Author: ந.குணபாலன்
•12:25 PM

கொண்டல்மரமே! 

கொண்டல்மரமே! கொண்டல்மரமே! சுகந்தானே? 
நாங்கள் கும்பிட்டுக் கொண்டாடுந் தெய்வமே!
கொண்டல்மரத்தாச்சீ !  நீயும் சுகந்தானே?
மீண்டும் வந்துன்னை நேரில்
கண் நிறையக் கண்டு , மனம் ;
வேண்டிக் கும்பிட எனக்கும் வேளை 
எண்டைக்கு வருமோ?
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி !

உடைஞ்ச ஊரும் ,
இடிஞ்ச வீடுகளும், 
புறிஞ்ச உறவுகளுமாக 
குடியழிஞ்ச நாடுமாச்சே!  
தேடித் திரிஞ்சு அலைஞ்சாலும்,
கூடிச்சீவிச்ச சாதிசனத்திலை பாதிசனம்;  
ஓடிப்போன இடம்   ஆர் கண்டது?
கூடி வாழ எங்களை எல்லாம் ஊருக்குக்   
கூட்டி வருவியே?
கொண்டல்மரத்தாச்சி!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி !



ஆரார் எங்கினை இருக்கினம்?
பூவும், பிஞ்சும், காயும் கனியும்;
கொப்பும், கிளையுமாய் ;
வேரோடும்,வேரடி மண்ணோடும்;
பாறிப் பிரண்டு போன 
பூமரம் எது?, மாமரம் எது?
ஆரார் மோசம் போவிட்டினம்?
அள்ளி எடுக்கவும்,
கொள்ளி வைக்கவும்,
ஆளில்லாமல் அனாதையாய்
ஆரார் போக்கறப் போச்சினமோ?
அறுந்துபோன காலம் போட்டு உலைக்க,
ஆரார் ஆய்க்கினை படுகினமோ ?
ஏதிலியாய் எல்லாமே கைபறிஞ்சு
ஆரார் ஏமாந்து சாகினமோ?
அதிட்டம் எண்டு நினைச்சு
அடுத்தவன் நாடு போய்
அல்லல் படுகினமோ? இல்லை
நல்லாயிருக்கினமோ? 
பழைய நடப்பெல்லாமே
மறந்து நடப்படிக்கினமோ?
மறக்கேலாமல் மறுகிச்சாகினமோ?
இல்லை போறபோற வழிவழிய
கடலுக்கும், கண்டந்தாண்டி ,
பனி மலைக்கும்
பனி மழைக்கும்
பசளையாய்ப் போச்சினமோ?
பரமேசுவரி உனக்கென்ன?
பாத்துக்கொண்டு ஒண்டுமே
பறையாமல் இருக்கிறாய்!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!


இம்மளவு ஆய்க்கினை, அவத்தைக்கையும்
அம்மாளாச்சி வாசலுக்கு ஒரு
எட்டு எட்டி வந்து கற்பூரக்
கட்டி ஒண்டு கொளுத்தி மனசாறிக்
கும்பிடேலாமல் கிடக்கே எண்டு 
நாங்கள் தான் ஏங்கி நிண்டம்.
கோயில் மணி உடைஞ்சு போச்சே!
தேரும்,  சூரனும் நொருங்கிப் போச்சே! எண்டு
பிசத்தினதும், பினாத்தினதும் நாங்கள்தான்.
கிட்டக் கிழலைக்கும்,
அண்டாமல், அடுக்காமல்,
எட்ட எங்களை நிக்க வைச்சாய். உனக்கும்
வீட்டுக்காவல் வைச்சாய்!


செய்வினை வைச்சது ஆரெண்டு 
சாமியாடுகிற கோயிலுக்குச்
சாத்திரம் கேட்டுப் போனால்;
சாமி வந்து சன்னதமாடி,
“எல்லாமே என்ரை குஞ்சுதான்!”
எண்டு கூத்தாடும்.
அப்பிடித்தான் ஆச்சி நீயும் 
"கோழியும் எங்கடை, 
புழுங்கலும் எங்கடை"
எண்டு இருக்கிறியே?
அழுந்தி எங்கடை சனம் வதைபட
ஆய்க்கினை வைச்சதெல்லாம், 
உன்ரை சதியோ? தலைவிதியோ?
முன்னை நாங்கள் செய்த கறும வினையோ?
எங்கடை சனம் முண்டி விழுங்கின 
சங்கையீனமும், வேதினையும், வருத்தமும்,
கொஞ்சமோ? நஞ்சமோ?
கொண்டல்மரத்தாச்சீ!


ஆதரிச்சுக் கும்பிட்ட தெய்வம் எண்டு
ஆய்க்கினைப்பட்டு அந்தரிச்ச நேரத்திலைகூட
ஆருமே ஆச்சி உன்னைக் கூப்பிடேல்லையே?
செருக்குப் பிடிச்ச கூட்டமெண்டு எங்களை
சீர் குலைச்சுப் பாக்கிறியே?போன பிறவியிலை 
கறுமவினை செய்த கூட்டமெண்டு எங்களை
கந்தறுந்து போகக் கைவிட்டிட்டியே?
குட்டைபிடிச்சு கறுமப்படும் தெரு
நாய் படாப் பாடுபட
நமக்கு விதிச்சு வைச்சாய்!
நரகத்துமுள்ளு விதைச்சு வைச்சாய்! 


ஆரின்ரை கண்பட்டுது?
ஆர் வைச்ச வினையிது? மனம்
பரிதவிக்க, சதிரம் பதைபதைக்க 
உறவையும், உறுப்பையும், உடமையையும்;
பறி குடுத்த நேரத்திலை,
பலி குடுத்த நேரத்திலை;
ஆர் வந்தவை ஆதரிக்க?
சொந்தமெண்டு நினைச்ச தெய்வமெல்லாம்
சோதினைகள் செய்ததெல்லே?
கையெடுத்த சாமியெல்லாம்,
கல்லாகி நிண்டதெல்லே?
கண்டியே! நமக்கெண்டு வந்த
வெள்ளிடியை? வாழ்மானத்தை?
கண்மூடி நிண்டியே நீயுந்தான்!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!


ஒண்டு மட்டும் பறைவம் கேள்!
"மலையான மலை போச்சாம்
மண்ணாங்கட்டி போனாலென்ன?" 
எண்டு மட்டும் கிடப்பமே?
ஏலாத காரியம் அதெல்லே? எங்களுக்காய்
மாண்டு போன மாணிக்கங்கள் போக;
மசானவெளி தாண்டித் தப்பி 
மீண்டு மிதந்து வந்த எங்கடை
சனமும், இளஞ் சந்ததியும்;
வேண்டி விரும்பி உன்வாசல் வந்து ,
கொண்டாடும் காலம் 
ஒண்டு வரும்! ஏழு கடலும் 
தாண்டி இருக்கிற எங்கடை சனம் 
எல்லாம் வரும்! எதிர்காலமும்
நல்லாய் வரும்!
கொண்டல்மரமே! கொண்டல்மரமே!
நிண்டு நிலைச்சு நீயும் வாழி!
கொண்டல்மரத்திலை குடிகொண்டவளே!
என்னதான் உன்னை நாங்கள்
ஏலாத் தன்மையாலை ஒருநேரம் 
இல்லை நீ சாமி எண்டு ஏசிப் பேசினாலும் 
எண்டைக்கும் எங்கடை மனங்களிலை,
கொண்டகோலம் குலையாமல்
குடிகொண்டவளே! கொண்டல்மரத்தாச்சீ!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!
நிண்டு நிலைச்சு நீடூழி நீயும் வாழி! 

    



சொல்விளக்கம்


எங்கினை-எங்கே
எண்டைக்கு -என்றைக்கு

புறிஞ்ச-பிரிந்த
வருவியே?-வருவாயோ?
பாறி- விழுந்து
பிரண்டு-புரண்டுமோசம் போவிட்டினம்?-மோட்சம் போய் விட்டனர்?(மரியாதைச்சொல்) -இறந்து விட்டனர்?
போக்கறப் போச்சினம்?-போக்கு அறப் போனார்கள்?(ஆற்றாமையுடன் சொல்லுதல்)  -திரும்பி வராமலே போனார்கள்?
படுகினமோ?-படுகிறார்களோ?
கை பறிஞ்சு-கை பறிந்து, இழந்து
சாகினம்?- சாகின்றார்கள்?
அறுந்து போன காலம்-கேடுகாலம்,கெட்டகாலம்
போட்டு உலைக்க-பிடித்து ஆட்ட
பழைய நடப்பு -பழைய நினைவு
நடப்படிக்கினமோ? - மற்றவர்களை விட தான் உயர்ந்தவர் என்று நினைக்கிறார்களோ? 
மறுகிச் சாகினமோ?-மனம் குழம்பிச் சாகின்றார்களோ?
போறபோற வழிவழிய-போகின்ற வழிகளிலே
பசளையாய்-பசளையாகி,
மண்ணுக்கு உரமாகி
ஒண்டுமே பறையாமல்-ஒன்றுமே சொல்லாமல்
இம்மளவு-இந்தளவு
ஆய்க்கினை,அவத்தை-துன்ப துயரம்
அம்மாளாச்சி-அம்மாள்+ஆச்சி
ஒரு எட்டு எட்டி வந்து-ஒரு தரம்  நடந்து வந்து
பிசத்தினதும்-பிதற்றியதும்பினாத்தினதும்-அலட்டினதும்
கிட்டக் கிழலைககும்- அருகிலே
அண்டாமல்,அடுக்காமல்-சேர்க்காமல்

எட்ட நிக்க-தூர நிற்க
"கோழியும் எங்கடை புழுங்கலும் எங்கடை"  - கோழியும் எங்களுடையது (காயப் போட்டிருக்கிற) புழுங்கல் அரிசியும்
    எங்களுடையது" (தின்றால் தின்று விட்டுப் போகட்டும்)

கறுமவினை- கொடிய துன்ப வினை
சங்கையீனம்-அவமானம்
வருத்தம்- நோய்
ஆதரிச்சு கும்பிட்ட-விரும்பி வணங்கிய
கந்தறுந்து-கந்து(பற்றுக்கோடு-வாழ்வாதாரம்)+அறுந்து
கறுமப்படும்- துன்பப்படும்
சதிரம்-சரீரம்,உடல்
கையெடுத்த சாமி- கும்பிட்ட சாமி
கண்டியே?-கண்டாயோ?

வெள்ளிடி- இடி போலுந்துன்பம் 
வாழ்மானம்- மானம் கெட்ட வாழ்வு
மசானவெளி- மயானவெளி 



 
 
This entry was posted on 12:25 PM and is filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On March 9, 2011 at 2:23 PM , யசோதா.பத்மநாதன் said...

பெரியவரே! யாரையா நீங்கள்? இத்தனை நாளாய் உங்களைக் காணாமல் போனோமே!!

தெய்வத்தின் முற்றத்தில் அழுது குரல் கொடுக்கும் தர்மமே!

பொலிந்து சுடர் விடும் என் பாசத் பாசத் தமிழே!

நீதி கேட்டு நடுங்கி அழும் பேனா முனையே!

நீதி நிலை பெறும்! நீதி நிலை பெறும்!!

நம்புவோம்.

 
On March 9, 2011 at 8:28 PM , Anonymous said...

மண் மணம் கமழும் கவிதை !ஆனால் ஈழத்து வட்டார வழக்கு சொற்கள் பிற மக்களுக்கு விளங்கிக் கொள்ள பின் குறிப்பில் இட்டு இருந்தால் இன்னும் தெளிவாக புரிந்து இருக்கும் .......

 
On March 10, 2011 at 12:08 AM , வசந்தா நடேசன் said...

இரண்டாது பத்தியிலிருந்து படிக்க மனம் வரவில்லை.. சோகம் போல் தெரிந்ததால்?? ம்ம்ம், சண்டி, சாமுண்டி, சண்டிகபரமேசுவரி காக்கட்டும்.

 
On March 10, 2011 at 1:20 AM , Pranavam Ravikumar said...

வாழ்த்துகள்.!

 
On March 10, 2011 at 3:16 AM , ஹேமா said...

அழுதேவிட்டேன் வரிகளோடு !

 
On March 10, 2011 at 4:38 AM , கானா பிரபா said...

நட்சத்திர வாரத்தில் ஈழத்துமுற்றத்தின் குழும அங்கத்தினராக அமைந்த உங்கள் பதிவு காத்திரமானது, மிக்க நன்றி, தொடரட்டும்.

 
On March 10, 2011 at 7:36 AM , வடலியூரான் said...

நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கிறீயள்...ஒவ்வொரு வரியிலையும் கனதி தெரிகிறது.....சாமுண்டி.. கொந்தல் மரத்தாள் என்று..சொல்ல எனக்கு எங்கடை ஊரிலை இருக்க்கிற கோட்டுவாசல் அம்மனையோ சொல்லுறியள் எண்டு ஞாபகம் வந்துது

 
On March 10, 2011 at 11:07 AM , ந.குணபாலன் said...

பிள்ளை மணிமேகலை! அடுத்தவன் நாடு போய்மனம் ஒருபக்கம் அல்லல் பட்டாலும் இன்னொரு பக்கம் நல்லாயிருக்கிறவன் நான். நம்பிக்கை தானே நம்மைச் சீவிக்க வைக்கும்? நம்புவோம் நல்லது நடக்கும்.



இராசன்! இக்பால் செல்வன்!அயத்துப் போனதை ஞாபகப் படுத்தினதுக்கு நன்றி.



அம்மா! வசந்தா!மெய்தான் சிலநேரத்தில் எங்கள் மனம் துன்பங்களை பார்க்கக் கேட்க விரும்புவதில்லை.

முடிவிலே நம்பிக்கையை வளர்க்கும் வார்த்தைகளைக் காணலாம்.



இராசன் பிரணவம் ரவிகுமார்! வாழ்த்துக்கு நன்றி!



அம்மா! ஹேமா! சில சில நேரத்திலே மனசு சுமக்கும் பாரத்தை இறக்கி வைக்க ஒரு சுமைதாங்கியை தேடும். எழுத்தாக அது இங்கே வடிந்து இருக்கிறது. உங்கள் கண்ணீரையும் இங்கே துணைக்கு இழுத்திருக்கிறது.



தம்பி பிரபா! மெத்தப் பெரிய உபகாரம்; உமது உதவிக்கு. படலையைத் திறந்து வரவேற்றதற்கு.



அப்பன் வடலியூரான்! மெய்தான் நான் பருத்துறையான் தான்.

 
On March 10, 2011 at 2:00 PM , வந்தியத்தேவன் said...

ம்ம்ம் மனதில் உள்ளதை குமுறியிருக்கின்றீர்கள், எமக்கு எத்தனை கடவுள்கள் இருந்தென்னா எல்லாக் கடவுளும் எம்மைக் கைவிட்டுவிட்டார்கள். இத்திமரத்தாள் என நெல்லண்டை பத்திரகாளி அம்மனை அழைப்பார்கள்.