Author: தமிழ் மதுரம்
•7:07 PM
’என்ன சின்னாச்சி, உன்ரை பேரன் சாப்பிட மனமில்லாதவன் போல எதைக் குடுத்தாலும் வேண்டாம் வேண்டாம் என்கிறான். என்ன விசயம்?
’’அதடி பிள்ளை உவனை முந்த நாள் உந்தக் ஆறுமுகத்தாற்றை பொட்டையின்ரை கலியாணத்துக்கெல்லே கூட்டிக் கொண்டு போனனாங்கள். அவன் தனக்குப் பருப்புக் கறியும் சோறும் நல்ல விருப்பம் என்டு, போட்டு ஒரு பிடியெல்லே பிடிச்சவன். அது தான் ஆரோ நாவூறு கொண்டு போட்டினம் போல.
’’சரி சும்மா வளவளவெண்டு கதைக்கிறதை விட்டிட்டு பொழுது பட முதல் ஓடிப் போய் வேப்பமிலையும், செத்தல் மிளகாயும், உப்பும் எடுத்துக் கொண்டுவா! உவனுக்கு ஒருக்கால் தடவிப் போடுவம். பிறகு இரவுச் சாப்பாடு சாப்பிடும் போது ஞாபகப்படுத்தடி பிள்ளை, ஒருக்கா தோண்டியும் கொட்டுவம்.


மேற்படி உரையாடலின் மூலம் நான் சொல்லவருவது என்னவென்று புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தடவிப் போடுதல் என்றால் என்ன? ஊரில் வடிவான பிள்ளையள் என்றால், தன்ரை பிள்ளையின் அதீத சுட்டித்தனச் செயற்பாட்டால் யாராவது நாவூறு கொண்டு போட்டார்கள் என்ற நினைப்பில் தன் பிள்ளையின் நாவூற்றினை/ கண்ணூற்றினை அகற்ற வேண்டும் நோக்கில் ‘உப்பு, செத்தல் மிளகாய், வேப்பமிலை’ இந்த மூன்றையும் இணைத்து அங்காலை திரும்பு, இங்காலை திரும்பு என்று சொல்லி உடம்பெல்லாம் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து தடவிப் போட்டு அப்பிடியே நீ இந்தப் பக்கம் பார்க்காதை என்று சொல்லி ‘’தூ... தூ... தூ.. என்று மூன்று தரம் துப்பிப் போட்டு நெருப்பினுள்/ அடுப்பினுள் போடுவார்கள்.


நெருப்பினுள் போடும் போது சின்னச் சின்ன வெடிச்சத்தோடை அந்த உப்பு, வேப்பமிலை, செத்தல் மிளகாய் வெடிச்சு எரியும், நிறைய நெரம் வெடிச்செரிந்தால் நிறைய நாவூறு என்று சொல்லுவார்கள். இப்பிடியான விசயம் நடக்கிற நேரம் ‘ நான் படிச்ச விஞ்ஞானத்தின் படி உப்பை நெருப்புக்கை போட்டால் வெடிக்கும் தானே என்று நான் ஒருவரிடம் கேட்டு விட்டேன். பிறகு நாவூறு எரியுதென்று சும்மா ‘’பேக்காட்டல் விடுறீங்களோ?
உனக்கு விசயம் விளங்காது. நீ சின்னப் பொடியன். சொல்லுறதைக் கேள் என்று அதட்டிப் போட்டார்கள். (இது ஒரு மூட நம்பிக்கை தானே???)


இந்தப் பழக்கம் இன்றும் எமது ஈழத்தவர்கள் மத்தியிலே இருக்கிறது. ஒரு சிலர் இந்த உப்பு செத்தல் மிளகாய், வேப்பிலை போன்றவற்றால் தடவிப் போட்டு அடுப்பிற்குள், நெருப்பினுள் போடுவார்கள். வன்னிப் பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் இந்த மூன்று பொருட்களினாலும் தடவிப் போட்டுக் கிணற்றினுள் போடுவார்கள்.


இதிலை இரண்டு முறைகளுமே ஈழத்தில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிற பாட்டிமாரிடம் வழக்கத்தில் உள்ளன.

இனித் தோண்டிக் கொட்டுதல் பற்றிப் பார்ப்போம்: இந்தக் தோண்டிக் கொட்டுதலினை ‘சாப்பிட மனமில்லாது ஒருவர் அடம் பிடிக்கும் போது செய்வார்கள். உணவினை எடுத்து ஒரு பிடி பிடித்து அவரின் வாயிற்குள் உண்ணக் கொடுத்து, அந்தப் உணவினை அப்படியே நெருப்பினுள்/அடுப்பினுள் துப்பச் சொல்லுவார்கள். இப்படி மூன்று முறை நாவுறு கழியட்டும் என்று சொல்லிச் செய்வார்கள். இறுதியாக ஒரு சொட்டுத் தண்ணியும் கொடுத்து அப்பிடியே அதனையும் துப்பச் சொல்லுவார்கள்.


இப்பத் தான் நாவூறு கழிச்சிருக்கிறம். கொஞ்ச நேரம் பொறுத்துச் சாப்பிடலாம் என்று சொல்லித் தான் சாப்பாடு கொடுப்பார்கள்.



இம் முறைகள் இரண்டும் ஈழத்தில் இற்றைவரை முதியவர்கள் வாயிலாக வழக்கத்திலுள்ளன.
இது பற்றி மேலதிக விடயங்களை யாராவது அறிந்திருந்தால் சொல்லுங்கோ.


இனி பொருள் விளங்காத ஒரு சில நண்பர்களுக்காகப் பொருள் விளக்கங்கள்.



*நாவூறு கொண்டு போட்டீனம்: ஊர் கண்ணு பட்டுப் போச்சு.
*ஒரு பிடியெல்லே பிடிச்சவன்: ஒரு பிடி பிடித்தல் என்பது நல்லா ஆசையாக விடாமல் மூச்சு வாங்கப் போட்டுச் சாப்பிடுவது/ உணவு உண்பதனைக் குறிக்கும்.


*வளவளவெண்டு கதைக்கிறது: ஓயாமல் கதைத்தல், தொடர்ச்சியாக உரையாடுதல்.


*பொழுது பட முதல்: இருள்வதற்கு முன்/ அந்தி சாய முதல்.

*தடவிப் போடுதல்: திருஷ்டி கழித்தல்/ கண்ணூற்றினை அகற்றுவதற்குச் செய்யப்படும் ஒரு வகை செயற்பாடு.


தோண்டியும் கொட்டுதல்: உணவு உண்ணுதலின் போது காணப்படும் நாவூற்றினை அகற்றச் செய்யும் முறை.


*பேக்காட்டல்: ஏமாற்றுதல்/ பூச்சாண்டி காட்டுதல்/ சுத்துமாத்துச் செய்தல்.


*அடுப்பு: எங்கடை ஊரிலை விறகின் மூலம் வீட்டிற்குள்/ சமையலறையில் உணவினைச் சமைக்கும் இடத்தினை அடுப்படி/ அடுப்புப் போட்டு என்று சொல்லுவார்கள்.. இப்போதெல்லாம் நவீன பெயர்களிலை இதனை அழைக்கத் தொடங்கி விட்டார்கள்.


என்னை இப் பதிவினை எழுதத் தூண்டிய நண்பர் கானாபிரபாவின் ’’கண்ணூறு படப்போகுது, நாவூறு கழிப்பம்....! பதிவினைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
|
This entry was posted on 7:07 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On July 10, 2010 at 2:30 AM , Pragash said...

என்ன தமிழ்மதுரம், கனகாலம் பழசுகளோடை இருந்திருக்கிறீங்கள் போல?, ஊர்ச்செம்பாட்டு மண்புழுதி வாசம் தூக்கலாயிருக்கு. என்னுடைய பங்கிற்கும் சில விசயங்கள். நாவூறு - நாக்கு+ஊறு, இங்கு ஊறு எனபது தீங்கு என்னும் பொருளிலும் வரும். நாங்களும் ஊரில இருக்கும் போது சில விசயங்களை பார்த்தவுடனை எங்களுக்கும் நாவூறும் அல்லது எச்சிலூறும். உ+ம்;முத்தின சேலம்மாங்காய்+உப்புத்தூள்+மிளகாய்த்தூள், குலம் ஐஸ்கிறீம். கண்ணூறு பட்டுப்போச்சு - கண்+ஊறு அல்லது தீங்கு விளைவிக்கும் பார்வை படுதல். தன்னுடைய பிள்ளை ஒழுங்கா சாப்பிடுதில்லை பக்கத்து வீட்டுப்பிள்ளை மூக்குமுட்ட பிடிக்குதே என சிலர் பார்க்கும் போது அவர்கள் கண்ணிலேயே எரிச்சல் தெரியும். (இது பொருத்தமான உதாரணமோ?)பேக்காட்டு - பேய் காட்டுதல். இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுதல்.

 
On July 10, 2010 at 2:39 AM , Pragash said...

அட ஏற்கனவே பிரபாண்ணை தன்னுடைய பதிவில் எல்லாம் விளக்கமா போட்டிருக்கிறார். நான்தான் முந்திரிக்கொட்டை மாதிரி.......

 
On July 10, 2010 at 4:03 AM , ஹேமா said...

சுத்திப் போடுறது எண்டும் சொல்லுவினம் கமல்.

 
On July 11, 2010 at 1:29 AM , தமிழ் மதுரம் said...

Blogger PRAKASH said...

என்ன தமிழ்மதுரம், கனகாலம் பழசுகளோடை இருந்திருக்கிறீங்கள் போல?, ஊர்ச்செம்பாட்டு மண்புழுதி வாசம் தூக்கலாயிருக்கு. என்னுடைய பங்கிற்கும் சில விசயங்கள். நாவூறு - நாக்கு+ஊறு, இங்கு ஊறு எனபது தீங்கு என்னும் பொருளிலும் வரும். நாங்களும் ஊரில இருக்கும் போது சில விசயங்களை பார்த்தவுடனை எங்களுக்கும் நாவூறும் அல்லது எச்சிலூறும். உ+ம்;முத்தின சேலம்மாங்காய்+உப்புத்தூள்+மிளகாய்த்தூள், குலம் ஐஸ்கிறீம். கண்ணூறு பட்டுப்போச்சு - கண்+ஊறு அல்லது தீங்கு விளைவிக்கும் பார்வை படுதல். தன்னுடைய பிள்ளை ஒழுங்கா சாப்பிடுதில்லை பக்கத்து வீட்டுப்பிள்ளை மூக்குமுட்ட பிடிக்குதே என சிலர் பார்க்கும் போது அவர்கள் கண்ணிலேயே எரிச்சல் தெரியும். (இது பொருத்தமான உதாரணமோ?)பேக்காட்டு - பேய் காட்டுதல். இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுதல்//

நன்றிகள் பிரகாஷ். ஊர் நினைவுகளை எப்படி மறக்க முடியும் தோழா? உங்களின் விளக்கங்களிற்கும் நன்றிகள்.

 
On July 11, 2010 at 1:38 AM , தமிழ் மதுரம் said...

ஹேமா said...

சுத்திப் போடுறது எண்டும் சொல்லுவினம் கமல்.//


நன்றிகள் ஹேமா.

 
On July 11, 2010 at 7:33 AM , சஞ்சயன் said...

அய்யோ!
மனே! எது மனே நல்ல தமிழ்?
சரி.. சரி.. நான் மட்டக்களப்பு ஆள்..
மற்றவர்கள் நினைப்புது மாதிரி நானும் நம்மூர் தமிழ்த் தான் சரியானது என்று நினைத்துக்கொள்கிறேன்.