Author: யசோதா.பத்மநாதன்
•6:29 PM
என் பள்ளிப் பருவங்களை - கிட்டத் தட்ட 10, 12 வருடங்களை வன்னிக் கிராமமொன்றில் களி(ழி)த்திருக்கிறேன்.

இப்போது கிட்டத் தட்ட 15 வருடங்களின் பின் நினைத்துப் பார்க்கும் போது வன்னிப் பகுதி சிறுவர்கள் கூடுதலாக இயற்கையோடு அன்னியோன்யமாய் வாழ்ந்திருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.குடிசை வீடுகளும் லாந்தர் விளக்குகளும் ரொட்டி சுடும் வாசமும் பறவைகளின் பலவிதமான ஒலிகளும் நிறைந்தது அவர்களின் மாலை நேரம்.

சிறுமிகள் குண்டுமணி மரத்தைச் சுற்றிக் குண்டுமணி பொறுக்குவார்கள்.மருதோன்றி இலைகள் பறித்து அம்மியில் அரைத்து தேசிச் சாறு விட்டு நகம் சிவக்கும் அழகைக் காட்டி அதே மாதிரி வெகு சிரத்தையாகத் தம் தோழி மாருக்கும் போட்டு விடுவார்கள். சிறுவர்கள் காடுகளில் தன்னிச்சையாக வளர்ந்திருக்கும் பாலை மரம், வீர மரம், விளா மரங்களைச் சூழ்ந்திருப்பார்கள்.அது தான் அவர்களின் உச்ச பட்ச இயற்கையுடனான நட்பு.பள்ளிக்குப் போகாத மழை நாட்களில் குளத்தோர மரங்களில் ஏறி குளத்துக்குள் குதிப்பதும் அவிழ்ந்து விழும் அரைக் கால் சட்டைகளை ஒரு கையால் பிடித்தபடி ஒற்றைத் தடியில் ரின் மூடியைப் பொருத்தி அதைத் தள்ளிய படி வீதியால் ஓடுவதும் தான் அவர்களின் பெரும்பாலான பொழுது போக்கு.

ஒவ்வொரு பறவைகளின் குரல் ஒலிக்கும் போதும் அதற்குத் தமிழில் அர்த்தம் கற்பித்துக் கொள்வதில் இரு பாலாரும் வல்லவர்கள்.இரவு ஆளரவம் எல்லாம் அடங்கிய பிற்பாடு துல்லியமாய் கேட்கும் ஒரு பறவையின் தனித்துவமான குரல்.'வாடா பாப்பம்; கொட்டப் பாக்கு'என்பதாக இருக்கும் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.அது என்ன பறவை என்று இது வரை தெரியவில்லை.குயிலோடு தாமும் சேர்ந்து கூவுவார்கள். அது திருப்பிக் கூவினால் அது தான் அன்றய நாளுக்குரிய சிறுவர்களின் மகிழ்ச்சி.கரிக்குருவிகள்,புலுணிகள்,கிளிகள் போல வேறு பல பறவைகளும் அங்கிருந்தன.ஆனால் சிறுவர்கள் யாருமே அவற்றைப் பிடித்துக் கூட்டிலடைத்து வைத்ததில்லை. காணிகள் உழுகின்ற போது எங்கிருந்தோ வந்து சேரும் பலவகையான பெயர் தெரியாத பறவைகள்.

மயில்கள் வந்து வீட்டில் வளர்க்கும் கோழிகளோடு வந்து தானியம் கொறிக்கும்.காலை நேரம் அவைகளின் பெரிய 'மாயோ மாயோ' என்ற குரல் பல வீடுகளுக்குத் துல்லியமாகக் கேட்கும். மிகவும் செழித்து வளர்ந்த ஆண்மயில்கள் பட்ட மரக் கிளைகளில் தம் தோகையைக் கீழே தொங்கப் போட்ட வாறு தன் நீலப் பட்டுக் கழுத்தைக் கம்பீரமாக நிமிர்த்தி தன் மஞ்சள் நிற அலகால் மாயோ என்று கத்துவதைப் பார்ப்பது கண்கொளாக் காட்சி. அதிலும் காலை நேரச் சூரியன் அதன் கழுத்தில் பட்டுத் தெறிக்கும் போது கிடைக்கும் வண்ண ஜாலங்கள் இன்னும் அழகு.



வன்னிப் பகுதியில் செம்பகம் என்று ஒரு பறவை அடிக்கடி வரும்.மண்ணிறமும் கறுப்பும் கலந்த நிறம் அதற்கு.அவை எங்கு வசிப்பன என்று தெரிவதில்லை.ஆனால் வீதியோர வேலிகள் மற்றும் அடர்ந்த சிறு மரக்கிளைகளில் வந்து அமர்ந்திருக்கும்.கூச்ச சுபாவம் கொண்டவை.சிறு பிள்ளைகள் அதனை எங்கேனும் கண்டால் உடனே "செம்பகமே செம்பகமே மாமி வாறா ஒழிச்சிரு" என்று பாட ஆரம்பித்து விடுவார்கள்.(நானும் இப்படி சிறுவயதில் இப்படிப் பாடி இருக்கிறேன்.) அவை கால்களை மெல்ல மெல்ல அரக்கி மர இலைகளுக்குள் ஒழிந்து கொள்ளும்.ஆனால் பறந்து போய் விடாது.அது ஒழிவதைப் பார்ப்பதில் சிறுவர்களுக்கு பெரும் குதூகலம்.இது வன்னிச் சிறுவர்களிடம் காணப்பட்ட ஒரு தனித்துவ வழக்கென்றே நம்புகிறேன்.

காணிகள் எல்லாம் பெரிய பெரிய வளவுகளாக இருப்பதாலும் எல்லைகள் காட்டுப் புறங்களாக இருப்பதாலும் மான்களும் ஒன்றிரண்டு வந்து போகும்.யானைகள் வந்து தென்னைகளை முறித்துக் குருத்துக்களைச் சாப்பிட்டுப் போகும்.அதனால் தோட்டக் காரர்கள் மரங்களில் பரண் அமைத்துக் காவலிருப்பார்கள்.சில சிறுவர்களும் அடம் பிடித்து அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள்.பன்றி, மான் என்று வேட்டைகளுக்கும் செல்வார்கள்.


ஒரு முறை எங்கள் வீட்டு வளவுக்குள் - அது - வவுனியாவில் இருந்து 10 மைல் யாழ்ப்பாணம் நோக்கிய பாதையில் இருந்தது. தென்னம் பிள்ளைகள் பல நட்டிருந்தோம்.அவற்றை யானைகள் வந்து சாப்பிட்டுச் சென்று விடுவது வழக்கு.அந்த நேரம் வவுனியா நகர் புறத்தில் பிரச்சினை காரணமாக என் சித்தி குடும்பத்தினர் நம்மோடு வந்து தங்கியிருந்தார்கள்.அவர்கள் நகர் புறத்தவர்கள்.இரவு எல்லோரும் படுத்து விட்டோம். நேரம் பருமட்டாக ஒரு 1 மணி 2மணியாக இருக்கலாம்.வீட்டின் பின் புறம் யானைகள் வந்து தென்னைகளை முறிக்கும் சத்தம் கேட்டது.அவற்றை விரட்டுவதற்கு கிராமத்தவர்கள் ஒரு உத்தி வைத்திருந்தார்கள். அது தென்னோலையில் செய்யப்பட்ட பந்தத்தால் தீப்பந்தத்தைக் காட்டியபடி கூ... என்று கூவிக்கொண்டு ஓடினால் அவை ஓடி விடும் என்பது தான் அது.

எனவே நாமும் எல்லோரும் எழும்பி (வவுனியாவில் இருந்து வந்த தம்பி, தங்கை உட்பட.எல்லோருக்கும் அப்போது பதின்ம வயது)தயாராகக் கட்டி வைத்திருந்த தீப்பந்தத்தை எரித்த படி நாம் எல்லோரும் கூ... என்ற படி ஓடி அவற்றை விரட்டி விட்டோம். பிறகு படுக்கைக்குப் போகும் போது என் தங்கை முறையான வவுனியாப் பட்டணக்காறி மகிழ்ச்சியும் சிரிப்பும் உற்சாகமுமாகச் சொன்னாள்.


"அக்கா, இது நல்ல முசுப்பாத்தியான உலகமா இருக்கு.":)

அப்படி இருந்தது வன்னிக் கிராமம் ஒன்றின் அன்றய சிறுவர்களின் வாழ்வியல்.

(படங்கள்:நன்றி - இணையம்)
This entry was posted on 6:29 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On July 25, 2010 at 8:31 PM , Pragash said...

மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்த்தியதற்கு நன்றி.

 
On July 26, 2010 at 4:34 AM , கானா பிரபா said...

சிறப்பாக இருந்த பதிவுக்கு மிக்க நன்றி

 
On July 26, 2010 at 6:17 AM , Subankan said...

அருமை :)
பெரும்பாலானவை நானும் சிறுவயதில் யாழில் செய்ததுதான். நினைவுறுத்தலுக்கு நன்றி.

 
On July 26, 2010 at 7:40 AM , குறுக்கால போவான் said...

வன்னியூரில் வாழ்ந்த வசந்த காலங்களை மறக்க முடியாது. மணி ஆச்சி உங்களின் இளமைக் கால நினைவு மீட்டலுக்கு நன்றிகள். சூரப்பழம், பாலப் பழம், வீரப்பழம், விளாம்பழம் இவை எல்லாம் ஒரு சீசனுக்கு வரும் பழங்கள். பாலப்பழம் நல்ல பேமஸ். இந்தப் பாலப் பழத்தை வன்னியில் பலர் வீதி விதியாக கொண்டு சென்று சுண்டுப் பேணியால் நிறுத்து விற்பார்கள். ஐந்து ரூபாவிற்கு ஒரு சுண்டு என்ற ரீதியில் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். காடுகளில் போய் நண்பர்களுடன் அடிபட்டும் இந்தப் பழங்களை ஆஞ்சு சாப்பிடுவோம். இடியன் துவக்குப் பற்றியும் எழுதியிருக்கலாம். நெருப்புக் குச்சி மருந்து கலந்து மிருகங்களை வேட்டையாடுவதென்பது தனிக் கலை. வற்றல்/ வத்தல் போடுவது பற்றியும் எழுதியிருக்கலாம். சைக்கிள் றிம்மை எடுத்து அந்த கம்பிகளிலை இறைச்சியை கொழுவி வத்தல் போட்டு விற்கிறதும் ஒரு தனிக் கலை மணியாச்சி. மான், மரை, பன்றி, உடும்பு, அகிளான், உக்கிளான், முயல், குரங்கு, ஆக்காட்டி, மைனா, மயில் இவை எல்லாம் நான் சாப்பிட்டிருக்கிறன்.
மயில் இறைச்சி சுப்பர் அயிட்டம். பிறகு போராளிகள் மயில் வேட்டையை தடை செய்து போட்டினம்.
கரிப்பட்ட முறிப்பு, கனகராயன்குளம், மன்னகுளம், வெள்ளாங்குளம், மாங்குளம் இவை எல்லாம் நான் ஒரு காலத்திலை சைக்கிளிலை திரிஞ்ச காலங்களை மீளவும் நினைத்து பார்க்க வைத்து வீட்டீர்கள். புதூர் நாகதம்பிரான் திருவிழா, வற்றாப்பளை திருவிழாவுக்கெல்லாம் நாங்கள் மாட்டு வண்டிலிலை ஐயாவோடை போயிருக்கிறம்.

 
On July 26, 2010 at 9:35 AM , ஃபஹீமாஜஹான் said...

"இரவு ஆளரவம் எல்லாம் அடங்கிய பிற்பாடு துல்லியமாய் கேட்கும் ஒரு பறவையின் தனித்துவமான குரல்.'வாடா பாப்பம்; கொட்டப் பாக்கு'என்பதாக இருக்கும் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள்"

"வாடா பாப்பம்; கொட்டப் பாக்கு"
இக்குருவியை கவிஞர் நிலாந்தன் தனது "பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் மூன்று" என்ற கவிதையில்
//கொட்டைப் பாக்குக் குருவி
காடு விடு தூது
காட்டின் புதிரும் சோகமும்
முதுமரங்களின் அமைதியும் கம்பீரமும்
அதன் குரலாயினவோ
"வாடா பாப்பம் கொட்டைப் பாக்கா"//
என கவித்துவ அழகோடு குறிப்பிடுகிறார்.

 
On July 27, 2010 at 3:37 PM , yarl said...

எமது தாயக நினைவுகள் மீண்டும் எம் கண்முன். பதிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

அன்புடன்
மங்கை

 
On July 28, 2010 at 6:36 PM , யசோதா.பத்மநாதன் said...

பிரகாஷ்,பிரபா,சுபாங்கன்,யாழ் - உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.:)

 
On July 28, 2010 at 7:06 PM , யசோதா.பத்மநாதன் said...

வாங்கோ குறுக்கால போவான்.:-)உங்கள் பின்னூட்டத்தின் ஒவ்வொரு சொல்லிலும் சந்தோஷம் ததும்புகிறது.

ஆஹா.. எவ்வளவு நினைவுகளை ஞாபகமூட்டி விட்டீர்கள்!நீங்கள் நிச்சயமாக ஆரம்ப காலத்திலிருந்து வரும் எங்கள் முற்றத்து உறவு தான் என்பது மணியாச்சியை வாஞ்சையோடு அழைப்பதிலிருந்து தெரிகிறது.:)

பழங்கள் பற்றிச் சொன்னீர்கள்.நீங்கள் சொன்னதோட கஜுப்பழம், மற்றது தாமரைக் கொட்டை...இப்பிடியும் சிலது இருக்குதெல்லோ?

நீங்கள் சொன்ன பிறகு தான் நினைவுக்கு வருகிறது சைக்கிள் றிம்முக்குள் வாகாக தடியை வைத்து லாவகமாக விழாமல் உருட்டிக் கொண்டு போவதும் சிறுவர்களின் விளையாட்டு.

மற்றது இறைச்சி, வேட்டை இதெல்லாம் பற்றி நீங்கள் கட்டாயம் ஒரு பதிவு போட வேண்டும்.

புதூர் நாகதம்பிரான் கோயில் திருவிழா! ஆஹா..மறக்க முடியுமா அந்த நாளை? இரவிரவாக நடக்கும் கொண்டாட்டம்.ரைக்டர்களிலும் லொறிகளிலும் போகும் மக்கள் கூட்டம்! மறு நாள் காலை தலை எல்லாம் புழுதி படிய அம்மம்மா குழல் ஊதிப் போகும் சனம்.

எத்தனை எத்தனை மகிழ்வான தருணங்கள் அவை.நினைவுகளால் நிறைகிறது நெஞ்சம்.

என் நாளை மகிழ்வாக்கினீர்கள்! நன்றி அதற்கு!

 
On July 28, 2010 at 7:18 PM , யசோதா.பத்மநாதன் said...

பஹீமா, வாங்கோ!:)கவிஞைக்கு வணக்கம்!வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

அப் பள்ளு எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால் வ.ஐ.ச.ஜெயபாலன் 'பாலி ஆறு நகர்கிறது'என்றொரு கவிதை எழுதியிருக்கிறார்.(பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் கவிதைத் தொகுதி)அதிலும் நீங்கள் வன்னி மண்ணின் அழகைக் காணலாம்.

கிடைத்தால் இந்தப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். எல்லாக் கவிதைகளும் திறம்.உங்கள் 'எனது சூரியனும் உனது சந்திரனும்'மாதிரி!:)