Author: வந்தியத்தேவன்
•10:25 PM
பாடசாலை லீவு விட்ட ஒரு சித்திரை வெயில் நாள்.
"டேய் வந்தி வந்தி" யாரோ ஒரு கூட்டாளி எங்கடை வீட்டு படலைக்கு வெளியே நின்று கூப்பிட்டான்.

"லீவு விட்டால் போது உடனே வந்திடுவாங்கள்" எனப் புறுபுறுத்தபடி அம்மா
"தம்பி உவன் பிரபாபோல கிடக்கு, கிரிக்கெட் அது இது எனக் கேட்பான் போய்விடாதை" என்றார் அம்மா.

"சும்மா இரணை லீவுக்கை விளையாடாட்டில் பிறகு ஏனனை லீவு" என்றபடி பேட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தால் பிரபா, வர்மா, வடலி, கிருத்தி என ஒரு குறூப்பே விக்கெட்டுகள் டெனிஸ் போலுகள் என மேட்சுக்கு ரெடியாக இருந்தார்கள்.

"யாரோடை மச்சான் இண்டைக்கு மட்ச்? " வந்தி

"வேறை யாரோடை வழக்கம்போல பக்கத்து ஊர்க்காரன்களுடன் தான் நேற்று எங்கடை கிரவுண்டிலை தோற்றபடியால் இண்டைக்கு அவங்கடை கிரவுண்டுக்கு வரட்டாம் " வடலி

"உவங்களுக்கு வேறை வேலை இல்லை எப்படியும் வெல்லும் வரை மேட்ச்சுக்கு கேட்பான்கள்" கிருத்தி

"பொறடா இந்த முறை உவங்களுக்கு நல்ல அடி கொடுத்தால் அடங்கிவிடுவான்கள் பிறகு கொஞ்ச நாளைக்கு வரமாட்டார்கள்" வர்மா

இப்படித்தான் எங்கடை கிரிக்கெட் பொழுது விடியும். எங்கடை ஊர்களிலை எந்த விளையாட்டுக்கும் பருவகாலம் என்பதே கிடைக்காது. கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் கிரிக்கெட், கால்பந்து எல்லாம் விளையாடியிருக்கின்றோம்.

பள்ளிக்கூடம் லீவு விட்டால் போதும் கிரிக்கெட் மட்டையுடன் கிரவுண்டில் நிற்பதுதான் எங்கள் தலையாய வேலையே. கொஞ்சம் வயசு போனதுகள் எம்மைப் பார்த்தால் உந்தகிளைமாரிகளுக்கு விடிஞ்சால் பொழுதுபட்டால் உதுதான் வேலை வெயில் குடிக்கிறதுக்கென்றே வந்து நிற்கின்றார்கள் என்பார்கள். குறிப்பாக கிரவுண்டைச் சுத்தி இருக்கின்ற வீட்டுக்காரர்களுக்கு நாங்கள் கொடுக்கின்ற கரைச்சல் பல, தண்ணி குடிக்க போறது, பந்து அவர்கள் முற்றத்தில் போனால் எடுக்கபோறது. சிலர் பேசாமல் இருப்பார்கள் சிலர் கொஞ்சம் புறுபுறுப்பார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரை ஊருக்கு ஊர் விளையாடும் விளையாட்டுகள் வேறுபடும். சில ஊர்கள் கால்பந்துக்கு பெயர் போனவை சில ஊர்கள் கிரிக்கெட்டுக்கு பெயர் போனவை. உலகக்கோப்பைப் போட்டிகள் நடப்பதால் எங்கடை ஊரிலை நாங்கள் ஆடிய கிரிக்கெட் பற்றிச் சில சுவாரசியங்கள்.

எங்கடை ஊரிலை பக்கத்து ஊர்க்காரர்களுடன் விளையாடுவது எமக்குள் நாமே கன்னை புறிச்சு விளையாடுவது என பலவகையாக கிரிக்கெட் விளையாடுவோம். பக்கத்து ஊர் கழகங்களுடன் விளையாடும் போது போட்டியில் சூடு பறக்கும் சிலவேளைகளில் விக்கட், துடுப்பால் அடிபாடு கூட நடக்கும். ஆஷாஸ் தொடர், காவஸ்கர் போர்டர் தொடர் எல்லாம் எங்களுக்குத் தெரியமுன்னரே (அதாவது உலக அறிவை வளர்க்கமுன்னரே)பக்கத்து ஊர்க்காரர்களுடன் நாங்கள் தொடர்போட்டிகள் விளையாடி இருக்கின்றோம்.

முதலில் எத்தனை போட்டிகள் எங்கே விளையாடுவது என்பது தீர்மானிக்கப்படும். அவர்களின் கிரவுண்டில் 3 போட்டி என்றால் எங்கடை கிரவுண்டிலை 3 போட்டி என எமக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் போடப்படும். ஏற்கனவே இரண்டு கிரவுண்டிலையும் விளையாடி ஏதும் பிரச்சனைகள் நடந்தால் இரண்டு டீமுக்கும் பொதுவான கிரவுண்டில் போட்டி நடத்துவது என தீர்மானம் போடப்படும்.

அடுத்த பிரச்சனை அம்பயர் அடிக்கடி எல்பி கொடுக்காத வெறுமனே போலர் வீசுகின்ற போலை எண்ணவும் அவுட் என்றால் கையைத்தூக்கவும் பவுண்டரிக்கு கையை விசுக்கவும் தெரிந்தவராக இரண்டு தலையாட்டிப் பொம்மைகள் அம்பயராக இருந்தால் போதும் ஆனால் சிலவேளை எங்கடை ஆட்களே நாங்கள் பேட் பண்ணும் போது அம்பயராகவும் அவங்கடை ஆட்கள் அவங்கள் பேட் செய்யும் போது அம்பயராகவும் தலையாட்டுவார்கள் ச்சீ கடமையாற்றுவார்கள். எப்பவாவது ஒரு நாளைக்கு இரண்டு டீமுக்கும் பொதுவான அம்பயர் கடமை ஆற்றுவார். பெரும்பாலும் வன் டவுனாக வருபவன் அம்பயராக கடமையாற்றுவான் தான் அடிக்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாற்றில் இரண்டு மூன்று முறை எல்பி கொடுக்காமல் நான்காவது முறை கொடுத்துவிட்டு அவுட்டானவனிடம் உனக்கு 3 தரம் நான் கொடுக்கவில்லை திரும்ப திரும்ப கொடுக்காமல் விட்டால் அது பிழை என அரிச்சந்திரனின் பக்கத்துவீட்டுக்காரன் போல லெக்சரடிப்பான். அவுட்டானவன் அம்பயராகி அவனைப் பழிக்கு பழிவாங்கிய கதையும் நடக்கும்.

இதெல்லாம் பேசி முடிச்ச பின்னர் எத்தனை ஓவர், யார் பந்து கொண்டுவருவது, யார் பட் கொண்டுவருவது எல்லாம் நிர்ணயித்து போட்டி நடக்கும் நாள், நேரம் எல்லாம் முடிவு செய்யப்படும்.

போட்டி தொடங்கும் போது ஸ்கோர் போடும் அணியினருக்கு பக்கத்தில் மற்ற அணியின் பீல்டிங் செய்யாத ஒருவர் அல்லது ஒரு தவ்வலை பக்க‌த்தில் இருத்திவிடவேண்டியதுதான், அவனின் கடமை கள்ளரன்ஸ் போடாமல் கவனமாக ஸ்கோர் பதிவாகின்றதா என்பதை அவதானிப்பது. இதிலை சிக்கல் என்னவென்றால் பெரும்பாலும் சின்னப்பொடியளை இதற்கு நியமிப்பதால் அவனுக்கு மாங்காயோ நெல்லிக்காயோ லஞ்சமாக கொடுத்து எப்படியும் ஒரு இருபது இருபத்தைஞ்சு ரன்ஸ் கள்ள ரன்ஸாக இருக்கும். ஒரு சில ஸ்கோர்போடுபவர் மட்டும் நேர்மை நீதி நியாயமாக இருப்பார்கள். தோற்கின்ற நிலை வந்தால் கள்ள ரன்ஸ் உறுதியாக போடப்படும்.


ட்வெண்டி ட்வெண்டி வரமுன்னரே அதனை விளையாடிய பெருமை எமக்கு உண்டு, பெரும்பாலும் அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட போட்டியே நாங்கள் விளையாடுவது. நல்லா விசுக்க கூடியவர்கள் ஓப்பனராக இறங்குவார்கள். இதிலை ஒரு சிக்கல் ஓப்பனராக இறங்குகின்றவன் தனக்காக பீல்டிங் நேரத்தில் தனக்காக இன்னொருவனை அலையவிட்டுவிட்டுப் போய்விடுவான். நானும் கிரிக்கெட் விளையாடினான் எனச் சொல்லும் சின்னப்பொடியள் அந்தக் கடமையை சிவனே என செய்வார்கள்.

மற்றும்படி ரூல்ஸ் எல்லாம் வழக்கமான கிரிக்கெட் தான். என்ன ஒரு பக்கம் விக்கெட் இருக்கும் பெயில்ஸ் இருக்காது மற்றப் பக்கம் ஓரு கல்லு. ரன் அவுட்டாக்குவதற்க்கு அந்தக் கல்லில் பந்தைக் குத்தினால் சரி, சிலவேளை போலர் காலை கல்லில் ஊண்டிக்கொண்டு பந்தைப் பிடித்தால் அவுட் தான்.

இன்னொரு முக்கியமான பிரச்சனை இருக்கு போட்டி முடிஞ்ச பின்னர் தோத்த அணியினரின் கையெழுத்தை வென்ற அணி தங்கடை ஸ்கோர் போட்ட கொப்பியில் வாங்கவேண்டும், பெரும்பாலும் தலைவர் என எவரும் இல்லாதபடியால் யாருமொரு அப்பாவியின் கையெழுத்தை வாங்கிவிடுவார்கள், உப்பிடித்தான் ஒருக்கால் என்னெட்டை கையெழுத்தை வாங்க எங்கடை டீமில் இருக்கும் ஒரு அண்ணை "டேய் உவங்கள் அலாப்பி வென்றுவிட்டார்கள் சைன் வைக்காதை" என்றான் ஆனாலும் அவங்கள் என்னை வளைஞ்சுப் பிடித்துவிட்டார்கள் நானும் என்ன செய்வது என விளங்காமல் கையெழுத்தை வைத்துவிட்டு வந்துவிட்டேன் எங்கடை குறுப்போ எனக்கு ஒரே ஏச்சுத்தான், நான் சிரித்துக்கொண்டு "நான் என்ன பேயனா என்டை சைனை வைக்க நான் சும்மா ஒரு பெயரைக் கிறிக்கிவிட்டு வந்திடேன்" என்றேன், இப்படியான மோசடிகளில் இருந்து தப்ப சைனுடன் கீழே பெயரை எழுதவேண்டும் என்ற கட்டாயம் சில இடங்களில் இருந்தது.

எதிரணியினர் தொடரில் தோற்றால் அடுத்த தொடருக்கு பரப்பளவு குறைந்த வெட்டைகளை தேர்ந்தெடுப்பார்கள். அடுத்த மேட்சைப் பற்றிப் பேசும் போது இந்த முறை தங்கத்தான் வெட்டையில் தான் விளையாடவேண்டும் என்பார்கள். தங்கத்தான் வெட்டை என்பது ஒரு சின்ன வெளியான காணி சுத்தவர பனை மரம் எல்லாம் வளர்ந்து நிக்கும். பந்து பனையில் பட்டு பிடிச்சால் அவுட் போன்ற ஐசிசிக்கு தெரியாத புது ரூல்ஸ் எல்லாம் அங்கே உருவாகும். சின்ன இடம் என்பதால் சிக்சர் சிக்சராக அடிக்கலாம். இதேபோல் சிலவேளைகளில் தோட்டத் தறைகளில் எல்லாம் அங்கே எந்தப் பயிரும் இல்லையென்றால் போட்டி நடக்கும். செம்மண் தோட்டத்தில் விளையாடினால் உடுப்பெல்லாம் ஊத்தையாகிவிடும். வீட்டிலை அம்மாட்டை ஏச்சு தான் வாங்கவேண்டும் என சிலர் தோட்டத்தில் விளையாட வர மறுத்துவிடுவார்கள்.

இதை விட எங்கடை ஊருக்குள்ளையே இரண்டாக அணி பிரிச்சு விக் மேட்ச் நடத்துவது வழக்கம். இது ஒரு சனிக்கிழமையில் தான் பெரும்பாலும் நடைபெறும், காரணம் ஞாயிற்றுக்கிழமையில் பலர் சைவ உணவு என்பதால் சனிக்கிழமை வைத்தால் தான் இறைச்சி வாங்கிக் காச்சி பாணுடன் சாப்பிடலாம்.

போட்டிக்குச் சில நாட்களுக்கு முன்னரே விளையாடுகின்ற பொடியளிடம் காசு வாங்கி ஆயத்தம் எல்லாம் நடக்கும். வாங்குகின்ற காசில் தான் இறைச்சி, பாண் எல்லாம் வாங்கவேண்டும். கிரிக்கெட் விளையாடுவதை விட இறைச்சியும் பாணும் சாப்பிடுவதுதான் முக்கியம். வீரர்கள் வெள்ளை ஜீன்ஸ் வெள்ளை ரீசேர்ட் எல்லாம் போட்டு ரியலான டெஸ்ட் மேட்ச் போலவே வெளிக்கிட்டு வருவார்கள். ஸ்பீக்கர் எல்லாம் கட்டி நேர்முக வர்ணனைகூட நடக்கும்.

"முழுவேகத்துடன் வீசப்பட்ட அந்தப் பந்தை சுபாங்கன் பைன் லெக்கில் அடித்து நான்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். "

"மாயாவின் துடுப்பில் பட்ட பந்து நேராக விக்கட் காப்பாளரிடம் செல்கின்றது, மாயா ஆட்டம் இழக்கின்றார்"

இப்படி அழகுதமிழில் வியூகம் அமைத்த இடங்கள் மாத்திரம் ஆங்கிலத்துடன் வர்ணணை நடக்கும்.

இந்த போட்டியைப் பார்க்க எப்படியும் பார்வையாளர்கள் வருவார்கள். குறிப்பாக பெண்கள் வந்தால் சிலருக்கு கொண்டாட்டம் அடி அடி என அடிப்பார்கள். அதிலும் அவரின் மனதுக்குப் பிடித்தவர் அந்த கூட்டத்தில் இருந்தால் சிக்சர் எல்லாம் பறக்கும் சிலவேளை சிக்சரடிக்கப் போய் அவுட்டான சோகமும் நடந்திருக்கின்றது.

ரியூசனுக்கு ரியூசன் கூட விளையாடி இருக்கின்றோம். எங்கடை ரியூசன் வென்றால் அண்டைக்கு ஒரே ஆர்ப்பாட்டம் தான் எல்லாம் கூடப் படிக்கின்ற பெட்டையளுக்கு கலர்ஸ் காட்டத்தான். தோத்துப்போய் வந்தால் அவை எங்களை நக்கலடிப்பார்கள். யாரோ ஒரு உளவாளி என்ன ஸ்கோர் யார் டக்கவுட்டானான் யார் கேட்ச் விட்டான் என சகலதையும் சொல்லிவிடுவான். எல்லாத்தையும் சொல்லி சொல்லியே நக்கலடிப்பார்கள், ஆனாலும் எமக்கு வெட்கம், மானம் ரோஷம் எதுவும் இல்லாதபடியால் நாமும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

இப்படித்தான் எங்கடை கிரிக்கெட் வாழ்க்கை ஒரு காலத்தில் இருந்தது.மீண்டும் ஊருக்குப் போய் கிரிக்கெட் விளையாட ஆசை நடக்குமா? ம்ம்ம் அது ஒரு கனாக் காலம்.



சொல் விளக்கம்
பெரும்பாலன சொற்கள் ஏற்கனவே ஈழத்துமுற்றப் பதிவுகளில் இருந்தாலும் புதிய வாசகர்களுக்காக இந்த விளக்கம்.

கூட்டாளி - நண்பன்
படலை - Gate பெரும்பாலும் வேலி உள்ள வீடுகளுக்கு படலை தான் இருக்கும் இதுவும் பனை ஓலை அல்லது கிடுகால் அமைந்திருக்கும், சில இடங்களில் தகரத்திலும் இருக்கும்.
புறுபுறுத்தல் சத்தம் வெளியே வராமல் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தல்
கிளைமாரி வேலைவெட்டி இல்லாமல் ஊர் சுத்தும் இளைஞர்கள்
கன்னை - குழு
புறி - பிரிப்பது
எல்பி - LBW எல்பிடவுள்யூவைத்தான் சுருக்கமாக எல்பி
தவ்வல் - சின்னப் பையன்
கள்ள ரன்ஸ் - களவாக போடப்படும் ஓட்டம்
விசுக்குதல் - அதிரடியாக ஆடுதல்
அலையவிடுதல், அலைதல் - பீல்டிங் செய்தல்
அலாப்பி - ஏமாத்தி விளையாடுதல்
ஏச்சு - திட்டுதல்
வெட்டை - சிறிய மைதானம்
தோட்டத் தறை - தோட்டம் செய்யும் நிலம்
ஊத்தை - அழுக்கு
விக் மேட்ச் - பெரிய அளவில் ஆடும் கிரிக்கெட்
பாண் - Bread இதைப் பற்றிய பதிவே ஈழத்துமுற்றத்தில் இருக்கின்றது
கலர்ஸ் காட்டுதல் - பந்தா பண்ணுதல்

படங்கள் இலங்கை வலைப் பதிவர்கள் கிரிக்கெட் போட்டியில் இருந்து எடுக்கப்பட்டவை
This entry was posted on 10:25 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On March 9, 2011 at 11:30 PM , Subankan said...

பிறகென்ன, வந்தியண்ணர் பிரிச்சு மேஞ்சிருக்கிறார். சின்ன வெட்டையளுக்க விளையாடேக்க பக்கத்துக் காணிக்கை அடிச்சா அவுட், அடிச்சவன்தான் பந்து பொறுக்கப் போகோணும் போன்ற ஐ.சி.சி விதிகளையும் சேர்த்திருக்கலாம்:)

 
On March 9, 2011 at 11:30 PM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

கன்னை என்ற சொல் ரொம்ப நல்லா இருக்கு..

 
On March 10, 2011 at 12:04 AM , வசந்தா நடேசன் said...

விரைவில் இன்னொரு ‘முரளி‘ கிரிக்கெட் உலகிற்கு வரட்டும், வாழ்த்துக்கள்.

 
On March 10, 2011 at 2:00 AM , சஞ்சயன் said...

”தம்பி உவன் பிரபாபோல கிடக்கு, கிரிக்கெட் அது இது எனக் கேட்பான் போய்விடாதை" என்றார் அம்மா””

உங்க அம்மாட நேர்ம எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு!

அம்பாயருக்கு பக்கத்தூரானை அழைத்துவந்து அவருக்கு புரியாணி பார்சல் கொடுத்தும் நாங்கள் வென்றிருக்கிறோம்.

காசு கொடுத்து வாங்கிற பட் அடிக்காது. ஒரு பலகையை எடுத்து தேங்காய் உடைக்கிற கத்தியால கைபிடி செய்து அதை சீமெந்து நிலத்தில உராந்து உராய்ந்து வட்டவடிவமாக்கி கோயிலுக்கு கொண்டு போய் திருநீறு பூசிபொட்டு வைத்து அடித்தால் காளிஆச்சி சத்தியமா சிக்கர் தான். வீட்ட வந்த எங்கடா அந்த பலகை என்று அப்பர் தார சிக்சர் வேற..

 
On March 10, 2011 at 4:09 AM , கானா பிரபா said...

;) உலகக்கோப்பை நேரத்தில் இப்படி ஒரு கொலை வெறிப்பதிவா

ரசித்தேன் ருசித்தேன் ஒரே ரத்தம் வந்தி ;)

 
On March 10, 2011 at 5:15 AM , ரசிகை said...

கிரிக்கெட்டிலும் பெண்களை வம்புக்கு இழுக்காவிட்டால் வந்தியருக்கு நித்தா வராதோ...

 
On March 10, 2011 at 8:47 AM , யோ வொய்ஸ் (யோகா) said...

2ம் படத்தில் அதிவேகபந் வீச்சாளரின் ஒருவரின் படத்தை போட்டு இருக்கிறீகள்... அது நாமதான்

பதிவை ரசித்தேன்

 
On March 10, 2011 at 8:56 AM , ஷஹன்ஷா said...

ஃஃஃரியூசனுக்கு ரியூசன் கூட விளையாடி இருக்கின்றோம். எங்கடை ரியூசன் வென்றால் அண்டைக்கு ஒரே ஆர்ப்பாட்டம் தான் எல்லாம் கூடப் படிக்கின்ற பெட்டையளுக்கு கலர்ஸ் காட்டத்தான். தோத்துப்போய் வந்தால் அவை எங்களை நக்கலடிப்பார்கள். யாரோ ஒரு உளவாளி என்ன ஸ்கோர் யார் டக்கவுட்டானான் யார் கேட்ச் விட்டான் என சகலதையும் சொல்லிவிடுவான். எல்லாத்தையும் சொல்லி சொல்லியே நக்கலடிப்பார்கள், ஆனாலும் எமக்கு வெட்கம், மானம் ரோஷம் எதுவும் இல்லாதபடியால் நாமும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஃஃஃ

அப்பட்டமான உண்மை...இதை படிக்கும் போதுதான் வெட்கம் வருது....!

அப்படியே யாழ்ப்பாண கிரிக்கட்டை பதிவாக்கியமை மகிழ்ச்சி...

இன்னும் சில விதிகள் இருக்கின்றனவே..ஆக்கள் குறைவு எண்டா ஓஃவ்வில மட்டும் அடிப்பது முதலிய விதிகள்..!!

 
On March 10, 2011 at 2:14 PM , யசோதா.பத்மநாதன் said...

எதிர்கால முரளி முதல் படத்தில பந்தோட நிக்கிறார் போல இருக்கு!:)

 
On March 11, 2011 at 3:14 AM , Tharsan said...

ம்ம்ம் நல்லதொரு விளையாட்டுப்பதிவு.. கன்னை பிரிக்கிறது எண்டதை யாரி பிரிக்கிறது எண்டும் சொல்லுறது தானே வந்தியண்ணா?.மற்றது உப்புடித் தான் நாங்களும் ரியூசனுகளுக்களிடையிலை எல்லாம் மாட்ச் விளையாடிறது.கனதரம் நாங்களும் வைக்கிறம்,எல்லா ரீமும் 50, 100 /= தாங்கோ.. வெண்டால் ஒரு கொக்கப்புறா Man of the series .க்கு ஒரு டெனிஸ் போல் எண்டெல்லாம் அறிவிச்சு, நாங்கள்தான் கப் அடிக்கலாம் எண்ட நினைப்பிலை, ஆர்ப்பாட்டமாத் தொடங்கிப்போட்டு, பிறகு நாங்கள் தோத்தவுடனை டூர்னமனரை குழ்ப்பியடீசுக் கொண்டு போறனாங்கள்

 
On March 12, 2011 at 3:02 AM , மாதேவி said...

ஊர் கிறிக்கட் என்றால் சும்மாவா உலகக்கோப்பையையும் மிஞ்சிவிட்டது.))