Author: சஞ்சயன்
•10:18 AM
ஏறத்தாள 33 - 34 வருடங்களுக்கு முன்னான நினைவுச் சிப்பிக்குள் முத்தாய் ஒளிந்திருந்த கதை இது. ஏனோ இன்று நினைவில் கரை தட்டியது.

காலம் 1976 -77 கள். மட்டக்களப்பு மாவட்டத்தின்  பிரபல்யமான பாடசாலையாகிய மெதடிஸ்த மத்திய கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற  கனாக்காலம்.

என்னுடன் பதுளையில் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் படித்த நண்பனும் அவனின் இரு சகோதரர்களும் என்னுடன் விடுதியில் தங்கியிருந்தார்கள். ஆரம்ப காலங்களில், மட்டக்களப்பு மண்ணின் புழுதி, மனத்தையும் உடலையும் ஆட்கொள்ள முதல் எனக்கு நண்பனாக ப‌ழைய பதுளை நண்பன் மட்டுமே இருந்தான்.

இவர்களின் பதுளைத் தமிழ் மட்டக்களப்புத் தமிழுக்கு புதிதாய் இருந்ததால் இவர்களின் தமிழ் வேடிக்கையாய் இருந்தது பலருக்கு. நக்கலுக்கும், கிண்டலுக்கும் உட்பட்டார்கள்.  காலப் போக்கில் மொழிவேறுபாடுகள் மறைந்து போயின. விடுதி வாழ்க்கை என்பது ஒரு வித இயந்திரத் தன்மையான வாழ்க்கை. நேரம் தவறாமால் எல்லாமே நடக்கும். சூரியன் உதித்து மறைவது போல.

காலையில் எழும்பி மாலையில் மயங்கும் வரை எல்லாமே அட்டவணையிடப்பட்டிருக்கும். மாணவ தலைவர்களின் மிரட்டல்களுக்கும் ஆசிரியர்களின் கண்டிப்புக்கும், இவ்றையெல்லாம் மீறி ”முற்றும் உணர்ந்த” எங்கள் அதிபர் பிரின்ஸ் காசிநாதரின் ”கழுகுக் கண்களையும்” மீறி எம்மால் எதையும் செய்ய முடியாதிருந்த காலம் அது.

காலையில் மேற் பக்கம் கருகியிருக்கும் ஒரு றாத்தல் பாண் மூன்றாக வெட்டப்பட்டு சம்பலுடன் பரிமாறப்படும். அன்றைய காலையுணவுக்கு பொறுப்பானவர்கள் எமது நண்பர்கள் எனின் மூன்றில் ஒன்று என்னும் விதி யாருக்கும் தெரியாமல் மீறப்பட்டு, எம்மிலும் சிறியவன் ஒருவனுக்கு காலையுணவு ஏறக்குறைய இல்லாது போயிருக்கும்.  பசியின் முன் நியாயம் அடிபட்டுப்போகும் என்பதை முதன் முதலில் உணர்த்திய இடம் எமது உணவுச்சாலையே.

அப்போதெல்லாம் பாடசாலை இரு நேரங்கள் நடைபெற்றது. மதிய இடைவேளை நீண்டிருக்கும். வெட்டி எடுத்த தண்டவாளத்தில் இரும்புத் துண்டால் அடித்து சாப்பாட்டு நேரம் அறிவிக்கப்பட்டதும் உணவுச் சாலையின் கதவுக்கருகில் வரிசையில் நின்று மாணவர் தலைவர்களின் கட்டளைப்படி உட்புகுந்து எனக்கு என்று வழங்கப்பட்ட இடத்தில் எனது அலுமீனிய தட்டில் இடப்பட்டிருக்கம் சோற்றின் அளவையும் கறிகளின் அளவையும் கண்கள் அளவெடுக்கும் வரை மனம் பெரும் பாடு படும். அன்று உணவு பரிமாறுவது எமது நண்பர்களில் ஒருவராக இருந்தால் எமது பாடு கொண்டாட்டம் தான். இல்லையேல் திண்டாட்டம். கொண்டாட்டமும் திண்டாட்டமும் . இரவையும் பகலையும் போல் மாறிக் கொண்டேயிருந்தது.

மாதத்தில் ஒரு நாள் அதாவது முழு நிலவன்று இரவு கல்வி நேரம் இல்லாதிருக்கும். விளையாட்டுகள் களைகட்டும். மகிழ்ச்சியின் உச்சத்தில் கண்ணயரும் வரை கொண்டாட்டமாய் கழியும் ஒரே ஒரு இரவு, அந்த முழு நிலவின் இரவொன்றே. இந்த ஒரு நாளுக்காவே வாழ்ந்திருந்த காலங்கள் அவை.

இவ்வாறு நானும் எனது பதுளை நண்பர்களும் விடுதி வாழ்க்கைக்கு இசைவாக்கம் அடைந்திருந்தோம். எனது வகுப்புத் தோழனும் இன்றைய காலத்தில் பாரீஸ் நகரத்தில் வசிப்பவருமாகிய நண்பர் ராஜேந்திரன் என்பவரும் எம்முடன் விடுதியில் தங்கியிருந்தா(ன்)ர்.

எங்களின் பெற்றோர்கள் விரும்பியதை நாம் பாடசாலையில் செய்தோமோ நானறியேன். ஆனால் நாம் விரும்பியதை தேவைக்கதிகமாகவே செய்தோம். நானும், எனது பதுளை நண்பர்கள் இந்துக்கள். இந்த ராஜேந்திரன் ரோமன் கத்தோலிக்கவர். பகலில் உயிர் நண்பர்களாய் இருந்த நாம் அதிகாலையில் மட்டும் எலியும் பூனையுமாய் இருக்க வேண்டிய காலம் எமக்குத் தெரியாமலே எம்மை சூழ்ந்து கொண்டது.

இந்துக்களின் சுவாமியறை ஒரு மண்டபத்தின் வலது கோடியிலும், ரோமன் கத்தோலிக்கத்தவரின் ஜெபி்க்கும் அறை இடது கோடியுலும் இருந்தது. இந்து மாணவதலைவர்கள் என்னிடம் தினமும் பூப்பறித்து சுவாமிப்படங்களை அலங்கரிக்கும் பொறுப்பை தந்த போது ரோமன் கதோலிக்கத்து பூஜையறையை மலர்களால் அலங்கரிக்கும் பொறுப்பு ராஜேந்திரனிடம் கொடுக்கப்பட்டது.

தினமும் யார் முதலில் பூப்பறிப்பது என்று பெரும் போட்டி ஆரம்பமாயிற்று. சிவனே என்று மணியடிக்கும்வரை தூங்கும் கும்பகர்ணனின் தம்பி நான்.  நான் எழும்பும் போது பூக்கள் எல்லாம் ரோமன் கத்தோலிக்க ஜெபமண்டபத்தில் யேசுநாதரையும், புனித மரியாளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கும். முருகனும், சிவபெருமானும் பூக்கள் இன்றி பரிதாபமாய் இருப்பார்கள். இந்த சரித்திர தோல்வியை இந்து மாணவதலைவர்களால் தாங்க முடியாதுபோயிற்று.

என்னிடம் இருந்த பொறுப்பு பறிக்கப்பட்டு பதுளை நண்பர்களிடம் கொடுக்கப்பட்டது. அடுத்த நாள் காலை யேசுவுக்கும், புனித மரியாளுக்கும் பூ இருக்கவில்லை. முருகனில் இருந்து சரஸ்வதி வரை என்று எல்லோரும் பூவினால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள்.

எங்கள் கடவுளின் மானம் காப்பாற்றிய வீரர்களாக எனது பதுளை நண்பனும் அவனின் சகோதரர்களும் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்ட்டார்கள். அவர்களுக்கு உட்சாகம் கரைபுரண்டோடியது.

இந்த தோல்வியை ரோமன் கத்தோலிக்க பக்கத்தில் ஈடு செய்ய நண்பன் ராஜேந்திரன் பணிக்கப்பட்டான். அன்றில் இருந்து  தொடங்கியது பெரும் யுத்தம். யார் முதலில் எழும்புகிறானோ அவன் எல்லா பூக்களையும் பறித்து தனது கடவுளுக்கு படைத்தான். மற்றவன் பூக்கள் தேடி விடுதியை விட்டு அலைய  வெளியே செல்ல வேண்டியேற்பட்டது.

5.30 க்கு எழும்பி பூ பறிக்கும் இவர்களின் போட்டியால் இவர்கள் எழும்பும் நேரம் காலை 5 மணியாகி, பின்பு 4 மணியாகி, அதன் பின்பு 3 மணியாகி இறுதியில்  சாமமாகியது. சாமத்தில் பூக்கள் பூக்காது என்பதால் இவர்கள் பூக்களின் மொட்டுக்களைப் பிடுங்கி தண்ணீரில் போட்டு சாமியறையில் வைக்கத் தொடங்கினார்கள். இதுவே நாளைடைவில் இரவு 10மணிக்கே பாடசாலை எல்லைக்குள் இருந்த நாளை பூக்க வேண்டிய சகல மொட்டுக்களும் பறிக்கப்பட்டு தண்ணீரில் இடப்பட்டு மறுநாள் கடவுள்களுக்கு படைக்கப்பட்டது.

பூக்கள் தேவைப்படாத இஸ்லாமிய நண்பர்களை இருபகுதியினரும் சமமாகப் பிரித்து எடுத்து நீ எங்களுக்கு பூ பறித்து தர வேண்டும் என்ற கூத்தும் சில காலம் நடந்தது. அவர்களும் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வரும் போதெல்லாம் இரு பகுதியினருக்கும் பூக்களை வெளியில் இருந்து கொண்டு வந்தது தந்தனர். மத ஒற்றுமையின் உச்சம் அது.

நான்  மாணவர் தலைவராகி, பின்பு சிரேஸ்ட மாணவ தலைவராக வந்த பின்பும் இதே கூத்து தொடர்ந்தது. நானும் ரோமன் கத்தோலிக்க மாணவர்களை கட்டுப்படுத்தி என் பங்குக்கு என் தெய்வங்களுக்கு பூ பறிக்க வசதிசெய்து கொடுத்‌து புண்ணியம் தேடிக் கொண்டேன்.

ஏறத்தாள 33 வருடங்களின் பின் ஓர் நாள் எனது கல்லூரிக்குள் நுழைந்து எங்கள் கால்களின் தடங்களை தேடி நடந்து கொண்டிருந்தேன். மனம் காற்றிலும் கடுகி 33 வருடங்களைத் தேடி ஓட ஒவ்வொரு இடமும் ஆயிரம் கதை சொல்லிற்று.

மேசையில் சப்பாணி போட்டு இருந்து சங்கீதம் கற்பித்த மகாலிங்கம் மாஸ்டரின் வகுப்பறை, அதனருகே தண்ணீர்ப் பைப், பழைய கன்டீன். கன்டீனின் அருகே ‌அதே பழைய மணியடிக்கும் தண்டவாளத் துண்டு. அதற்கங்கால் விடுதியின்  உணவுச்சாலை, அதற்கப்பால் விடுதியாசிரியர் சுந்திரலிங்கம் அண்ணணின் அறையும், புகை படிந்து கரிய நிறத்திலிருக்கும் குசினி. கழிவு நீர் தேங்கி நிற்கும் கான். அதற்குப் பின்னால் குளிக்கும்  தண்ணீர்த் தொட்டிகள்,  தண்ணீர் டாங்க், கிணறு.

இப்படி எல்லா இடங்களையும் மனதால் நுகர்ந்து திரிகிறேன். என்னைக் கடந்தோடும் இன்றைய மாணவர்கள். அவர்களிடமும் ‌ எம்மிடமிருந்த அதே குறும்பு, குசும்பு, சேட்டைகள். விடுதியின் சுண்ணாம்புச் சுவற்றை தடவி சுகம் காணும் என்னை குறும்புக்கண்களால் அளவெடுத்துப் போகிறார்கள் சிலர். இங்கே படித்தீர்களா? Old boy?  என்று குசலம் விசாரித்தவனின் தலைகோதி புன்னகைத்து தலையாட்டினேன் வார்த்தைகள் ஏனோ வர மறுத்தன.

கெதியில இங்க ”புது பில்டிங்” வருது. பழைய hostel ஐ உடைக்கப்போறாங்களாம் என்றான் அவன். புன்னகைத்து ”தெரியுமய்யா” என்றேன்.

அதிபரின் கந்தோர் கதவினருகே நின்ற போது என்னையறியாது கழுத்து வரை மேற்சட்டை பொத்தான்களை கை தன்னிச்சையாக பூட்டிய பின்பே நான் என்ன செய்கிறேன் என்பது புரிந்து. பாடசாலை நாட்களில் மேற்சட்டை பொத்தான்கள் இன்றி இந்தக் கந்தோருக்குள் உட்புகுவது தற்கொலைக்குச் சமம். அவ்வளவு கடுமையான அதிபர் எமது பிரின்ஸ் சேர். இன்றோ நிலமை வேறு. இருப்பினும்  தன்னிச்சையாக பூட்டப்பட்ட பொத்தான்களை களட்ட விரும்பமின்றி உட்புகுந்தேன்.

கண்ணாடிப் பெட்டியினுள் எமது காலத ”பெரு மண்டபத்தின்” இரு அத்திவாரக் கற்கள் ஞாபக சின்னங்களாய் இருக்க, இன்றைய அதிபர், பெருமையாய் தன் காலத்தில் கட்டப்பட்ட புதிய மண்டபத்தைப் பற்றி விபரித்தர்ர். மகிழ்ச்சியாய் இருந்தாலும் எதையோ இழந்தது போலிருந்தது எனக்கு.

அங்கிருந்து வெளியேறிய போது, போட்டி போட்டு பூப்பறித்த செம்பரத்தை, மல்லிகை, நந்தியாவட்டைப் பூ மரங்களை கண்கள் தேடின. புதிது புதிதாய் பூத்திருந்த சீமெந்துப் பூக்களின் சுவர்களின் மத்தியில் எங்களின் நட்பூக்கள் எமது எதையும் காணக்கிடைக்கவில்லை.

கடந்து ஓடிய மாணவர்களின் வேகத்தில் கிளம்பிய புழுதி மட்டும் பாடசாலையின் வாசனையுடன் இருந்தது.

...........

பூப்பறிப்பதில் கில்லாடியும், அதற்குப் பின்னான காலங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட ”பதுளை நண்பன்”  ஒருவனுக்கு இது சமர்ப்பணம்.
Author: யசோதா.பத்மநாதன்
•4:23 AM


இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பானத்துப் பேச்சுவழக்கு விஷேஷம்.

கணவன்மாரை மனைவிமார் பெயர் சொல்லி அழைக்காத பண்பாடு நிலவிய (2 சந்ததிக் காலத்துக்கு முன்னர் என்று சொல்லலாமோ?) காலத்தில் கணவர்மாரை அழைப்பதற்கும் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் மெய்யே? / கேட்டீரே? என்ற இவ் விழிப்புச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தன.

இவர்கள் காணவர்மாரை இஞ்சரும்!,இஞ்சருங்கோ! என்று அழைக்கும் வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. குழந்தைகள் பிறந்ததும் இஞ்சரும் அப்பா!இஞ்சருங்கோ அப்பா என அது பதவிப் பெயர் கொண்டழைக்கப்படும் வழக்கு இன்றும் இருக்கிறது.(இஞ்சருங்கோ, இஞ்சருங்கோ.... என்று ஒரு பாடலும் உள்ளது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.)

அதற்கு, என்ன சங்கதி? என்றவாறு கணவர்மாரின் பதில் கேள்வி ஆரம்பமாக இப்படியாகச் அவர்களின் சம்பாஷனைகள் தொடரும். ஆனாலும் கணவர்மார் மனைவிமாரின் பெயரைச் சொல்லியோ அன்றேல் அவர்களின் செல்லப்பெயர் / வீட்டுப் பெயர்களைச் சொல்லியோ (பொதுவாக கிளி,ராசாத்தி,செல்லம்,குட்டி,...இப்படியாகச் செல்லப் பெயர்கள் இருக்கும்)அழைக்கும் வழக்கு இருக்கிறது.



என்றாலும் இந்த மெய்யே என்ற சொல் வீச்சு நல்ல அர்த்தம் நயம் தோய்ந்த ஒன்றாகக் காணப்படுகிறது. மெய் என்பதற்கு உடல் என்றொரு அர்த்தமும் உண்டு. கணவன்மாரை மனைவிமார் மெய்யே! மெய்யே!! (உண்மையே! உண்மையே!)என்று கூப்பிட்டதனால் போலும் நீங்களும் நாங்களும் பிறந்திருக்கிறோம்!!

(நேற்றய தினம் (11.02.2012) இவ்வாறான ஒரு கருத்துத் தோய மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்களின் பேச்சைக் கேட்டதன் எதிரொலி இது)
Author: யசோதா.பத்மநாதன்
•6:00 PM


நினைவிருக்கிறதா? சனசமூக நிலையம் என்றும் அதற்கொரு பெயர் இருந்தது.பொதுவாக யாழ்ப்பாணத்துக் கிராமப் புறங்களில் இது இயங்கி வந்தது.கிராமத்து ஆண்களும்பெரும்பாலும் இளைஞர்களும் பத்திரிகை சஞ்சிகை பார்க்கக் கூடும் இடம் என்று மட்டுமில்லாமல் ஊர் புதினம், மற்றும் அன்றாட நிலவரங்கள் கதைக்கும் ஒரு பொது இடமாகவும் அது இருந்தது. சமூகத்தை இணக்கும் ஒரு மையமாகவும் சமூக முன்னேற்றம் அதன் இலக்காகவும் விளங்கியது.

ஆனால்,பெண்கள் அதிகம் அங்கு போனதாகவோ அவர்களின் நடவெடிக்கைகளில் பங்கு பற்றியதாகவோ நான் அறியவில்லை.அது எவ்வாறு ஆரம்பித்தது? எவ்வாறு இயங்கியது? பணம் எங்கிருந்து கிடைத்தது? என்பது பற்றி எனக்கதிகம் தெரியாது.

இந்த ஈழத்து முற்றத்துக்கு வருபவர்கள் உங்கள் உங்கள் பிரதேசத்தில் அது எவ்வாறு தோற்றம் பெற்றது? எவ்வாறு இயங்கியது? என்று கூறினால் நன்றாகவும் அறியாத பல விடயங்களை எல்லோரும் அறிந்ததாகவும் ஒரு வரலாற்றுக் களஞ்சியமாகவும் அது இருக்கும்.

இதற்கான படத்தைத் தேடிக் கொண்டு போன போது சுவாரிசமான வாசிக சாலை அமைப்பாளர் ஒருவரின் நினைவு மீட்டல் கிட்டிற்று. அதனையும் ஒரு வரலாற்றுத் தகவலுக்காக ஈழமுற்றத்து வாசகர்களுக்காகத் தருகிறேன்.

கரந்தன் கலைவாணி வாசகசாலை வரலாறு

எழுபதின் ஆரம்பகாலாப்பகுதி. நான் அப்போது உரும்பிராய் இந்துக்கல்லு}ரியில் உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். படித்துக்கொண்டிருந்தேன் என்பதைவிட படிப்பதாகக் கூறிக்கொண்டு பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தேன் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமானது. வேலை செய்ய வேண்டிய வயதில் வேலை செய்யாது தந்தையாரின் சிறிய வருமானத்தில் வாழ்ந்த காலம். எப்படியிருந்தபோதும் வாய்க்கு உருசியாக அம்மாவின் சாப்பாடு எப்போதும் இருக்கும். நண்பர்களுடனும், என் வயதை ஒத்த நெருங்கிய உறவுகளுடனும் இரவில் நடுச்சாமம்வரை கும்மாளம் அடிப்பதும், யாழ் முற்றவெளியிலும், பரமேஸ்வராக் கல்லுரி மைதானத்திலும் பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் எல்லா உதைபந்தாட்டங்களையும் சென்று பார்ப்பதும், யாழ்ப்பாணத்திலுள்ள சினிமாக் கொட்டகைகளில் திரையிடப்படும் எல்லா திரைப் படங்களையும் தவறாமல் சென்று பார்ப்பதும், உரும்பிராய் கலை வளர்ச்சிக் கழகம் ஒன்று ஆரம்பித்த பின்னர் பல நாடகங்களை நடித்து அரங்கேறுவதிலும் முன்னின்று பொழுதை வீணாக்கிய காலம் என்றும் கூறலாம். எப்படி எப்படியெல்லாம் எமது இளமை நாட்களை இனிமையாகக் கழிக்க முடியுமோ அப்படியெல்லாம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த காலம். ஆனால் ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருந்துகொண்டுதான் இவையெல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தோம்.

அப்போதுதான் எமது கரந்தன் கிராமத்தில் ஒரு வாசகசாலை அமைக்கவேண்டும் என்று என் மனதில் ஓர் ஆசை ஏற்பட்டது. அப்போது கரந்தனில் ஒரு வாசிகசாலை அமைக்கவேண்டும் என்ற பேச்சை எடுத்தாலே அங்குள்ள பெரியவர்களிடம் அடியோ, அல்லது ஏச்சோ வாங்கவேண்டிய ஒரு நிலைமை இருந்தது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.

சில வருடங்களுக்கு முன்னர் கரந்தனில் உள்ள பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வாசகசாலை அமைக்கவேண்டும் என்று திட்டமிட்டார்கள். தற்போது போயிட்டி நோக்கிச் செல்லும் சந்தியில் திரு சின்னையா மாமாவின் காணிக்குள் ஒரு வாசகசாலையை அமைக்க ஆரம்பித்தார்கள். இவர் எனது அம்மாவிற்குத்தான் மாமா. ஆனால் அம்மா அழைப்பதுபோல்தான் சின்னையா மாமா, இராசையா மாமா என்று நாமும் எல்லோரையும் அழைப்போம். திரு.சின்னையா அவர்கள் தியாகதீபம் திலீபனின் பேரனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மட்டும் கடும் மழை பெய்தபோது மரத்துண்களாலும், தென்னை ஓலைகளாலும் வேயப்பட்ட கூரை மட்டும் கொண்ட அந்தக் கொட்டகைக்குள் ஒதுங்கி நின்றதாக ஞாபகம்.

அந்தக் கட்டடம் ஆரம்பமாகிய சில நாட்களுக்குள் திரு சின்னையா அவர்களின் குடும்பத்தில் ஒரு பூகம்பம் வெடித்தது. அவர்களின் குடும்பத்துள் ஏற்பட்ட பகமையால் அவருடைய தங்கையும், திரு இராசையா அவர்களுடைய மனைவியுமான திருமதி சின்னத்தங்கம் இராசையா மாமி திடீரெனத் தற்கொலை செய்துவிட்டார். அந்தச் சோகம், துயரம், அதிர்ச்சி கரந்தனிலிருந்த எல்லோரையும் ஓர் உலுப்பு உலக்கிவிட்டது. இவை எல்லாம் சிறுவனாக இருந்த என் மனதில் ஆழப்பதிந்து இப்போதும் அழியாமல் இருக்கின்றது. அந்தச் சம்பவம் நடந்தபின்னர் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த வாசகசாலை இருந்த இடம்தெரியாமல் போய்விட்டது. அதன் காரணத்தினாலேயே வாசகசாலை கட்டவேண்டும் என்று யாராவது கதைத்தால் உடனே “முன்பு வாசகசாலையைத் தொடங்கி ஒருவரைப் பலி கொடுத்துவிட்டீர்கள், இனி யாரைப் பலி கொடுக்கப்போகிறீர்கள்?” என்று பொதுவாக பெரியவர்கள் எல்லோருமே கேட்பார்கள். அவர் இறந்ததற்கு அந்த வாசகசாலைதான் காரணம் என்றும் கூறுவார்கள். அதனால் பல காலமாக அதனைப் பற்றிப் பேசவே பலர் தயங்கினார்கள்.

இளைஞர்களாகிய எம்மிடம் எதுவித பணமோ, காணியோ, வசதிகளோ இருக்கவில்லை. ஆனால் என் மனதுள் எப்படியாவது ஒரு வாசகசாலை கட்டவேண்டும் என்ற அவா மட்டும் அதிகரித்துக்கொண்டே வந்தது. அப்போது என்னுடன் ஒன்றாகப் படித்த உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த அரியராசா என்ற நண்பர் சுன்னாகத்தில் ஓர் அச்சியந்திரசாலையில் வேலை செய்துகொண்டிருந்தார். ஓர் அதிஸ்டலாபச் சீட்டுப் போட்டால் ஓரளவு பணம் சேர்க்கலாம், அதனை வைத்துக் கொண்டு யாரிடமாவது ஒரு சிறிய காணியை இனாமாகப் பெற்று கட்டட வேலைகளை ஆரம்பிக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அவரிடம் இதுபற்றிக் கதைத்தேன். தான் அதிஸ்டலாபச் சீட்டுக்களை அச்சடித்துத் தருவதாகக் கூறினார். அதற்கு ஆதாயமில்லாமல் செலவு மட்டுமாக நாற்பது ரூபாய்கள் வேண்டும் என்றும் கூறினார். நான் யாருடனும் இதுபற்றிக் கலந்துரையாடவேயில்லை. ஒருவாறு நாற்பது ரூபாய்களைச் சேர்த்து ஆயிரம் ஒரு ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிற அதிஸ்டலாபச் சீட்டுக்களை அச்சடித்து வைத்திருந்தேன்.

எனது நான்காவது மாமா சுந்தரலிங்கம் என்னைவிட மூன்று வயது மூத்தவர் என்றாலும் நெருங்கிய நண்பர் போலவே நாமிருவரும் அப்போது பழகிவந்தோம். இருவரும் ஒரே சாயலையும் அப்போது கொண்டிருந்தோம். அங்கிருந்த இளவயது மங்கையர்களைப்பற்றியும், மற்றையவர்களைப் பற்றியும் தினமும் பல உருசியான கதைகள் கூறுவார். தான் பார்த்துவிட்டு வந்த புதிய சினிமாப்படம் பற்றி ஒன்றும் விடாமல் கூறி எனக்கு நடித்தும், பாடியும் காட்டுவார். இளவயதில் சினிமாப் படம் பார்க்கும் ஆசையையும், பாடல்களில் கூடிய நாட்டத்தையும் ஊட்டியவரும் அவரேதான். அவரிடம் இதுபற்றிக் கூறி ஆலோசனை கேட்டேன். அவரும், எம்முடன் மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே எமது திட்டத்தை இரகசியமாகக் கூறி வைத்தோம்.

ஒருநாள் இரவு ஏழு மணியிருக்கும். நானும் சுந்தரலிங்க மாமாவும் அவர்களது வீட்டில், அதாவது எனது பேரானார் வீட்டிலிருந்த விளக்கை (Petrolmax) கொண்டுவந்து அந்தச் சந்தியில் வைத்தோம். அயலவர்கள் எல்லோரும் என்ன வீதியிலே பெரிய வெளிச்சம் தெரிகிறதே என்ன விசேசம் என்று கேட்டபடி ஒவ்வொருவராக அங்கே வந்து சேர்ந்தார்கள். அதுதான் அப்போதைய வழமை. அப்போதுதான் நான் யாருக்கும் தெரியாமல் அச்சடித்து வைத்திருந்த அதிஸ்டலாபச் சீட்டுக்களைக் காட்டி எமது நோக்கத்தை வெளியிட்டோம். அங்கிருந்த அனைவரும் அதற்கு தமது ஆதரவைத் தருவதாக உடனேயே உறுதியளித்தார்கள். அப்போது தற்செயலாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்த திரு சின்னையா மாமா “என்ன நடக்கிறது?” என்று கேட்டார். நாம் எமது நோக்கத்தைக் கூறியதும் அவர் எதுவுமே பேசாது சென்றுவிட்டார். அவருக்கு பல வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சோக நிகழ்வு மீண்டும் வந்திருக்கலாம்.

அப்போது மலாயன் “பென்சனியர்” திரு பொன்னையா அவர்களின் மருமகனான கதிர்காமதாஸ் அவர்களும், மகனான திரு இராசனேசன் அவர்களும்கூட அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்கள் எம்முடன் அருகருகே வாழ்ந்திருந்தபோதிலும் அதுவரை எம்முடன் நெருங்கிப் பழகியதில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அதுவரை நெருங்கிப் பழகாத கரந்தன் மக்கள் அனைவரும் அன்றிலிருந்து நெருங்கிப் பழக ஆரம்பித்துவிட்டார்கள். அந்த இடத்திலேயே வைத்து ஒரு நிர்வாகக் குழுவை நாம் தெரிவுசெய்தோம். தலைவராக திரு கதிர்காமதாஸ் அவர்களும், காரியதரிசியாக திரு ஜெயவீரசிங்கம் அவர்களும், பொருளாளராக திரு நாகராஜா அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள். உப தலைவர், உப காரியதரிசி, உப பொருளாளர் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். ஆனால் எனக்கு இவற்றில் எதுவித பதவிகளும் கிடைக்கவில்லை. அதனையிட்டு நான் எதுவித கவலை கொள்ளவுமில்லை. கிராமத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுத்தோம். அதுவே எமது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

அப்போது எங்கே இதனைக் கட்டுவது என்று எல்லோரும் கேள்வி எழுப்பியபோது திரு இராசையா மாமா அவர்கள் எழுந்து தான் தனது காணியில் ஒரு பகுதியை அன்பளிப்பாகத் தருவதாகக் கூறினார். அதன்படி வாசகசாலை தற்போது அமைந்திருக்கும் இடம் திரு இராசையா மாமா அவர்களால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அது எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நாம் எல்லோரும் அயல் கிராமங்களாகிய அச்செழு, நீர்வேலி, ஊரெழு, உரும்பிராய், கோப்பாய் போன்ற இடங்களில் வசிக்கும் நண்பர்கள், உறவினர்களிடம் அதிஸ்டலாபச் சீட்டுக்களை விற்றுப் பணம் சேர்த்தோம். இளைஞர்கள், பெரியவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்புத் தந்தார்கள். பலர் அன்பளிப்பாக பெருமளவு பணஉதவியும் செய்தார்கள். சுமார் ஆறு மாதங்களின் பின்னர் அதே சந்தியில் கிராமத்திலிருந்த பெரியவர்களான திரு சிவகுரு, திரு இராசையா, தம்பிப்பிள்ளை போன்றவர்களை அழைத்து அதிஸ்டலாபச் சீட்டுக்களை இழுத்து வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்களைக் கொடுத்தோம்.

கட்டட வேலைகளும் ஆரம்பமாகி குறுகிய காலத்திற்குள்ளேயே வாசகசாலைத் திறப்புவிழாவையும் வெகுசிறப்பாக நடாத்தினோம். அன்று ஓர் ஒலிபெருக்கியை வாடகைக்கு அமர்த்தி வீதிவீதியாக அறிவிப்புச் செய்ய என்னுடன் படித்துக்கொண்டிருந்த நண்பன் திரு குமரேஸ்வரராஜா உதவிசெய்தார். இன்று அவன் எம்முடன் இல்லையே என்று எண்ணும்போது கவலைதான். அன்று அங்கே வாசகசாலையின் முன்னால் இருந்த “கரந்தன் கலைவாணி வாசிகசாலை” என்ற பெயர்ப்பலகை எழுத குறுகிய காலத்தில் யாரும் கிடைக்காததால் அதனையும் நானே எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது. அது மிகவும் அழகாகவும் அமைந்துவிட்டது. அது என்னால் எழுதப்பட்டதென்று எண்ணும்போது இப்போதும் எனக்குள் ஓர் ஆனந்த அலை ஓடுவதாகவே உணர்கிறேன். அன்று அங்கே வாழ்ந்த இளைஞர்கள் அனைவருக்கும் இந்த வாசகசாலைகள் பற்றிய இனிய நினைவுகள் எப்போதும் அழியாது இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

பலருடைய அறிவுப் பசியைப் போக்கும் ஓர் களஞ்சியமாக இது இப்போதும் இயங்கிவருவது கண்டு மனம் மகிழ்கிறேன். நான் இலண்டனுக்கு வருவதற்கு ஆயத்தப் படுத்திக்கொண்டிருந்த காலத்தில் தினமும் அங்கு சென்று இரவு பன்னிரண்டு மணிவரை “தாயம்” விளையாடி மகிழ்ந்ததையும், அப்போது வெளிவந்த வசந்தமாளிகை படத்தை நண்பர்களுடன் சென்று ஐந்து தடவைகள் பார்த்து மகிழ்ந்ததையும் எண்ணிப் பார்க்கிறேன். மீண்டும் 2003 ஆம் ஆண்டு எமது மகளுடன் சென்று அந்த வாசகசாலைக்கு முன்னால் நின்று நிழற்படம் பிடித்தபோது பழைய நினைவுகளெல்லாம் பாய்ந்தோடி வந்ததைத் தடுக்கமுடியவில்லை. இந்த வாசகசாலைக்கும் எனக்கும் உரிய நெருங்கிய உறவுவை எண்ணும்போது என் மனம் பூரிப்படைகிறது. கலைமகள் பெயர் கொண்ட எமது இந்தக் கலைக்கூடம் எப்போதும் அங்கு வருபவர்களுடைய தேவைகளைத் தீர்த்துவைக்க இறைவன் ஆசியருளவேண்டும் என்று பிரார்த்தித்து நானும் வாழ்த்துகிறேன்.

மு.து.செல்வராஜா
இலண்டன். 30.01.2008



திரு.இராசையா

கரந்தன் கலைவாணி வாசகசாலையின் இன்றைய படங்கள்











நன்றி;