Author: Pragash
•9:31 AM
இடுப்பில் இருந்து நழுவிக்கொண்டு இருக்கும், பொத்தான் அறுந்த அரைக்கால் சட்டையை இறுக இழுத்து பிடித்துக்கொண்டு, அரிவி வெட்டுக்கு ஆயத்தமாய், மஞ்சள் நிற நெல்மணிகளின் பாரம் தாங்காமல் கதிர் தலைசாய்த்து படுத்திருந்த வயல் வரப்புகளின் வேகமாய் ஓடிக் கொண்டிருக்க, சுருக் .காலில் ஏதோ குத்த வேகம் தடைப்பட்டது. ஆ வென லேசாக முனகிக் கொண்டு ஒற்றை காலில் கெந்தியபடி, பாதத்தை தூக்கி பார்த்தால். அதில் எதுவும் இல்லை. அப்படி எண்டால் குத்தினது நெருஞ்சி தான். வரப்பில் இருந்த நெருஞ்சி செடியை பார்த்ததும் முள்ளு குத்தின வலி மறந்து போக, மெல்ல குனிந்து அதன் சின்னஞ்சிறு இலைகளை மெதுவாக விரல்களால் வருட, இலைகள் மெதுவாக ஒடுங்கி சுருங்கும் வடிவை பார்த்தபடி மனம் அதில் லயித்தது.
என்ன ராசா தொட்டா சிணுங்கி காலில குத்திப்போட்டுதோ? தொட்டாசிணுங்கி மேலிருந்த கவனம் கலைய நிமிர்ந்து பார்த்தேன்.கசங்கிய நைந்த நூல்புடவையும் தலையில் இறுக கட்டிய முண்டாசுத்துணி, கையில் அரிவிச்சத்தகத்துடன் ஒரு மூதாட்டி புன்முறுவலுடன் கேட்டபடி வரப்புகளில் போய்க்கொண்டிருந்தார். பின்னால் ஆண்களும் பெண்களுமாக நாலைந்து பேர் கையில் சத்தகங்களுடன் வரிசையாக போய்க்கொண்டிருந்தனர். எங்கேயோ அரிவி வெட்டுக்கு போய்க்கொண்டிருக்கினம் போல. ஏற்கெனவே ஆங்காங்கு வெட்டு நடந்துகொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. சிலவயல்களில் வெட்டு முடிந்து நெல் போர் (சில இடங்களில் சூட்டுப்போர் என சொல்கிறார்கள்) குவித்து வைத்திருந்தார்கள். மாரிமழையில் வெள்ளம ததும்பி, தளம்பி நின்ற பச்சைப்பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியான வயல்வெளிகள் மாறி, வெள்ளம் வற்றி மஞ்சள் கதிர் காற்றிலாடிய காட்சிகளை காண இனி அடுத்த வருடம் வரைக்கும் காத்திருக்க வேணும்.பெரும்பாலும் யாழ்ப்பாணத்துக்காணிகளில் மாசி நடுப்பகுதியில் அரிவி வெட்டு துவங்கி விடும். 

ஈழத்து விவசாயப்பிரதேசங்களில் நெற்செய்கை இரண்டு போகங்களில் செய்யப்படுவதுண்டு. ஒன்று பெரும்போகம், பருவமழையை அண்டியகாலங்களில் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்துகாணிகளில் பெரும்பாலானவை பெரும்போக காணிகள். மற்றது சிறு போகம், ஆறு குளங்களை அண்டிய பிரதேசங்களில் செய்யப்படுவது. வன்னி பிரதேசங்களில் இரண்டு போகமும் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில ஆறு குளம் ஏதும் இருக்கோ? நான் அறிஞ்ச வரைக்கும் வழுக்கையாறு ஒன்று தான் யாழ்ப்பாணத்தில இருக்குது என நினைக்கிறேன். ( வீட்டுக்கிணத்தில வளர்க்கிறதுக்கு, வழுக்கையாத்தில போய் கெளுத்தி மீன் பிடிச்சுக்கொண்டு வந்து வீட்டு கிணத்தில விட்ட அனுபவம் ஒன்றிருக்கு.). இப்ப பெரும்போக அறுவடை தான் நடந்து கொண்டிருந்தது. பக்கத்தில அரிவி வெட்டிக்கொண்டிருந்த ஒரு வயல் பக்கமாய் போய் வரப்பில் அமர்ந்து கொண்டேன். வெட்டுபவர்கள் குனிந்த நிலையிலேயே வெட்டும் லாவகமும், ஒரு கை கதிர்களை அடியோடு சேர்த்து கொத்தாக பிடிக்க மறுகையில் இருந்த அரிவி சத்தகம் சரக் சரக் எனும் சத்தத்தோடு கதிர்களை அறுக்கும் வேகமும் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். 

என்னடா தம்பி பார்க்கிறாய்? நீயும் வெட்டிப்பாக்கிறியா? வயலில் வெட்டிக்கொண்டிருந்த பெரியவர் அழைக்கவும், நானும் வலு சந்தோசமா ஓடிப்போய் அவரின் கையில் இருந்த சத்தகத்தை வாங்கிக்கொண்டேன். பார்த்து வெட்டு கையை கிய்யை அறுத்துப்போடாதை சொல்லிக்கொண்டே சத்தகத்தை தந்தார். பார்க்கும்போது இலகுவாய் ப்பூ இவ்வளவுதானா என தெரியும் அவ்வேலை எவ்வளவு கடினமானது என சத்தகத்தை கையில் வாங்கிய சிலநிமிடங்களில் விளங்கியது. ஓரடி வெட்டுவதற்குள் முதுகு விண் விண்ணென்று வலித்தது. இவர்கள் வயல் வேலையிலேயே தொடர்ந்து ஈடுபடுவதால் இவர்களுக்கு இது பழக்கமாகி விட்டிருக்கும். நானும் மெல்ல முதுகை நிமிர்த்தவும் பெரியவர் சிரித்தார். சத்தகத்தை அவர் கையில் கொடுத்து விட்டு மெல்ல நழுவினேன். உச்சிவேளை நெருங்கும் சமயத்தில் கிட்டத்தட்ட அரைவாசி வயலுக்கு மேல் வெட்டி முடித்திருந்தார்கள். வெட்டிய நெல்கதிர் கற்றைகள் அழகாக அடுக்கி வைத்திருந்தனர். இனி மத்தியான சாப்பாட்டிற்கு பிறகு போரடிப்பு நடக்கும் இதுமுதல்அடிப்பு.ஆண்கள் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். 

வயலின் ஒரு மூலையில் பெரிய சாக்குப்படங்கு ஒன்று விரிக்கப்பட்டிருக்க, அதன் மேல் ஒருவர் கயிற்று துண்டொன்றுடன் ஆயத்தமாக நின்றிருந்தார். பெண்கள் ஆங்காங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த கதிர்களை (நெற்போர்) பெரிய கத்தையாக ஒன்று சேர்த்து தலையில் சுமந்து கொண்டு வந்து படங்கின் மேல் நின்று கொண்டிருந்தவரிடம் கொடுக்க, அவர் அதை கையில் வைத்திருந்த கயிற்றால் ஒரு சுற்று பிடித்து வாங்கி படங்கின் மீது ஓங்கி நாலைந்து தரம் அடித்தபின் அந்த கத்தையை படங்கிற்கு வெளியில் ஆயத்தமாக நிற்கும் இருவரிடமும் எறிய, அவர்கள் லாவகமாக பிடித்து வைக்கோல் போர் அடுக்குவது போல் வட்டமாக கூம்பு வடிவில் அடுக்கி (சூடுவைப்பு) கொண்டிருந்தனர். அதில் இன்னும் கதிர்கள் உதிராமல் இருந்தன. படங்கில் நிற்பவர் கதிர்கத்தையை அடித்த இடத்தில் நெல்மணிகள் குவிந்து கொண்டிருந்தன. 

வேலை சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் நடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக மாலை நான்கு மணியளவில் கதிரடிப்பு நிறைவு பெற்றதும், இன்னொருவர் கொண்டுவந்திருந்த சுளகில் நெல்லை அள்ளி தலைக்கு மேல் தூக்கி பிடித்து காற்று வீசும் திசையில் சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டிருந்தார். அதற்கு பெயர் நெல் தூற்றுதல். "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" எண்டொரு பழமொழி கேள்விப்பட்டிருப்பியள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதே காரியத்தை முடித்துக்கொள் என பொருள் வரும்படியான பழமொழி அது. அந்த பழமொழிக்கு அடிப்படையாக இருக்கும் ஒரு செயல் இது தான். கொட்டும்போது நெல்மணிகள் நேராக கீழே விழ அதில் இருந்த வைக்கோல் தூசிகள் அகன்று வீசும் காற்றின் திசையில் பறந்து போய்க்கொண்டிருந்தன. 


எல்லாம் முடிந்தாயிற்று. வயல் சொந்தக்காரர் தயாராக கொண்டு வந்திருந்த சாக்குப்பைகளில் குவிந்திருந்த நெல்லை போட்டு கட்டி, மாட்டுவண்டியில் ஏற்றிவிட மாடுகள் மெல்ல வீடு நோக்கி நகரவாரம்பித்தன. காலையில் கதிர்கள் தலைசாய்த்து படுத்திருந்த வயலில் இப்போது பத்து பன்னிரண்டு அடி உயரத்தில் பிளாஸ்டிக் படங்கால் மூடிக்கட்டப்பட்ட சூட்டுப்போர் ஒன்று தலை நிமிர்ந்து நின்றிருந்தது. அறுவடையான வயலில் இப்போது வெண்கொக்குகளும், புறாக்களும் காகங்களும் மேய்ந்து கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்து காணிகள் எல்லாம் பரப்புக்கணக்கில் தான் அளவிடப்படுகின்றன. வேறு அளவீடுகள் ஏதும் இருந்தால் சொல்லுங்கோ. ஏக்கர் கணக்கு காணிகளை பாக்கிறதென்டால் வன்னிக்கு தான் போகவேணும். 


அரிவி வெட்டு = அறுவடை, அரிவிச்சத்தகம்= அறுவடைக்கு பாவிக்கிற அரிவாள் இது இடத்துக்கிடம் பெயர் மாறுபடலாம். வேறு பெயர்கள் தெரிந்தால் சொல்லுங்கோ. படங்கு= இது சாக்குகளை இணைத்து செய்வது. சிலபேர் போரடிப்புக்கு என பிரத்தியேகமாய் செய்த பாய் பாவிப்பினம். அதை கதிர்ப்பாய் என்று சொல்லுவினம். போரடிப்பு= வெட்டினவுடன் வயலிலேயே கதிர்களை அடித்து நெல்லை சேகரிப்பது. ஆனாலும் எல்லா நெல்லும் இதில் உதிர்ந்து விழாது. அடுக்கி சூடு வச்சு நன்றாக காய்ந்த பின்னர் ஓரிரு மாதத்திற்கு பிறகு மாடுகளை வைத்து மிதித்து நெல்மணிகளை உதிரவைப்பது சூடடிப்பு. இதை பற்றி பிறகு நான் எழுதுகிறேன். ஈழத்தில் பெரும்பாலும் ஆங்கில நாள்காட்டி முறை பயன்படுத்தினாலும் விவசாய செய்கைகளுக்கு தமிழ் நாள்காட்டி முறையே பயன்படுத்தபடுவது வழக்கம்.          

This entry was posted on 9:31 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On June 28, 2010 at 1:55 AM , தமிழ் மதுரம் said...

நான் அறிஞ்ச வரைக்கும் வழுக்கையாறு ஒன்று தான் யாழ்ப்பாணத்தில இருக்குது என நினைக்கிறேன்//


ம்... இதிலை என்ன விசேசம் என்றால் இந்த வழுக்கையாறு மழை காலத்திலை தான் நல்லா ஓடும்,

 
On June 28, 2010 at 1:57 AM , தமிழ் மதுரம் said...

பதிவு அருமை. அருவி வெட்டை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் பிரகாஷ். அருவி வெட்டு இடம் பெறும் போது ஒரு சிலர் பாடல்கள் பாடியபடியும் அருவி வெட்டுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இப் பாட்டினை அருவி வெட்டுப் பாடல் என்று அழைப்பார்கள். ஆனால் என்ன பாட்டுப் பாடுவார்கள் என்பது தெரியாது.

 
On June 28, 2010 at 3:37 AM , ஹேமா said...

உண்மையில் "அரிவு வெட்டு" சொல்லக் கேட்டிருக்கிறேனே தவிர முழு விளக்கமும் தெரிந்துகொண்டேன்.நன்றி பிரகாஷ்.

 
On June 28, 2010 at 5:20 AM , Pragash said...

நன்றி தமிழ் மதுரம், ஹேமா. ஈழத்து நாட்டார் இலக்கியங்களில் அரிவு வெட்டுப்பாடல், நடவுப்பாடல், உழவுபாடல், பழமொழிகள் என்று பல விவசாயம் சார்ந்த இலக்கியங்கள் இருக்கின்றன. ஈழத்தில் இருக்கும் போது அவற்றில் ஆர்வம் காட்டவில்லை. நாடு விட்டு நாடு வந்த பின்னர் அவற்றை தேடுவதென்பது கல்லில் நார் உரிக்கும் வேலை. எப்படியிருப்பினும் அவற்றை தேடி ஈழத்து முற்றத்தில் வெளிக்கொணர முயற்சி செய்கிறேன்.

 
On June 28, 2010 at 12:59 PM , Anonymous said...

சில நாட்களுக்கு முன்னர் தான் உங்கள் தளம் பற்றி அறிந்து கொண்டேன். அருமையான வலைத்தளம். உங்கள் பணி தொடர்ந்து நடப்பதற்கு தமிழன்னையை வேண்டிக்கொள்கிறேன். அத்துடன் உங்கள் உதவி எனது இந்தப் பதிவிற்குத் தேவைப்படுகிறது. அதனை கொஞ்சம் சரி பார்த்து தருவீர்களானால் பெரும் உதவியாக இருக்கும். கோடி நன்றிகள். அனா

http://reap-and-quip.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF

 
On December 15, 2011 at 6:04 AM , யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அரிவி வெட்டுப் பாடல் தேவையுள்ளதால் உங்கள் பதிவுள் வந்தேன். மிக நன்கு விளக்கியுள்ளீர்கள்.
உங்களுக்கு அரிவி வெட்டு பாடல் கிடைக்குமானால் என் மின்னஞ்சலுக்கு விரைவில் அனுப்பமுடியுமா?
johan.arunasalam@gmail.com