Author: யசோதா.பத்மநாதன்
•5:58 PM


’மோனை இஞ்ச ஒருக்கா வா ராசா.நாரீக்க பிடிச்சுக் கொண்டுது.அங்கால இங்கால அரக்க ஏலாமல் கிடக்குது.உந்தப் பரியாரியார் தந்த தைலம் உங்கனக்க அந்த வெத்திலத் தட்டத்துக்குக் கிட்டதான் எங்கயோ வச்சனான் ஒருக்கா எடுத்துத் தா.’ - காலை நீட்டி முதுகை சுவருக்கு காட்டிய வண்ணம் உட்கார்ந்திருந்த மணியாச்சி பேரனைக் கூப்பிட்டாள்.

’உனக்கணை அசைய ஏலாமல் கிடக்குது அதுக்கிடையில முற்றத்துக்குப் போக நிக்கிறாய்.முதல் எழும்பி நிக்கப் பார்’ பேசிக்கொண்டே ஏதோ வேலையாக நிக்கிறான் பேரன்.

‘இல்ல ராசா கலியாண வீடெண்டா சும்மாவே! அங்க எத்தின இனசனம் வரும்;எவ்வளவு வேலையள் இருக்கும்.எல்லாப் பிள்ளையளும் என்ர கையுக்க வளந்ததுகள் எல்லாம் வெளிநாடெண்டு ஓடி விட்டுதுகள். இப்பிடி ஒரு நல்ல நாள் பெருநாளில தானே எல்லாரையும் காணலாம்.அண்டைக்கு இவன் எங்கட மாணிக்க வாசகரைத் தெரியுமெல்லே? அவன அண்டைக்கு சங்கக் கடை வாசலடியில் கண்டனான்.அவன்ர மோளுமெல்லே வெளி நாட்டால வாறாளாம்.இதுகள் எல்லாத்தையும் விட்டிட்டு இஞ்ச சும்மா இருக்கச் சொல்லுறியே? எங்கட பரியாரியார் தந்த தைலத்த மூண்டு தரம் போட்டுட்டு நிமிந்து மூண்டு நாளைக்குப் படுத்தனெண்டா அது என்ன எழுப்பிப் போடும் மோனை.நீ ஒண்டுக்கும் யோசியாத.

மெய்யே மோன! அந்தச் சின்னப் பொடிச்சி பூக்களை எல்லாம் புடுங்கிப் பூமாலை கோத்துக் கொண்டு திரிவாள் - பேருகளும் எல்லே இப்ப மறந்து போகுது,.. அவளும் வருவாளே? முன்ன எத்தின பொடியள் ராசா! வர்மா, வலசு,வந்தி அவங்கள்,இவங்கள் எண்டு - இந்த நாசமாப் போன மறதியால ஒண்டும் எனக்கு ஞாபகமும் வருகுதில்ல - அவங்கள் எல்லாம் வருவாங்கள் தானே!

முந்தி உந்த விறாந்தையடியிலயும் படலையடியிலயும் நிண்டு கொண்டு எவ்வளவு சமா வச்சுக் கொண்டிருப்பாங்கள்.எத்தின புதினம் கதைப்பாங்கள்.ஒருத்தனையும் இப்பக் காணக் கிடைக்குதில்ல.அவங்கள் எல்லாம் ஆளுக்கொரு மூலையாப் போயிட்டாங்கள்.எல்லாரையும் இப்பிடி ஒரு நேரத்தில தானே காணலாம்.உவன் வடலியூரான் தான் மணியாச்சியயும் மறக்காம அங்கனேக்க இங்கனேக்க ஓடியாடித் திரியிறான்.

எத்தின வேலையள் கிடக்குதங்க.இன்னும் என்ன ரெண்டு,மூண்டு கிளமை தானே கிடக்கு.குருமணல் பறிப்பிக்க வேணும்,முற்றத்தில பந்தல் போடவேணும்,அலங்காரங்கள், சோடினையள், பலகாரச் சூடு,மாவிலத்தோறணம் செய்யக் கொஞ்சம் பொடியள் வேணும்.சொன்னாப் போல கேட்டியே, ராசா! உந்தக் தென் பகுதியாலயும் ஆரோ ரெண்டு பிள்ளையள் வருகினமாம். கேள்விப்பட்டனியே!அதுகளுக்கு எங்கட சாப்பாடு,இருப்பிடங்கள் ஒத்து வருமோ தெரியாது. அதுகள வடிவாக் கவனிச்சுப் போடு என்ன!,ஆ... எங்க விட்டனான். ஓ... அதுதான் உந்த வேலையள்...வாழைக்குலை வாங்க வேணும்,வீட்டுக்குப் பெயிண்ட் வேற அடிக்க வேணும். மேளச் சமாக் காரரைக் கூப்பிட வேணும், சாமான் சக்கட்டு எல்லாம் வாங்க வேணும்.அது சரி,சொன்னாப் போல மணவறக் காறருக்கும் ஐயருக்கும் சொல்லிப் போட்டியே?

காறுகளும்(car) வேணும் ராசா. மதவடிச் செல்லப்பரிட்ட சொல்லிப் போட மறக்காத.பிறகு அந்தாள் நீ முன்ன சொன்னியோ பின்ன சொன்னியோ எண்டு பெரிய வீறாப்புப் பேசிக் கொண்டு நிக்கும். கொழும்புக் காரர் வாற நேரத்தையும் வடிவா ஒருக்காக் கேட்டு வை.ஸ்ரேசனுக்கு நேரத்துக்குக் கொண்டு போட வேணும். ஏற்கனவே களைச்சு விழுந்து வாறதுகள். நாங்கள் பிந்திப் போடக் கூடாது.உதுகள எல்லாம் முதலே சொல்லி வை என்ன? மறந்து போகாமல். பிறகு அங்க பாத்தன் பின்ன பாத்தன் எண்டு அந்தரப் பட்டுக் கொண்டு திரியாமல் இப்பவே கையோட கையா சொல்லிப் போடு.உவன் பிரவா உதுகள எல்லாம் தனியச் செய்யேலாது கண்டியோ!

உவன உந்தத் தைலத்தக் கொண்டந்து தாவெண்டா அவன் எங்கயோ ஓடியிட்டான். நான் என்ர பாட்டில என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறன்.இனி நான் தான் மெல்ல மெல்ல அரக்கி எடுக்க வேணும்.உந்தக் காலத்துப் பொடியள் என்னத்தக் கேக்கிறாங்கள்! அவங்கள் தங்கட பாடு, நான் என்ர பாடு, அப்பூ... முருகா... என்ர ஆண்டவரே... எப்பனும் ஏலேல்லாமல் கிடக்கு...முதுகு நல்லாப் பிடிச்சுக் கொண்டுது....(ஆச்சி மெல்ல நாரியப் பிடிச்சுக் கொண்டு எழும்பிவிட்டா)

மணியாச்சி வெளிக்கிட்டிட்டா. அப்ப நீங்களும் எல்லாரும் வருவியள் தானே?

(படம் நன்றி;கூகுள் இமேஜ்.)

சொல் விளக்கம்:

மணியாச்சி - வேற யார்? நான் தான்:)
வெளிக்கிடுட்டா - புறப்பட்டு விட்டா
மோன - மகனே, மோள் - மகள்
உங்கனேக்க - உவ்விடம் தான் ஏதோ ஓரிடத்தில்.
நாரி -கீழ்முதுகின் முள்ளந்தண்டுப் பகுதி
அரக்க ஏலாமல் - அசைய முடியாமல்
பரியாரியார் - ஆயுள்வேத வைத்தியர்
மெய்யே மோனை - அழைப்புச் சொல் - உண்மையா மகனே என்ற கேள்வியோடு ஆரம்பமாகும் வாக்கியம்.
விறாந்தை - முன் கூடம், படலை - கேற்
சமா,புதினம் - கதை,பேச்சு
குரு மணல் - சீனியைப் போல இருக்கும் வெள்ளை மணல்.
(பெரிய கொண்டாட்டங்களுக்கு முற்றத்தில் இம்மணல் பரப்புவது வழக்கம்.சிலர் படங்கு விரிப்பதும் உண்டு)
எப்பனும் ஏலேல்லாமல் - கொஞ்சமும் முடியாமல்
வீறாப்பு - வீண் பெருமை(இளந் தலைமுறை லெவல் அடிக்கிறது என்பர்).
This entry was posted on 5:58 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

26 comments:

On February 9, 2011 at 12:28 AM , சந்தனமுல்லை said...

enjoyed reading this.Reminds me the elders of my family too...LoL..sry for the font.

//உனக்கணை
உவன் பிரவா உதுகள
படங்கு// ??

 
On February 9, 2011 at 12:44 AM , கானா பிரபா said...

உனக்கணை = உங்களுக்கு, உனக்கு
உவன் பிரவா உதுகளை = இவன் பிரபா இதுகளை
படங்கு = கூடாரத்துக்கு மேல் போடும் துணி

 
On February 9, 2011 at 1:59 AM , வடலியூரான் said...

எணை மணியாச்சி, இப்ப ஏனணை உதிலை இருந்துகொண்டு புறுபுறுத்துக் கொண்டிருக்கிறாய்...?எல்லாரும் உன்னை விட்டு வேறை எங்கேயோவே போட்டாங்கள்.தெரியாதே இப்பவெல்லாம் முந்தினமாதிரி இல்லைத்தானே எல்லாருக்கும் குடும்பம்,குட்டியெண்டு வந்ததாலை அதுகளும் பல சோலியெண்டு ஓடித்திரியுதகளாக்கும்.நீ அதுக்குப் போய் புசத்திக்கொண்டு இருக்கிறாய்.நீ வேணுமெண்டால இருந்து பாரன், எல்லாரும் கலியாணவீட்டுக்கு ஒருகிழ்மைக்குமுதலே, தங்கன்ரை மனுசிமார்,மனுசன்மார்,பிள்ளையளோடைவந்து,பந்தல்போட்டு,பலகாரஞ் சுட்டு,குலை வாழை கட்டிப்,பந்தி வைச்சு என்ன வடிவா நடத்துறாங்களோ இல்லையோ எண்டு .நீயும் உன்ரை மக்கள்,மருமக்கள்,பேரப் பிள்ளையளை எல்லாத்தையும் பாக்கலாம் தானே.எங்கன்டை கலியாணவீடு எப்பிடி நடக்குதெண்டு நீயும் இருந்து பாரன்.

 
On February 9, 2011 at 2:03 AM , வடலியூரான் said...

//முதல்ப் பின்னூட்டத்தில் தவறவிடப்பட்ட பகுதி

நீ வேணுமெண்டால இருந்து பாரன் எல்லாரும் கலியாணவீட்டுக்கு ஒருகிழ்மைக்குமுதலே தங்கன்ரை மனுசிமார்,மனுசன்மார்,பிள்ளையளோடைவந்து,பந்தல்போட்டு,பலகாரஞ்சுட்டு,குலை வாழை கட்டிப்,பந்தி வைச்சு என்ன வடிவா நடத்துறாங்களோ இல்லையோ எண்டு பாரன்.

 
On February 9, 2011 at 2:13 AM , வடலியூரான் said...

உண்மையில் மணியாச்சி,அச்சரம் பிசகாமல் எழுதப்பட்டிருந்த ஆச்சிமாரின் கதையை ரசித்து, ரசித்து,வாசித்தேன்..சிரிக்கவும் செய்தேன்...நல்லதொரு நோக்கத்திற்காக,வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மிகச் சிறப்பாக கதைக்களம் அமைக்கப்பட்டு புரியவேண்டியவர்களுக்குப் புரியவேண்டியமாதிரிக் கூறப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்

//இரண்டாவது பின்னூட்டமும் பிசகிவிட்டது.
இந்தமுறையாவது..?


.....பந்தல் போட்டு,பலகாரஞ்சுட்டு,குலை வாழை நிமித்தி,பந்தி வைச்சு....

 
On February 10, 2011 at 1:04 AM , வலசு - வேலணை said...

எணை மணியாச்சி!

கல்யாணத்துக்கு நாங்களும் வரப் பாக்கிறமெணை. என்ன இந்தக் கோதாரி விழுந்த வேலையால நேரம் தானெணை கிடைக்க மாட்டனெண்டுது

 
On February 10, 2011 at 1:09 AM , Pranavam Ravikumar said...

Good one... Thanks for the translation too!

 
On February 10, 2011 at 7:34 AM , நிலாமதி said...

கிராமத்து வாசனையும் கதையும் அருமை. நாங்களும் வாரோம் குழந்தை குட்டிகளுடன். இவை எல்லாம் நிஜத்தில் காண தவம் இருக்க வேண்டும்..........தொலைந்து போனவைகள் இன்னும் வலைத் தளத்தில் ஆவது கண்டு மகிழ்கிறோம்........ஆச்சிக்கு பாராட்டுக்கள்.

 
On February 10, 2011 at 1:55 PM , வந்தியத்தேவன் said...

ஏனனை ஆச்சி அவசரப்பட்டனீ. எல்லோரும் வருவம் தானே. எல்லாப் பொடியளுக்கும் சோலி கூட ஆச்சி. ஆனாலும் ஆச்சி இந்த வெயிலிலையும் வெளிக்கிட்டது பிழையனை. கொஞ்சம் ஆறுதலாப் வந்திருக்கலாம்.

மணியாச்சி உந்தப்படம் எடுத்தது பிரபாவோ அவன் பாட்டுத்தான் நல்லாப் போடுறான் என்டால் படமும் எடுக்கிறான்.

 
On February 10, 2011 at 3:42 PM , யசோதா.பத்மநாதன் said...

பிள்ள,என்ர சந்தனக் குஞ்சு,வா மோன வா,வா.பாத்தியேண நான் சொன்னன்.

இந்தத் தென்பகுதியால வாற பிள்ளயள நல்லாக் கவனிச்சுப் போடுங்கோடா பிள்ளையள் எண்டு சொன்னனோ இல்லையோ?

பாத்தியே! உடன ஓடி வந்திட்டான் என்ர பேரன்,பிரவா? என்ர பிள்ளையள் பிள்ளையள் தான்.

 
On February 10, 2011 at 3:46 PM , யசோதா.பத்மநாதன் said...

இஞ்ச பார், என்ர வடலிக் குஞ்ச!இஞ்ச வாடா என்ர ராசா!!என்ர பிள்ள இருக்கேக்க எனக்கென்ன கவல?

‘பந்தல் போட்டு,பலகாரஞ்சுட்டு,குலவாழை நிமித்தி,பந்தி வச்சு...’அதுக்கு நீதானடா ஆள்!

அந்தப் பந்தியிலைக்கு தோட்டக்காறக் கிளியரிட்டச் சொல்லி வச்சது.அந்தாள் நேரத்தோட வெட்டி கட்டி வச்சிருக்கும். ஆரேன் சின்னாக்கள விட்டு நேரத்தோட எடுப்பிச்சு வை மோன! மறந்து போடாத.

 
On February 10, 2011 at 3:49 PM , யசோதா.பத்மநாதன் said...

இஞ்ச! என்ர அப்பு! ராசா!! வலசு,உது நீயேடா மோன!எப்பிடி இருக்கிறாய்? என்ன ஆளே நல்லா மாறிப் போனாய்.வா... வா..எப்பிடி? நல்லா இருக்கிறியே?

கலியாணத்துக்கு வரப் பாக்கிறதென்ன? வா.

 
On February 10, 2011 at 3:55 PM , யசோதா.பத்மநாதன் said...

உதார் ராசா? ஆரோ புதுப் பிள்ள,வா ராசா! சந்தோசம்.கண்ணும் இப்ப வடிவா தெரியிறேயில்ல.

பிள்ள! இஞ்ச ஒரு பிள்ள ரவிக்குமாராம் வந்திருக்குது.ஆற்றயோ சினேகிதப் பொடியன் போல கிடக்கு.தேத்தண்ணி போட்டுக் கொண்டு வா.வரேக்க கையோட அந்த வெத்திலத் தட்டத்தையும் கொண்டு வா மோன.

வெத்தில போடப் போறியே மோன? புது வெத்தில!

 
On February 10, 2011 at 3:59 PM , யசோதா.பத்மநாதன் said...

நீ ஆரடி மோன? நிலா மதி!நல்ல அருமையான பேராக் கிடக்கு. நீ... அந்த மூலக் கடை அம்பலவாணரின்ர பேத்தியெல்லே?

ஆரோ சொன்னவை தான்.அம்பலவாணர் நல்லொரு இடத்தில மோளக் கட்டிக் குடுத்திருக்கிறான் எண்டு.

உன்ன இண்டைக்கு இப்பிடி பிள்ள குட்டியளோட காண என்ர மனம் நிறஞ்சு போச்சடி பிள்ள.

உன்ர சின்னன இஞ்ச கொண்டா பாப்பம்!உன்னப் போல தான் நல்ல மூக்கும் முழியும்!

இஞ்ச வாடி என்ர ராசாத்த்த்த்த்தி!

 
On February 10, 2011 at 4:05 PM , யசோதா.பத்மநாதன் said...

இந்தக் காலத்துப் பிள்ளயளே நம்பேலாது வந்திப் பொடியா.பிறகு பாப்பம்,பிறகு பாப்பம் எண்டிட்டு பிறகால போடுங்கள்.

உந்தப் படத்தப் பற்றிக் கேட்டனியோ?அதடா,ரெண்டு வருசத்துக்கு முன்னம் லண்டனால என்ர மூத்த பேரன் வந்தவனல்லோ என்னப் பாக்க! அவன் தான் நான் தோட்டத்துக்குப் போகேக்க ’உதில நில்லண ஒருக்கா’ எண்டிட்டு படம் எடுத்துத் தந்திட்டுப் போனவன்.

வடிவா இருக்கிறனே?

 
On February 10, 2011 at 4:09 PM , வந்தியத்தேவன் said...

ஆச்சி பதிவிலை மட்டுமில்லை பின்னூட்டத்திலையும் கலக்குகின்றார். எங்கட மணி அக்காவுடன் ஒருநாளைக்கு பேசிப்பார்க்கவேண்டும்

 
On February 10, 2011 at 4:50 PM , யசோதா.பத்மநாதன் said...

வந்திப் பொடி,இஞ்ச வாடா. நீ வலு குழப்படி.ஒரு சொல்வழியும் கேளாய்.

உந்தப் பாக்கிறது, கதைக்கிறது இருக்கட்டும்.உங்கனேக்க தெல்லோடிக் கொண்டு திரியாமல், போய் ஒருக்கா இந்த வெத்தில பாக்குச் சீவலுக்கு கடைக்காறக் கண்னப்பரிட்ட சொல்லி வச்சது. வந்திட்டுதோ எண்டு ஒருக்கா கேட்டுக் கொண்டு வா.

அந்த நாளையில தாம்பூல வல்லி எண்டு வெத்திலயச் சொல்லுறது.இப்ப வெத்தில வெத்தில எண்டு என்ர வாயிலயும் அது வெத்திலயாப் போச்சு.

ஓடி விழுந்திடாமல் மெல்லப் போ என்ன?.

 
On February 15, 2011 at 1:59 AM , ஃபஹீமாஜஹான் said...

இந்தக் கல்யாணத்தில மணியாச்சிக்கு ஏகப்பட்ட சந்தோஷம் என்பது விளங்குது. எங்களுக்கும் சந்தோஷம் தான்.அழைப்பிதழ் கிடைத்தது. "கட்டாயம் கட்டாயம் கட்டாயம்" வரவேணுமென்ற வெருட்டலும் வந்தது :-) நாங்கள் வரத் தவறினாலும் மணியாச்சி இருக்குமிடத்தில் ஒரு குறையும் வராமல் எல்லாம் நல்ல படியாக நடந்திடும் என்ன நம்பிக்கை இருக்கு.

 
On February 15, 2011 at 9:41 AM , வர்மா said...

மணி ஆச்சியின் வித்தியாசமான நடை நன்றாக இருக்கிறது. அந்தக்கூடையுக்கை என்னணை வச்சிருக்கிறாய்.
அன்புடன்
வ‌ர்மா

 
On February 15, 2011 at 9:41 AM , வர்மா said...

மணி ஆச்சியின் வித்தியாசமான நடை நன்றாக இருக்கிறது. அந்தக்கூடையுக்கை என்னணை வச்சிருக்கிறாய்.
அன்புடன்
வ‌ர்மா

 
On February 15, 2011 at 3:47 PM , யசோதா.பத்மநாதன் said...

ராசாத்தி,பகீமா!அதென்ன? வரத்தவறினாலும்!?

பஞ்சிப்படாம வா பிள்ள.ஆணும் பெண்ணுமாப் போய் அழைப்பிதழக் குடு மோனை எண்டு பிரவாட்டச் சொன்னனான்.பிறகு அதால ஒரு குற வந்திடப் படாது.

வரவேற்பு எப்பிடி இருக்குமோ எண்டு பஞ்சிப்படுறியே!அதெல்லாம் பிள்ள கவனிச்சுக் கொள்ளுவானெணை. நீ யோசியாம வா.

உன்ர உம்மாவயும் கூட்டிக் கொண்டு வா மோன.உங்கட உம்மான்ர சமையல் வலு பிரசித்தமெல்லே! வந்தா எனக்கும் எப்பன் பிராக்கா இருக்கும்.சமையலையும் அறிஞ்ச மாதிரி இருக்கும்.

எனக்கு நெடு நாளாய் ஒரு சந்தேகம் ஒண்டிருக்குது பிள்ள.

தோடு இருக்குதெல்லே? காதில போடுற தோடு. அத முன்ன ’காதோலை’ எண்டு சொன்னவை. பிறகு ’செவிப்பூ’ எண்டு சொன்னவை. ’செவிமலர்ப்பூ’ எண்டும் சொன்னவையாம்.இப்ப ’தோடு’,தோடு எண்டு சொல்லுகினை.

எப்பிடி இந்தப் பேருகள் மாறுது எண்டு எனக்கு எப்பனும் விளங்குதில்ல.

உங்கட ஊர்மனையள்ள என்ன மாதிரிச் சொல்லுறவை?

 
On February 15, 2011 at 4:07 PM , யசோதா.பத்மநாதன் said...

வர்மா! நல்லா இருக்கிறியே மோன? எங்க சிலமனக் காணேயில்ல எண்டு யோசிச்சன்.சுகமா இருக்கிறா தானே?

பிள்ள குட்டியளயும் கூட்டிக் கொண்டு நேரத்தோட வந்திடு என்ன?

கூடயிக்க என்னெண்டோ கேட்டனீ?அதென்ன ராசா அதுக்க அப்பிடி ஒண்டும் விசேசமில்ல.

காத்தால தோட்டத்துக்குப் போனா அங்கனேக்க பனம்பழம், விழாம்பழம், புளியம் பழம் எண்டு ஏதேன் விழுந்திருக்கும்.

சொன்னாப் போல, இந்தப் பன்னாடையள் அடுப்பெரிக்க நல்ல சாமான் ராசா.மண்ணெண்ணை ஒண்டும் விடத் தேவையில்ல.அதின்ர நுனியில நெருப்ப வச்சா கிசுகிசு எண்டு பத்திவிடும்.அது உவள் பிள்ளைக்கு வலு விருப்பம்.மறக்காமல் எடுத்துக் கொண்டு வாணை எண்டு சொல்லி விடுவாள்.

அதோட உனக்குச் சொன்னா என்ன,எங்கட வடலி பொடியன் இருக்கிறானெல்லே? அவன் வலு பிரயாசை ராசா.வெங்காயச் செய்கைக்கெண்டா அவனக் கேட்டுத் தான்.ஒரு கலியாணவீட்டையே தனிய நிண்டு நடத்தக் கூடிய வல்லமை அவனிட்ட இருக்குது.

அவன்ர வெங்காயத் தறையிக்க கொஞ்சம் களையள் வளந்து போச்சுது.அதுகளக் கொஞ்சம் புடுங்கிக் குடுத்தனெண்டா பயிரும் நல்லா வந்திடும், எங்கட மாடுகளுக்கும் புல்லாப் போயிடும்.

வேற என்ன? உங்கனேக்க வளந்திருக்கிற கீரையையும் கொஞ்சத்தப் புடுங்கிக் கொண்டு மரவள்ளியும் நிக்கிது அதிலயும் 2 கிழங்க பிரட்டிக் கொண்டு போனனெண்டா அங்க அவள் பிள்ள தேத்தண்ணி போட்டு வச்சிருப்பாள். அதக் குடிச்சுப் போட்டு சங்கக் கடையடிக்குப் போனா நல்ல மீன் வந்திருக்கும்.

அதையும் வாங்கினனெண்டா சமையல் பாடு ஒருமாதிரி முடிஞ்சிடும்.

தோட்டம் தானே ராசா எங்கட ஆதார சீவன்!

 
On February 16, 2011 at 12:04 AM , ஃபஹீமாஜஹான் said...

மணியாச்சி,
இந்தப் படத்தில நீங்க மிச்சம் அழகா இருக்கிறீங்க.என்ட ஆச்சி இருந்த காலத்திலயும் உங்களப் போலத் தான் ஒலுப்பமும் சும்மா இருக்க மாட்டா.தோட்டத்துக்கு போய்வார நேரத்தில கூடவே பாளை, பன்னாடையையும் எடுத்துக் கொண்டுதான் வருவா.

இப்பிடி கூடைய தூக்கி தலையில வைச்சிக் கொண்டு அரக்கி அரக்கி திரிஞ்சதால தான் நாரிப்பிடிப்பு வந்திருக்கும். ஆனாலும் வேலை செய்யாம இருந்தால் உங்களுக்கு சோறு ,தண்ணி சீரணிக்காதே!

எங்கட ஊரில காதில போடுறதை "காதுப்பூ" என்றும் "அருங்கல்" என்றும் சொல்வாங்க. "அருங்கல்" என்றது சிங்களத்தில் இருந்து வந்து கலந்திருக்கும் சொல்.ஆச்சி, உங்கட காதில இருக்கிற அருங்கல்ல யார் வாங்கித் தந்தது?

கல்யாண வீட்டுக்குப் போக எனக்கு நேரமில்ல என்றதுக்கு உம்மாவைக் கூட்டிக் கொணடு போகச் சொல்லித் தான் தம்பி ரிஷானும் ரெலிபோனில சொன்னார்.
"வந்தா எனக்கும் எப்பன் பிராக்கா இருக்கும்.சமையலையும் அறிஞ்ச மாதிரி இருக்கும்."
ம். அது உண்ம தான். கூட்டிக் கொண்டுவர முயற்சிக்கிறன்.

 
On February 16, 2011 at 2:39 PM , யசோதா.பத்மநாதன் said...

என்ர ராசாத்தி!

இஞ்ச வாடி என்ர பேத்தி!!

வா, இதில இரு மோன.பிறகு, சொல்லு, சொல்லு. என்ர காது குளிரக் கொஞ்சம் கேப்பம்.

அப்பிடியே எல்லாம் அறிஞ்சமாதிரி சொல்லிறாயடி பிள்ள.உந்தக் குணம் ஆருக்கு வரும்? சொல்லு.

அந்தக் காலத்தில எவ்வளவு உயிரும் பிராணனுமா...புட்டும் தேங்காய் பூவும் போல இருந்தனாங்கள்.அதுகள எல்லாம் மறக்க ஏலுமேயடி மோன.

இண்டைக்கு நீ இதில வந்து கதைக்கேக்க எங்களுக்கு எவ்வளவு மனக் குளிர்ச்சியாய் இருக்குது தெரியுமே!

அருங் கல், காதுப் பூ...எவ்வளவு அருமையான பேருகள் பாத்தியே?

என்ர காதுப் பூவோ? அது என்ர மகராசன் இருக்கேக்க ’உன்ர கறுப்புக் காதுக்கு எடுப்பா இருக்கும், போடு மணி’ எண்டு அப்ப ஒருக்கா வாங்கித் தந்தது.

அந்தப் புண்ணியவானும் போய்ச் சேந்து கனகாலமாப் போச்சுது.ஊம்...!

உம்மாவோட நீயும் வா மோன.தமிழ் மொட்டாக்குப் போட்டுக்கொண்டு வாற நடை இருக்குது பார்! அது மகா விசேசம்!!அதில வழிஞ்சு ஓடுற வாஞ்சை இன்னும் விசேசம்!

வந்திடு என்ன?

 
On February 19, 2011 at 9:24 AM , Muruganandan M.K. said...

சும்மா சொல்லாக் கூடாது மேனை. பக்கத்து வளவு செல்லம்மா ஆச்சியும் உப்பிடித்தான் சொல்லிறவ.
அடிக்கடி வா மேனை உன்ரை பேச்சைக் கேக்கோணும் போல கிடக்கு

 
On February 20, 2011 at 3:30 PM , யசோதா.பத்மநாதன் said...

அட, எங்கட டாக்குத்தர்!

கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி.பிள்ள, இஞ்ச ஒருக்கா வந்து பார்! ஆர் வந்திருக்கிறதெண்டு!

நாரீக்க நல்லாப் பிட்டிச்சுக் கொண்டுட்டுது மோனை.அசையக் கிசைய ஏலேல்ல.

உன்னத் தான் காண ஒருக்கா வரவேணும் எண்டு இருந்தனான். இரு,இரு.பிள்ள,பிள்ள..!