம் ஓதவேண்டும். அரசன் போர்ப்பயிற்சி, நீதி நெறிகள் என்பவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். எந்த நிலையில் இருப்பவரும் தமது முயற்சியினால் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும்.
வர்ணாசிரமம் தெற்கே சாதியாக உருவெடுத்தபோது பிறப்பே ஒருவரின் நிலையை தீர்மானித்தது. இதனால் தனது சாதிக்குரிய குணாதிசயங்கள் இல்லாதவரும் பிறப்பினால் அந்த சாதியைச் சேர்ந்தவராக கணிக்கப்பட்டார். ஆகவே, இதனைக் கட்டிக் காக்க அறிவு குறைந்தவர்கள் வன்முறை மூலம் மற்றவர்களை ஒடுக்கி வைக்க முற்பட்டார்கள்.
இன்றைக்குக் கூட தமிழ்நாட்டில் மட்டுமே சாதிச் சண்டைகள் நடைபெறுவதைக் காணலாம். வடநாட்டில் ஒடுக்கப்பட்டவர்கள் பிரச்சனை உள்ளது, ஆனால் அது சமூகப்பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனை. அவர்களை வைத்து அரசியல் நடத்துபவர்களால் ஏற்பட்ட பிரச்சனை.
ஆறுமுக நாவலருக்கு தமிழ் நாட்டில் சில பின்னடைவுகள் ஏற்பட்டன. வள்ளலாரின் திருவருட்பாவை திருமருட்பா என அவர் விமரிசித்து அதனைத் தடை செய்யக் கோரி வெள்ளைக்காரன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வள்ளலார் நீதிமன்றில் நுழைந்தபோது நீதிபதி இருக்கையை விட்டு எழுந்தார். வள்ளலாரின் தெய்வீக ஒளி அத்தகையது. நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.
ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்துக்கு திரும்பிச் சென்றதும் அவர் சார்ந்த வேளாளரை முன்னிலைப் படுத்துவதில் முனைந்தார். வேளாளரே உயர் சாதி, மற்றவர் எல்லாம் அவர்களுக்கு சேவகம் செய்பவர்கள் என்பது போன்ற நிலையை ஏற்படுத்தினார். இந்தியாவில் பிராமணர் உயர்ந்த சாதியினராக இருக்க, யாழ்ப்பாணத்தில் பிராமணர்கள், வெள்ளாளரின் முகாமைத்துவத்தில் கோவில்களில் பூசாரிகளாகச் செயற்படும் நிலை ஏற்படுத்தினார்.

இவ்வாறான செயற்பாடுகளினாலேயே 'சங்கடப் படலை' போன்ற தரும கைங்கரியங்களும் டானியல் போன்ற எழுத்தாளர்களால் தவறாக விளங்கப்பட காரணமாய் விட்டது. அவரையோ மற்றவர்களையோ குறை சொல்லக் கூடாது. அக்காலச் சூழ்நிலை அவர்களை அப்படிச் சிந்திக்க வைத்துவிட்டது.