Author: யசோதா.பத்மநாதன்
•6:00 PM


நினைவிருக்கிறதா? சனசமூக நிலையம் என்றும் அதற்கொரு பெயர் இருந்தது.பொதுவாக யாழ்ப்பாணத்துக் கிராமப் புறங்களில் இது இயங்கி வந்தது.கிராமத்து ஆண்களும்பெரும்பாலும் இளைஞர்களும் பத்திரிகை சஞ்சிகை பார்க்கக் கூடும் இடம் என்று மட்டுமில்லாமல் ஊர் புதினம், மற்றும் அன்றாட நிலவரங்கள் கதைக்கும் ஒரு பொது இடமாகவும் அது இருந்தது. சமூகத்தை இணக்கும் ஒரு மையமாகவும் சமூக முன்னேற்றம் அதன் இலக்காகவும் விளங்கியது.

ஆனால்,பெண்கள் அதிகம் அங்கு போனதாகவோ அவர்களின் நடவெடிக்கைகளில் பங்கு பற்றியதாகவோ நான் அறியவில்லை.அது எவ்வாறு ஆரம்பித்தது? எவ்வாறு இயங்கியது? பணம் எங்கிருந்து கிடைத்தது? என்பது பற்றி எனக்கதிகம் தெரியாது.

இந்த ஈழத்து முற்றத்துக்கு வருபவர்கள் உங்கள் உங்கள் பிரதேசத்தில் அது எவ்வாறு தோற்றம் பெற்றது? எவ்வாறு இயங்கியது? என்று கூறினால் நன்றாகவும் அறியாத பல விடயங்களை எல்லோரும் அறிந்ததாகவும் ஒரு வரலாற்றுக் களஞ்சியமாகவும் அது இருக்கும்.

இதற்கான படத்தைத் தேடிக் கொண்டு போன போது சுவாரிசமான வாசிக சாலை அமைப்பாளர் ஒருவரின் நினைவு மீட்டல் கிட்டிற்று. அதனையும் ஒரு வரலாற்றுத் தகவலுக்காக ஈழமுற்றத்து வாசகர்களுக்காகத் தருகிறேன்.

கரந்தன் கலைவாணி வாசகசாலை வரலாறு

எழுபதின் ஆரம்பகாலாப்பகுதி. நான் அப்போது உரும்பிராய் இந்துக்கல்லு}ரியில் உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். படித்துக்கொண்டிருந்தேன் என்பதைவிட படிப்பதாகக் கூறிக்கொண்டு பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தேன் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமானது. வேலை செய்ய வேண்டிய வயதில் வேலை செய்யாது தந்தையாரின் சிறிய வருமானத்தில் வாழ்ந்த காலம். எப்படியிருந்தபோதும் வாய்க்கு உருசியாக அம்மாவின் சாப்பாடு எப்போதும் இருக்கும். நண்பர்களுடனும், என் வயதை ஒத்த நெருங்கிய உறவுகளுடனும் இரவில் நடுச்சாமம்வரை கும்மாளம் அடிப்பதும், யாழ் முற்றவெளியிலும், பரமேஸ்வராக் கல்லுரி மைதானத்திலும் பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் எல்லா உதைபந்தாட்டங்களையும் சென்று பார்ப்பதும், யாழ்ப்பாணத்திலுள்ள சினிமாக் கொட்டகைகளில் திரையிடப்படும் எல்லா திரைப் படங்களையும் தவறாமல் சென்று பார்ப்பதும், உரும்பிராய் கலை வளர்ச்சிக் கழகம் ஒன்று ஆரம்பித்த பின்னர் பல நாடகங்களை நடித்து அரங்கேறுவதிலும் முன்னின்று பொழுதை வீணாக்கிய காலம் என்றும் கூறலாம். எப்படி எப்படியெல்லாம் எமது இளமை நாட்களை இனிமையாகக் கழிக்க முடியுமோ அப்படியெல்லாம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த காலம். ஆனால் ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருந்துகொண்டுதான் இவையெல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தோம்.

அப்போதுதான் எமது கரந்தன் கிராமத்தில் ஒரு வாசகசாலை அமைக்கவேண்டும் என்று என் மனதில் ஓர் ஆசை ஏற்பட்டது. அப்போது கரந்தனில் ஒரு வாசிகசாலை அமைக்கவேண்டும் என்ற பேச்சை எடுத்தாலே அங்குள்ள பெரியவர்களிடம் அடியோ, அல்லது ஏச்சோ வாங்கவேண்டிய ஒரு நிலைமை இருந்தது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.

சில வருடங்களுக்கு முன்னர் கரந்தனில் உள்ள பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வாசகசாலை அமைக்கவேண்டும் என்று திட்டமிட்டார்கள். தற்போது போயிட்டி நோக்கிச் செல்லும் சந்தியில் திரு சின்னையா மாமாவின் காணிக்குள் ஒரு வாசகசாலையை அமைக்க ஆரம்பித்தார்கள். இவர் எனது அம்மாவிற்குத்தான் மாமா. ஆனால் அம்மா அழைப்பதுபோல்தான் சின்னையா மாமா, இராசையா மாமா என்று நாமும் எல்லோரையும் அழைப்போம். திரு.சின்னையா அவர்கள் தியாகதீபம் திலீபனின் பேரனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மட்டும் கடும் மழை பெய்தபோது மரத்துண்களாலும், தென்னை ஓலைகளாலும் வேயப்பட்ட கூரை மட்டும் கொண்ட அந்தக் கொட்டகைக்குள் ஒதுங்கி நின்றதாக ஞாபகம்.

அந்தக் கட்டடம் ஆரம்பமாகிய சில நாட்களுக்குள் திரு சின்னையா அவர்களின் குடும்பத்தில் ஒரு பூகம்பம் வெடித்தது. அவர்களின் குடும்பத்துள் ஏற்பட்ட பகமையால் அவருடைய தங்கையும், திரு இராசையா அவர்களுடைய மனைவியுமான திருமதி சின்னத்தங்கம் இராசையா மாமி திடீரெனத் தற்கொலை செய்துவிட்டார். அந்தச் சோகம், துயரம், அதிர்ச்சி கரந்தனிலிருந்த எல்லோரையும் ஓர் உலுப்பு உலக்கிவிட்டது. இவை எல்லாம் சிறுவனாக இருந்த என் மனதில் ஆழப்பதிந்து இப்போதும் அழியாமல் இருக்கின்றது. அந்தச் சம்பவம் நடந்தபின்னர் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த வாசகசாலை இருந்த இடம்தெரியாமல் போய்விட்டது. அதன் காரணத்தினாலேயே வாசகசாலை கட்டவேண்டும் என்று யாராவது கதைத்தால் உடனே “முன்பு வாசகசாலையைத் தொடங்கி ஒருவரைப் பலி கொடுத்துவிட்டீர்கள், இனி யாரைப் பலி கொடுக்கப்போகிறீர்கள்?” என்று பொதுவாக பெரியவர்கள் எல்லோருமே கேட்பார்கள். அவர் இறந்ததற்கு அந்த வாசகசாலைதான் காரணம் என்றும் கூறுவார்கள். அதனால் பல காலமாக அதனைப் பற்றிப் பேசவே பலர் தயங்கினார்கள்.

இளைஞர்களாகிய எம்மிடம் எதுவித பணமோ, காணியோ, வசதிகளோ இருக்கவில்லை. ஆனால் என் மனதுள் எப்படியாவது ஒரு வாசகசாலை கட்டவேண்டும் என்ற அவா மட்டும் அதிகரித்துக்கொண்டே வந்தது. அப்போது என்னுடன் ஒன்றாகப் படித்த உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த அரியராசா என்ற நண்பர் சுன்னாகத்தில் ஓர் அச்சியந்திரசாலையில் வேலை செய்துகொண்டிருந்தார். ஓர் அதிஸ்டலாபச் சீட்டுப் போட்டால் ஓரளவு பணம் சேர்க்கலாம், அதனை வைத்துக் கொண்டு யாரிடமாவது ஒரு சிறிய காணியை இனாமாகப் பெற்று கட்டட வேலைகளை ஆரம்பிக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அவரிடம் இதுபற்றிக் கதைத்தேன். தான் அதிஸ்டலாபச் சீட்டுக்களை அச்சடித்துத் தருவதாகக் கூறினார். அதற்கு ஆதாயமில்லாமல் செலவு மட்டுமாக நாற்பது ரூபாய்கள் வேண்டும் என்றும் கூறினார். நான் யாருடனும் இதுபற்றிக் கலந்துரையாடவேயில்லை. ஒருவாறு நாற்பது ரூபாய்களைச் சேர்த்து ஆயிரம் ஒரு ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிற அதிஸ்டலாபச் சீட்டுக்களை அச்சடித்து வைத்திருந்தேன்.

எனது நான்காவது மாமா சுந்தரலிங்கம் என்னைவிட மூன்று வயது மூத்தவர் என்றாலும் நெருங்கிய நண்பர் போலவே நாமிருவரும் அப்போது பழகிவந்தோம். இருவரும் ஒரே சாயலையும் அப்போது கொண்டிருந்தோம். அங்கிருந்த இளவயது மங்கையர்களைப்பற்றியும், மற்றையவர்களைப் பற்றியும் தினமும் பல உருசியான கதைகள் கூறுவார். தான் பார்த்துவிட்டு வந்த புதிய சினிமாப்படம் பற்றி ஒன்றும் விடாமல் கூறி எனக்கு நடித்தும், பாடியும் காட்டுவார். இளவயதில் சினிமாப் படம் பார்க்கும் ஆசையையும், பாடல்களில் கூடிய நாட்டத்தையும் ஊட்டியவரும் அவரேதான். அவரிடம் இதுபற்றிக் கூறி ஆலோசனை கேட்டேன். அவரும், எம்முடன் மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே எமது திட்டத்தை இரகசியமாகக் கூறி வைத்தோம்.

ஒருநாள் இரவு ஏழு மணியிருக்கும். நானும் சுந்தரலிங்க மாமாவும் அவர்களது வீட்டில், அதாவது எனது பேரானார் வீட்டிலிருந்த விளக்கை (Petrolmax) கொண்டுவந்து அந்தச் சந்தியில் வைத்தோம். அயலவர்கள் எல்லோரும் என்ன வீதியிலே பெரிய வெளிச்சம் தெரிகிறதே என்ன விசேசம் என்று கேட்டபடி ஒவ்வொருவராக அங்கே வந்து சேர்ந்தார்கள். அதுதான் அப்போதைய வழமை. அப்போதுதான் நான் யாருக்கும் தெரியாமல் அச்சடித்து வைத்திருந்த அதிஸ்டலாபச் சீட்டுக்களைக் காட்டி எமது நோக்கத்தை வெளியிட்டோம். அங்கிருந்த அனைவரும் அதற்கு தமது ஆதரவைத் தருவதாக உடனேயே உறுதியளித்தார்கள். அப்போது தற்செயலாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்த திரு சின்னையா மாமா “என்ன நடக்கிறது?” என்று கேட்டார். நாம் எமது நோக்கத்தைக் கூறியதும் அவர் எதுவுமே பேசாது சென்றுவிட்டார். அவருக்கு பல வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சோக நிகழ்வு மீண்டும் வந்திருக்கலாம்.

அப்போது மலாயன் “பென்சனியர்” திரு பொன்னையா அவர்களின் மருமகனான கதிர்காமதாஸ் அவர்களும், மகனான திரு இராசனேசன் அவர்களும்கூட அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்கள் எம்முடன் அருகருகே வாழ்ந்திருந்தபோதிலும் அதுவரை எம்முடன் நெருங்கிப் பழகியதில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அதுவரை நெருங்கிப் பழகாத கரந்தன் மக்கள் அனைவரும் அன்றிலிருந்து நெருங்கிப் பழக ஆரம்பித்துவிட்டார்கள். அந்த இடத்திலேயே வைத்து ஒரு நிர்வாகக் குழுவை நாம் தெரிவுசெய்தோம். தலைவராக திரு கதிர்காமதாஸ் அவர்களும், காரியதரிசியாக திரு ஜெயவீரசிங்கம் அவர்களும், பொருளாளராக திரு நாகராஜா அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள். உப தலைவர், உப காரியதரிசி, உப பொருளாளர் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். ஆனால் எனக்கு இவற்றில் எதுவித பதவிகளும் கிடைக்கவில்லை. அதனையிட்டு நான் எதுவித கவலை கொள்ளவுமில்லை. கிராமத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுத்தோம். அதுவே எமது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

அப்போது எங்கே இதனைக் கட்டுவது என்று எல்லோரும் கேள்வி எழுப்பியபோது திரு இராசையா மாமா அவர்கள் எழுந்து தான் தனது காணியில் ஒரு பகுதியை அன்பளிப்பாகத் தருவதாகக் கூறினார். அதன்படி வாசகசாலை தற்போது அமைந்திருக்கும் இடம் திரு இராசையா மாமா அவர்களால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அது எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நாம் எல்லோரும் அயல் கிராமங்களாகிய அச்செழு, நீர்வேலி, ஊரெழு, உரும்பிராய், கோப்பாய் போன்ற இடங்களில் வசிக்கும் நண்பர்கள், உறவினர்களிடம் அதிஸ்டலாபச் சீட்டுக்களை விற்றுப் பணம் சேர்த்தோம். இளைஞர்கள், பெரியவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்புத் தந்தார்கள். பலர் அன்பளிப்பாக பெருமளவு பணஉதவியும் செய்தார்கள். சுமார் ஆறு மாதங்களின் பின்னர் அதே சந்தியில் கிராமத்திலிருந்த பெரியவர்களான திரு சிவகுரு, திரு இராசையா, தம்பிப்பிள்ளை போன்றவர்களை அழைத்து அதிஸ்டலாபச் சீட்டுக்களை இழுத்து வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்களைக் கொடுத்தோம்.

கட்டட வேலைகளும் ஆரம்பமாகி குறுகிய காலத்திற்குள்ளேயே வாசகசாலைத் திறப்புவிழாவையும் வெகுசிறப்பாக நடாத்தினோம். அன்று ஓர் ஒலிபெருக்கியை வாடகைக்கு அமர்த்தி வீதிவீதியாக அறிவிப்புச் செய்ய என்னுடன் படித்துக்கொண்டிருந்த நண்பன் திரு குமரேஸ்வரராஜா உதவிசெய்தார். இன்று அவன் எம்முடன் இல்லையே என்று எண்ணும்போது கவலைதான். அன்று அங்கே வாசகசாலையின் முன்னால் இருந்த “கரந்தன் கலைவாணி வாசிகசாலை” என்ற பெயர்ப்பலகை எழுத குறுகிய காலத்தில் யாரும் கிடைக்காததால் அதனையும் நானே எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது. அது மிகவும் அழகாகவும் அமைந்துவிட்டது. அது என்னால் எழுதப்பட்டதென்று எண்ணும்போது இப்போதும் எனக்குள் ஓர் ஆனந்த அலை ஓடுவதாகவே உணர்கிறேன். அன்று அங்கே வாழ்ந்த இளைஞர்கள் அனைவருக்கும் இந்த வாசகசாலைகள் பற்றிய இனிய நினைவுகள் எப்போதும் அழியாது இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

பலருடைய அறிவுப் பசியைப் போக்கும் ஓர் களஞ்சியமாக இது இப்போதும் இயங்கிவருவது கண்டு மனம் மகிழ்கிறேன். நான் இலண்டனுக்கு வருவதற்கு ஆயத்தப் படுத்திக்கொண்டிருந்த காலத்தில் தினமும் அங்கு சென்று இரவு பன்னிரண்டு மணிவரை “தாயம்” விளையாடி மகிழ்ந்ததையும், அப்போது வெளிவந்த வசந்தமாளிகை படத்தை நண்பர்களுடன் சென்று ஐந்து தடவைகள் பார்த்து மகிழ்ந்ததையும் எண்ணிப் பார்க்கிறேன். மீண்டும் 2003 ஆம் ஆண்டு எமது மகளுடன் சென்று அந்த வாசகசாலைக்கு முன்னால் நின்று நிழற்படம் பிடித்தபோது பழைய நினைவுகளெல்லாம் பாய்ந்தோடி வந்ததைத் தடுக்கமுடியவில்லை. இந்த வாசகசாலைக்கும் எனக்கும் உரிய நெருங்கிய உறவுவை எண்ணும்போது என் மனம் பூரிப்படைகிறது. கலைமகள் பெயர் கொண்ட எமது இந்தக் கலைக்கூடம் எப்போதும் அங்கு வருபவர்களுடைய தேவைகளைத் தீர்த்துவைக்க இறைவன் ஆசியருளவேண்டும் என்று பிரார்த்தித்து நானும் வாழ்த்துகிறேன்.

மு.து.செல்வராஜா
இலண்டன். 30.01.2008



திரு.இராசையா

கரந்தன் கலைவாணி வாசகசாலையின் இன்றைய படங்கள்











நன்றி;
This entry was posted on 6:00 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On February 9, 2012 at 9:37 PM , இராஜராஜேஸ்வரி said...

கலைமகள் பெயர் கொண்ட எமது இந்தக் கலைக்கூடம் எப்போதும் அங்கு வருபவர்களுடைய தேவைகளைத் தீர்த்துவைக்க இறைவன் ஆசியருளவேண்டும் என்று பிரார்த்தித்து நானும் வாழ்த்துகிறேன்.