Author: Subankan
•4:49 PM

சிறுவயதில் ஒருநாள் அம்மாவுடன் இருந்து வானொலி கேட்பதற்காய் வானொலியைத் திருகியபோதுதான் ஈழத்துச்சதன் முதன்முதலாய் எனக்கு அறிமுகமானார். விதம்விதமான குரல்கள் கேட்டுக்கொண்டிருக்க அது என்ன என்ற எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க பெரும்பாடுபட்டார் அம்மா. இந்தியத் தொலைக்காட்சிகள் எதுவுமே அறிமுகமாகியில்லாத காலத்தில் ‘மிமிக்ரி’ என்ற சொல் அவருக்குத் தெரிந்திருக்கவில்லையாயினும், மிமிக்ரி என்றால் என்ன என்பது அன்று எனக்குப் புரிந்துபோனது. அவரது விளக்கத்தில் இருந்த ஈழத்துச்சதன் என்ற பெயரும் அதன் வித்தியாசத்தன்மை காரணமாக மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டது.

அதன்பிறகு அவரது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்குக்கூட சந்தர்ப்பங்கள் ஏதோ அதிஷ்டத்தில்தான் அமைந்தாலும் அவரது நிகழ்ச்சியை முதன்முதலில் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் கழித்துத்தான் கிடைத்தது. பாடசாலையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவரது நிகழ்ச்சிக்கு ஐந்து ரூபா டிக்கெட் எடுத்து அடித்துப்பிடித்து ஓடிப்போய் முன் வரிசைகளில் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு அவரது உருவம் என ஒன்றை மனதில் கற்பனை செய்துகொண்டு காத்திருந்தபோது அங்கே வந்த குள்ளமான அந்த மனிதரை “’இவர்தான் ஈழத்துச்சதன்” என்று அருகிலிருந்து ஏமாற்றமளித்தான் அவரை ஏற்கனவே அறிமுகமான நண்பன் ஒருவன்.

பறவைகள், விலங்குகள் என்று பலவற்றையும் தனது வாய்மொழியால் மட்டுமல்ல, உடல்மொழியாலும் அன்று கண்முன் கொண்டுவந்திருந்தார் ஈழத்துச்சதன். அங்குமிங்கும் தாவி குரங்குச்சேட்டைகளை நிகழ்ச்சினார். அங்கு குரங்குகள் பேன் பார்த்தன. யானைகள் பிளிறின. காட்டு விலங்குகள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டன. எங்கள் ஆண்கள் பாடசாலையில்கூடப் பெண்கள் ஒன்றுகூடிச் சிரித்துக்கொண்டார்கள். சனிக்கிழமைகளில் எள்ளுச்சாதம் வைத்துவிட்டுக் காட்டுக்கத்தல் கத்தினாலும் எட்டிக்கூடப் பார்க்காத காகங்கள் எல்லாம் அவரது ‘கா கா’ என்ற குரலுக்கு நூற்றுக்கணக்கில் மண்டபத்தை முற்றுகையிட்டுக்கொண்டன. இத்தனைக்கும் அவர் கையில் ஒலிவாங்கி என்பதே கிடையாது. அது அவருக்குத் தேவையும் கிடையாது.

அவர் அன்று நிகழ்த்தியவைகளுள் எனக்கு இன்னும் மறக்காமல் இருப்பது மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள். ஒருவகையில் எமது அடையாளமாகவே பார்க்கப்பட்ட ஒன்று. போச்சியால் சிறிது தினரை ஊற்றி வாயால் ஊதிவிட்டு சொக்கை இழுத்து கிக்கரை சிலமுறை உதைந்துப் ‘இஞ்சின் பிடிக்காமல்’ போகவே மீண்டும் போச்சி- தினர்- கிக்கர், இம்முறை படபடவென பெரிய சத்தத்துடன் ஸ்டார்ட் ஆகி ஒருமுறை சுற்றிவர மண்டபம் முழுவதும் கரும் புகை நிரம்பி கைதட்டலில் கரைந்தது.

ஈழத்துச்சதன் எம்முடனேயே வாழ்ந்த ஒரு அற்புதமான கலைஞன். எமக்கு அன்றிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களாலும் வானொலி நிகழ்ச்சிகளிலும், மேடைகளிலும் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டு பெரிதாகக் கவனிக்கப்படாமலேயே கடந்துபோனவர். இன்று தொலைக்காட்சிகளில் அசத்திக்கொண்டும், கலக்கிக்கொண்டும், சிலவேளைகளில் கடுப்பேற்றிக்கொண்டும் இருக்கும் கலைஞர்களைப் பார்க்கும்போது ஈழத்துச்சதனின் ஞாபகமும் வந்துபோகும்.

எவ்வளவு தேடியும் ஈழத்துச்சதனின் புகைப்படம் ஒன்றுகூட இணையத்தில் தட்டுப்படவில்லை. இணையத்தில் ஏறும் எல்லாமே நிரந்தரம் என்றார் சுஜாதா. அந்த நிரந்தரத்தன்மை ஈழத்துச்சதனுக்கு எழுத்தில் மட்டும்தான் வாய்த்திருக்கிறது போலும்.

ஈழத்துச்சதன் – வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட (பிர)தேசத்தில் வாழ்த்து, இப்போதும் எம் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புதமான கலைஞன்.

This entry was posted on 4:49 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On March 11, 2011 at 2:10 AM , Pranavam Ravikumar said...

Good write!

 
On March 11, 2011 at 6:16 AM , கானா பிரபா said...

ஈழத்துச் சதன் பற்றி நண்பர் கதியால் உம் எழுதியிருந்தார்.உங்களின் தனித்துவமான பகிர்வும் அருமை. இவரின் நிகழ்வு ஒன்றை நானும் பாடசாலையில் நேரடியாகக் கண்டு வியந்திருக்கிறேன்

 
On March 11, 2011 at 6:32 AM , Ajith said...

எனது அழிந்த நினைவை மீட்டிய அருமையான பதிவு . . .

 
On March 12, 2011 at 1:03 AM , யசோதா.பத்மநாதன் said...

கட்டுரையை ஒரு உளி கொண்டு செதுக்கும் சிற்பியின் கவனத்தோடு செதுக்கி இருக்கிறீர்கள் சுபாங்கன்.செட்டான கட்டுரை.முதலில் அதற்கு என் பாராட்டுக்கள்.

கட்டுரை எழுதியவரால் கம்பீரம் பெறுகிறார் ஈழத்துச் சதன்.

சிறப்பு ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

 
On March 15, 2011 at 7:35 AM , வடலியூரான் said...

ஈழ்த்துச் சதன் எனக்கும் எமது பாடசாலையில் தான் அறிமுகமானர்.உங்களுக்கே உரித்தான லாவகமான எழுத்தாடலால் மிக அருமையாக சதனைப் பற்றீப் பகிர்ந்தமைக்கு நன்றி