Author: ஹேமா
•11:39 PM
வீட்டில் கணணியே கதியாய்க் கிடக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்குமான உரையாடல் அல்லது சண்டையெண்டே வச்சுக்கொள்ளுவம்.


ஸ்டார்ட்...மியூசிக்...

மனைவி....
கோதாரில போன(கோதாரி....எனக்கும் தெரியேல்ல) மனுஷனுக்கு விடிஞ்சிட்டுது.வேலைக்கும் போய்த் துலையாது....அயந்து (தன்னை மறந்து) நித்திரை கொள்ளவும் மாட்டுதாம் இப்பல்லாம்.......உந்தாளை(இந்த+ஆளை) ....!

இஞ்சாருங்கோப்பா பல்லு விளக்கியட்டியளே.குளிச்சுக் கிளிச்சு கொட்டிக்கொண்டீங்களே. ஒண்டுமில்லையேப்பா.உண்ணாணை(சத்தியம்)கடவுளே இந்த மனுஷனைக் காப்பாத்து.அயந்து நித்திரை கொள்ளுதுமில்ல.சாப்பிடுதுமில்ல.குளிக்குதுமில்ல.விடிஞ்சாப் பொழுதுபட்டா இதுக்குள்ளயே கவுண்டு கிடக்கு.....!

அப்பா.... (கணவனை) இதே பொழுதாப்போச்சு உங்களுக்கு.வீட்டில இருக்கிறமோ செத்தமோ உங்கட குரங்குக் குட்டியள் என்ன செய்து துலைக்குதுகள் அதுகளோட நான் படுற பாடு...பாட்டு எல்லிப்போல(மிக மிகச் சிறிது)ஏதும் ஒண்டெண்டாலும் தெரியுமோ.....!

உங்களுக்கு இந்தக் குடும்பம் குட்டி மட்டும் அண்டாதோ(போதாதோ).அதோட உங்கட கண்ணுக்கும் கையுக்குமெல்லோ நாசம் வரப்போகுது.பேந்து (பிறகு)இரவைக்கு வந்து கையப் பிடி காலைப் பிடியெண்டு சொல்லுங்கோ குண்டு வைக்கிறன் உந்தப் பெட்டிக்கு.சொல்லிப்போட்டன் குண்டு கிடைக்காட்டிலும் உலக்கையால உடைப்பன் ஓம்....!

கணவன்...
ஏனப்பா....விடியக்காத்தால அரியண்டம்(கரைச்சல்)தாற.அண்டக்காக்கா மாதிரி கத்தித் துலைக்கிற.கெதியில(சீக்கிரமா)உனக்கு விசர்(பைத்தியம்)பிடிக்கபோகுது பார்.சின்னதுகளை அடிச்சாவது இருத்தி வைக்கலாம்.எதுக்கும் அடங்கவும் மாட்டாத சென்மம் ஒண்டு நீ.....!

எடியே...ஏனடி..இப்ப எல்லாம் நல்லாத்தானே இருக்கு.ஏதும் சொல்லி நான் செய்யாம இருக்கிறனே.நொய் நொய் எண்டபடி.....உன்னைச் சொல்லிக் குற்றமில்ல.எனக்குச் செருப்பால குடுக்கவேணும்.உன்ர கொப்பரைக்(அப்பா)கூப்பிடு முதல்ல.வந்திட்டாள் சும்மா குளறிக்கொண்டு...அவளுக்கு எப்பவும் ஏதோ ஒரு விண்ணாணம் (புதுமை/மாசாலம்) இருக்கும் என்னோட கொழுவ(சண்டை) ......!

மனைவி...
ஏன் அந்த ஆளை இங்க இப்ப.கருப்பு (சாராயம்) அடிச்சுப்போட்டு ஊரெல்லாம் பம்பலா விடுப்புக் (வம்பு அளத்தல்/கிசுகிசு) கொண்டு திரியும்.அந்தாளை இழுக்காமச் சரிவராது உங்களுக்கு....!

என்னப்பா நீங்கள் வேலையெண்டு எங்கயோ போறியள்.அங்கயும் என்ன செய்யிறியள் எண்டும் தெரியேல்ல.அதுவும் ஒழுங்காப் போறேல்ல.சரி போறியள் எண்டு நான் கண்மூடி முளிக்க திருப்பி வந்து நிக்கிறியள்.சரி எல்லாத்துக்கும் கத்தக்கூடாதெண்டு நான் ஒண்டும் கதைக்காம இருந்தா குந்திவிடுவியள் இந்தக் கொள்ளைல போறதுக்கு முன்னால......!

உதை (அதை)அடுப்பில வச்சு எரிக்கிறன் ஒரு நாளைக்கு.இருங்கோ.கத்திக் கத்தி எனக்கு மூலம்தான் வந்ததுதான் மிச்சம்.வீட்டில காஸ் இல்ல.அடி வளவுக்கு அந்தத் தென்னை மரம் பாறிக்கிடக்கு.பின்பக்கச் சிவரெல்லாம் பாசி பிடிக்குது எத்தினை வேலை கிடக்கு வீட்ல.இதுக்கு நான் ஆரைப் பிடிக்கிறது.எனக்கு வாற ஆத்திரத்துக்கு(கோவம்)கோடாலி எடுத்துக்கொண்டு வரவே இப்ப...!

உங்க பாருங்கோவன்......உது பெரிய பகிடியாவெல்லோ(நகைச்சுவை)கிடக்கு.என்னவோ இதில இவர் கருத்துச் சொல்லேல்ல எண்டா உலகமே பிரண்டுபோமாம் (புரண்டு).என்னமோ இதுக்குள்ளாலதான் வருமானம் வாறமாதிரியெல்லோ.இருங்கோ உந்தக் கதிரையைக் கொத்தி மூலைக்க போடுறன் முதல்ல....!

கணவன்....
கவனமாக் (நிதானமா)கேள்.விசர்க்கதை கதையாதை.உனக்குத் தெரியுமோ நாங்கள் உதுக்குள்ளால அதான் இணையத் தளத்துக்குள்ளால தமிழ் வளக்கிறம்.ஏன் அதுவும் வயித்தெரிச்சலே உனக்கு.உதுக்கு முதல் கத்திக்கொண்டிருந்த...உதில வாற இழவுப் படங்கள் நல்லதோ கெட்டதோ அதை டவுண்லோட் பண்ணிப்போட்டு அதைப் பாத்துக்கொண்டிருக்கிறன்.
அதே உலகமாக் கிடக்கிறியள்....எங்களை பற்றிக் கவலைப்படமாட்டியள் எண்டு.அது உனக்குப் பிடிக்கேல்ல எண்டுதானே புளொக்கர் எழுதி அப்பிடியே தமிழையும் வளப்பமெண்டு வெளிக்கிட்டன்.இதுக்கும் ஆக்கினை (கரைச்சல்)தாற.நீ ஒரு நச்சுப்பலியடி.....!

மனைவி...
ஏனப்பா உந்தத் தமிழ் இவ்ளோ நாளும் வளந்துதானே இருந்தது.ஏன் தேய்ஞ்சுபோச்சே...நீங்கள் வளக்கிறன் வளக்கிறன் எண்றியள் புளுடா விடாதேங்கோ.படம் பாக்கிறயளோ...தமிழ் வளக்கிறியளோ....வளவளத்த ஆக்களோட எல்லாம் வம்பளக்கிறியளோ என்னண்டாலும் உதுக்குள்ளதானே கிடக்கிறியள்.எல்லாம் ஒண்டுதான்.....!

என்ன.....எப்பிடி....எப்பிடி....ஓம்...ஓம்...நான் நச்சுப்பல்லிதான்.அதுதான் கட்டிக்கொன்டு அழறன்.உங்கட சாப்ப்பாடுக்குள்ளதான் ஒரு நாளைக்கு விழுவன் பாருங்கோ.அது கிடக்கட்டும்.

ஏனப்பா தெரியாமத்தான் கேக்கிறன்.வீட்ட வந்தால் எங்களோட எல்லாம் கதைச்சுச் சிரிக்கவேணும் எண்ட எண்ணம் வராதோ உங்களுக்கு.
இண்டைக்கு என்னென்ன வேலைகள் செய்தனீ.ஆரெல்லம் வந்தவையள்.உங்கட குரங்குக்குட்டி என்ன செய்து வைக்குது....ஏதாவது உங்கட மண்டைக்குள்ள கவலை கிவலை கிடக்கோ இல்லாட்டிக் களிமண்ணோ.

வடிவாச் சாப்பிடக்கூட (நிறைவாக சாப்பிட) மாட்டியளாம்.வண்டிகூட(வயிறு) வத்திப்போச்சு பாருங்கோ.ஏதாவது காதில எப்பன்(கொஞ்சம்)எண்டாலும் விழுதேப்பா உங்களுக்கு.நான் ஒரு விசரியாக் கத்துறனெல்லே....!

கணவன்.....
ஹும் ...என்னப்பா சொன்னனீ இவ்வளவு நேரமும்.இவன் நசர் ஏதோ கேட்டவன் அதையே யோசிச்சுக்கொண்டிருந்திட்டன்.திருப்பி ஒருக்காச் சொல்லு.இனிக் கவனமாக் (அவதானமா) கேப்பன்...!

மனைவி...
ஹும்...தூரம் துலைல(காது கேக்கேல்ல).நான் மாரித் தவளைமாதிரிக் கத்திக்கொண்டிருக்கிறன்.சோத்தில உப்பு இல்லையெண்டு சொன்னனான்.நிப்பாட்டுங்கோ கொம்யூட்டர.இப்ப நீங்கள் எழும்பி வாறியளோ இல்லையோ இப்ப உடைப்பன் இப்ப உடைப்பன் சொல்லிட்டன்.மூண்டு தரம் சொல்றதுக்கிடையில எழும்பிடுங்கோ....ஓம்.....!

கணவன்...
இஞ்சாரப்பா எப்பவாலும் சொல்லியிருக்கிறனே நான் உன்னை மண்டூகம் மாரித்தவளையெண்டு.நீயாச் சொல்ற ஆனாச் சரியாச் சொல்ற.....!
சரி.....சரி ஆறுதலாச் (சாவகாசம்) சொல்லு ஏன் கத்துற.என்னெண்டு ஒருக்கா கேக்கிறன்...!

மனைவி.....
சும்மா சாட்டுக்குக் (சாக்குப் போக்கு)
கொஞ்சாதேங்கோ.இஞ்சருங்கோப்பா...நீங்கள் குடும்பம் நடத்திற லட்சணம் இப்பிடியோ.இனி என்ன புத்திமதி கல்லில உரச்சுத் தீத்தியே (ஊட்டு) விடுறது நான்.உங்கட கொப்பரும் கொம்மாவும் எங்களை ஏமாத்திப்போட்டினம்.

உங்களைப் பற்றிப் புளுகோ(பொய்) புளுகெண்டு புளுகிச்சினம் கல்யாணம் செய்து தரேக்க.இப்ப என்னட்ட தள்ளிவிட்டிட்டு....
வரட்டும் அவையள் இரண்டு பேரும்...!

வீடல் சீனி தொடக்கம் துணி தோய்க்கிற பவுடர் வரைக்கும் எப்பனும்(கொஞ்சமும்) இல்ல..பாத்ரூம் நாறுது.இதெல்லாம் ஆரப்பா செய்ற வேலை....!

கணவன்....
ஏனப்பா எல்லாம் முடிச்சிட்டியே.உன்ர ஆக்கள்தானே வந்து வந்து போய்க்கொண்டிருக்கினம்.அதுக்கு நானே பொறுப்பு.....!

மனைவி....
உடன.....உடன் பார் எங்கட ஆக்களை வம்புக்கு இழுக்கிறதை.
என்ர வாயைக் கிளறாதேங்கோ.நாங்கள் கடையளுக்குப் போய் சாமான்கள் வாங்கி இரண்டு மாசமாகுது.நீங்கள் கொம்யூட்டருக்கேப்பா தாலி கட்டினீங்கள்.இவன் சின்னவனையும் வச்சுக்கொண்டு என்னால என்ன செய்ய ஏலும்......!

வர வர உங்களுக்கு ஏத்தம்(திமிர்).ஏனப்பா...கொம்யூட்டர் வீட்ல இருக்கிறது பொழுது போகாத நேரத்தில ஏதாச்சும் பாக்கப் பயன்படத்தானே.சமையல் சாப்பாடு இல்லாம வெளில எங்கயும் போகாம யாரையும் பாக்காம அதுக்குள்ளயே கிடந்தா என்னப்பா ஞாயம் இது ....!

இண்டைக்கு எனக்கொரு முடிவு தெரிஞ்சாகவேணும்.சொல்லிப்போட்டன் ஓம்.இந்த வீடல் நான் இருக்கோணும்.இல்லாட்டி கொம்யூட்டர் இருக்கவேணும்.நானோ இல்ல அதோ எண்டு பாத்துக்கொள்றன் இண்டைக்கு....!
கணவன்....
எடியே ஏனடி...லூசுத்தனமா கொலை வெறியா மல்லுக்கட்டிக்கொண்டு(வீண் வாதம்)அரிகண்டம்(கறகறவெண்டு அரிக்கிறது)தாற.இப்ப நான் என்ன செய்துபோட்டன்.வெளுவை (அடி) வாங்கப்போற....ஓம் சொல்லிப்போட்டன்.விசர் (இதில் விசர் எரிச்சல்/கோபம்) வருது எனக்கு.ஏதெண்டாலும் சொல்லு பாப்பம்.கொலைக் குற்றம் செய்தனான் மாதிரி இருத்தி வச்சுக் கேள்வி கேக்கிற......!

மனைவி....
எனக்கு வாற வரத்துக்கு உங்களை...உங்க தமிழ் வளத்தவை வளத்துக் கொண்டிருக்கிறவை எல்லாரும் இப்பிடியே குடும்பம் நடத்தினவையள்.ஒருக்காச் சொல்லுங்கோ கொஞ்சம்....!

கணவன்.....
உந்த இடக்குமுடக்கா கேள்வி கேட்டு என்னோட கொழுவிக்கொண்டிருக்காத(சண்டை போடாத).என்னட்ட பதில் இல்ல.இப்ப உனக்கு என்ன வேணும் சொல்லித் துலை(கோவமா....சொல்லி முடி) ......!

மனைவி.....
ஓஓ....அதுசரி.நான் கேட்டதுக்கெல்லாம் அப்பிடியே டக் டக் எண்டு பதில் சொல்லிக் கிளிச்சுப்போட்டார்.உங்க சனங்களெல்லாம் (ஆட்கள்) நாக்கு வளைக்குதுகள் (கிண்டல்/எள்ளி நகைத்தல்) பிறகு கதைக்கிறியள்......!

கணவன்.....
ஆரப்பா கதைச்சவை.அவையள் எரிச்சல்ல கதைச்சிருப்பினம்.
ஏனெண்டா அவையளின்ர மனிசன்மாருக்கு (கணவன்) கொம்பியூட்டர் தெரியாதெல்லோ.சனங்களை விடு.

பாவம் அப்பா நீ.சரியா வயக்கெட்டுத்தான் (மெலிஞ்சு) போன.சரி நான் இனி ஒழுங்காச் சாமானெல்லாம் வாங்கித்தாறன்.செல்லமெல்லே அலட்டாதையப்பா....தேத்தண்ணி ஒண்டு தா....நல்லபிள்ளைபோல.
இண்டைக்கு முழுக்க கதைச்சுக்கொண்டேயிருக்கலாம் சரியோ......!

மனைவி....
தேத்தண்ணியும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.எல்லாச் சாமான்களும் முடிஞ்சுபோச்சு.முதல்ல சொல்லுங்கோ.உங்க சபை சந்தில தான் என்ர மனுஷன் நல்லவர் பெரி....ய இவரெண்டு நான் விட்டுக்குடுக்காம சொல்லிகொண்டு திரியிறன்.வீட்டுக்கு உதவாத மனுசனை என்ர தலைல கட்டி விட்டுப்போட்டு அவையள் நிம்மதியா இருக்கினம்.....!

கனக்கக் கதைக்கவேண்டாம்.எனக்குத் தெரிஞ்சாகவேணும் இண்டைக்கு நானோ கொம்பியூட்டரோ எண்டு.....ஓம்......!

கணவன்....
அடி...குரங்கு வர வர உனக்கு எள்ளளவும் (கொஞ்சம்கூட) அறிவில்லாமப் போச்சு.ஆரோட ஆர் போட்டி போடுறது.அது வாயில்லா சென்மமெல்லே....!

மனைவி....
என்னை விசராக்காதேங்கோ.உந்தச் சனியனால நான்தான் வாயில்லாப் பூச்சியா அடைபட்டுப்போனன்.

இஞ்சப்பா....இஞ்சப்பா நான் இஙக புலம்பிக்கொன்டிருக்கிறன்.திரும்பவும் அங்க என்ன பார்வை வேண்டிக்கிடக்கு உங்களுக்கு.உங்களை...உங்களை....!

அப்பா....அப்பா எங்க போறியள்.....!

கணவன்....
கொஞ்சம் பொறடி வாறன்.பிறத்தால கூப்பிடாத (பின்னுக்குக் கூப்பிடாத) ....தீர அயத்துப்போனன் (முழுசா மறந்து). புதுமொடல் கொம்யூட்டர் ஒண்டுக்கு ஓடர் பண்ணினனான் வரச்சொன்னவங்கள்.நசர் பாத்துக்கொண்டு நிப்பான்.சரி வரேக்க ஏதும் வாங்கிக்கொண்டு வரவோ.கெதியா வந்திடுவன்.....!

( தன்பாட்டுக்கு மனைவி புலம்புறா....)

அய்யோ....அய்யோ...இப்பிடிக்கொத்த (இப்பிடியான) மனுசனை வச்சுக்கொண்டு நான் கட்டியழுறன்.உங்கட வீடுகளிலயும் இப்பிடித்தானோ.
ஒருக்காச் சொல்லுங்கோ.புளுகத்தைப் (புளகம்/சந்தோஷம்) பாருங்கோவன்
புதுசொண்டு வரப்போகுதெண்டு.கரந்தை (மாட்டு வண்டில்) இழுக்க விடாம உந்தாளை ஏன் படிப்பிச்சவையோ தெரியேல்ல.

புதுக் கோதாரியோ.கொண்டு வரட்டும்.உந்தப்பெடி (அந்தப் பெடியன்) நசர்
கும்மியடிச்சுக்கொண்டு இந்தப் பக்கம் வரட்டும்......இருக்கு அவருக்கும்.....!

நசரேயனின் ஒரு பதிவின் சாரத்தோடு.....என்னுடைய மொழிக்கலவையும்.
This entry was posted on 11:39 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On March 8, 2011 at 3:39 AM , சி.பி.செந்தில்குமார் said...

மேட்டர் செம காமெடியாத்தான் இருக்கு.. ஆனா இந்த நடை ரொம்ப டஃப்ஃபா இருக்கு...

 
On March 8, 2011 at 6:02 AM , வர்மா said...

நல்லதொருசண்டை
அன்புடன்
வர்மா

 
On March 8, 2011 at 7:27 AM , pudugaithendral said...

இலங்கையில் இருந்த பொழுது என் தோழி ஒருவர் யாழ்ப்பாணம் தமிழ் பேசுவார். அவரது நினைவு வந்தது.
நல்ல நகைச்சுவையாக இருந்தது.

 
On March 8, 2011 at 8:29 AM , வசந்தா நடேசன் said...

முடியல.. நல்லாத்தான் இருக்கு.. வரும்ம்ம்.... ஆனா வராது....

 
On March 8, 2011 at 9:01 AM , ஜோதிஜி said...

இப்பயாவது என் தலைவன் நசரேயனை புரிந்து கொண்டமைக்கு நன்றி ஹேமா.

 
On March 8, 2011 at 12:00 PM , ஹேமா said...

நசரேசயனுக்கு நன்றி !

 
On March 9, 2011 at 2:54 AM , மாதேவி said...

அய்...கலக்கல்.

நவீன யுகத்தில் பாவம் செய்தது கணணிதான் :) இத்தனை அடி வாங்குதே...

 
On March 10, 2011 at 5:28 AM , வடலியூரான் said...

ம்ம்ம் கலக்கல் பதிவு .. ரசித்தேன் உங்கள் பதிவை

 
On March 10, 2011 at 1:47 PM , வந்தியத்தேவன் said...

இது எதோ ஹேமா அக்காவின் அனுபவம் போலத் தான் கிடக்கு, என்னென்டாலும் நல்லதொரு சண்டை பார்த்தமாதிரி இருக்கு, இப்போ புருஷன்மார் பேஸ்புக்குக்கும் பெஞ்சாதிமார் மெஹாசீரியலுக்கும் அடிமையாகிவிட்டினம்.

 
On March 11, 2011 at 6:08 PM , Unknown said...

// உலக்கையால உடைப்பன் //
என்ன ஒரு கொலைவெறி...தமாசான பதிவு...

 
On March 13, 2011 at 6:11 AM , சஞ்சயன் said...

இந்தக் கதை உண்மை கலந்த நாட்குறிப்புகளா?

சப்பா தாங்கமுடியலியே!