Author: Unknown
•12:20 PM
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிப்போய் விட்டிருப்பது இந்த மினி வான். அதுவும் நெல்லியடி-யாழ்ப்பாணம் பயணங்கள் ஒவ்வொன்றும் ஒரு அனுபவம். அதுவும் இந்த ஏ/எல் படிக்கிற காலத்தில ரியூசன் எண்டு சொல்லிப்போட்டு கொப்பிய மடிச்சு ஜீன்ஸ்சுக்குள்ள சொருகிக்கொண்டு ராஜா டாக்கீஸ்சிலயும் மனோகராவிலயும் புதுப்படம் பாக்க நாங்கள் கூட்டமாக் கிளம்பிப் போறது இருக்கே, அது ஒரு சுகம் பாருங்கோ.

என்ன பிரச்சினை எண்டால் நெல்லியடியிலையும் சரி, பருத்தித் துறையிலையும் சரி ரீல்ஸ் தியேட்டர் இல்லை. நாங்கள் படம் பாக்கிறது ப்ரொஜெக்டர் வச்சு வி. எச். எஸ். டெக்கில போடுற படங்களைத் தான். அதால நல்ல படம் ஏதாவது வந்தா கள்ளமா யாழ்ப்பாணம் போய்த்தான் படம் பார்ப்பம். இதில நெல்லியடியில ராஜலக்‌ஷ்மி என்றொரு தியேட்டரைப் பற்றிச் சொல்லோணும். அங்க பல்கணில ஒரு நாள் நாங்கள் ஏழு பேர் மட்டும் இருந்து படம் பாக்கேக்க கீழ இருந்த ஆக்களோட ஒரு கொழுவல். மேலையிருந்து பச்சைத் தூசணமா எல்லாம் பேச அவங்கள் எங்கட தூசணத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பேசாம இருந்துட்டாங்கள். படம் முடிஞ்சு கீழ வர, கீழ இருந்த ஆக்களில ஒராள் எங்களுக்குப் படிப்பிக்கிற வாத்தியார். ‘ஆ, நடக்கட்டும் நடக்கட்டும்' எண்டுட்டு மனுசன் போக எங்களுக்கு ஒரே மானக்கேடாப் போச்சு.

அதேமாதிரி அதே பல்கணியில ஒரு நாள் வேற படம் பாக்கேக்க என்ர ஜீன்ஸ் பொக்கட்டில இருந்த சைக்கிள் திறப்பு கீழ விழுந்து போட்டுது. இருட்டுக்குள்ள கீழ கைய விட்டுத் தடவினா ஏதோ தொள தொள தண்ணிமாதிரி இருக்க பயந்து போனன். உடன தியேட்டரில வேலை செய்யிற ஒரு பொடியனக் கூட்டிவந்து லைட் பிடிச்சுப் பாத்தா ஆரோ ஒரு புண்ணியவான் வெத்திலையச் சப்பி இருக்கிற சீட்டுக்குப் பக்கத்திலயே துப்பி வச்சுட்டுப் போயிருந்தார். அண்டையோட ராஜலக்‌ஷ்மித் தியேட்டரை விட்டாச்சு. அதே நெல்லியடியில இருந்த பழம் பெரும் மகாத்மா தியேட்டரில் பல்கணி இல்லாதபடியால் பெரிசாப் போறது இல்லை. ஏனெண்டால் பல்கணியில இருக்கிறபோது வர்ற ஒரு மிதப்பு கீழ இருந்து பார்க்கிறபோது வர்றதில்லை.

ரீல்ஸ் படம் பார்க்க யாழ்ப்பாணம் போறது ஒரு நல்ல அனுபவம். எப்ப போறது எண்டு முதலே பிளான் போட்டு அந்த நேரத்துக்கு ரியூசன் இருக்கிறதா ஒரு கிழமைக்கு முன்னமே வீட்டில பில்ட்-அப் குடுத்து, ரியூசன் போறமாதிரி கொப்பி புத்தகம் எல்லாம் கொண்டுதான் வெளிக்கிடுவம். (என்ர அப்பர் அந்த நாளில் யாழ்ப்பாணம் போகக்கூடாது என்பது எனக்கான கூடுதலான பிரார்த்தனை). ஒரு வழியாக மூத்தவிநாயகர் கோவில் அல்லது கண்ணன் வீடு எண்டு இரண்டில் ஒரு இடத்தில சைக்கிளை விட்டுட்டு மினிபஸ் ஏறுவம். ஏற்கனவே மினிபஸ் ஃபுட் போட்டில ஆக்கள் நிறம்பி வழிய வந்தாலும் அதில போகாட்டா எங்கட சுதா யாழ்ப்பாணம் வரமாட்டான். எண்டபடியால் அதில ஏறி யாழ்ப்பாணத்தில போய் இறங்கும் வரை கபி குஷி கபி கம் தான். (பெண்கள் மன்னிப்பார்களாக)

யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில இறங்கி தியேட்டருக்கு விறுவிறுவெண்டு நடந்து போவம். அனேகமா எங்கட நித்து அட்வான்ஸ் புக்கிங் செய்திருப்பதால டிக்கட்டுக்கு அடிபடுறதில்லை. அப்பிடி அடிபட வேண்டி வந்தாலும் போற அத்தினை பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் இறுக்கமாப் பிடிச்சபடி ஒற்றுமையா முன்னுக்குப் போயிடுவம். மனோகாரா தியேட்டரில மட்டும் ஜெயன் ஒராளைச் சினேகம் பிடிச்சு இருந்ததால எங்களுக்கு ராஜ மரியாதை இருக்கும். இதில பெரிய பகிடி என்னெண்டால் அங்க ஒரு காலத்தில விஜய்க்கு அபிசேகம் எல்லாம் செய்தவங்கள். அதில கடுப்பாகிப்போய் விஜயிண்ட செண்டிமெண்ட் சீனுக்கு நாங்கள் ‘ஹஹ்ஹஹ்ஹா' எண்டு ராஜலக்‌ஷ்மி தியேட்டர் ஞாபகத்தில சிரிக்க 'எவண்டா அவன் (கீறிட்ட இடம்)' எண்டு கீழையிருந்து வந்த குரலில் அடங்கிப் போவம்.

பிறகு படம் பாத்த களைப்பில அங்க இருக்கிற பல ஐஸ்கிரீம் கடைகளில ஏதாவது ஒண்டிலையோ, ரொலெக்ஸ் சாப்பாட்டுக் கடையிலையோ சாப்பிட்டுட்டுத் தான் வருவம். (தியேட்டரில் குடிக்கிற சோடா வேற கணக்கு). ஒரு முறை உப்பிடித்தான் தியேட்டரில வாங்கின சோடா மிஞ்சிப்போக அதை நானும் நிதியும் குடிச்சுத் தள்ளினம். தியேட்டரில இருந்து பஸ் ஸ்டாண்ட் வரக்கு முன்னம் முட்டீட்டுது. பிறகு ஒரு பாருக்குள்ள போய் அன்-லோட் பண்ண வேண்டி வந்தது. நல்லகாலம், ஆராவது கண்டிருந்தால் எங்கட நல்ல பேர் கெட்டுப்போயிருக்குமல்லோ. வீட்ட திரும்பிவரக்கு முன்னம் எனக்கு திரும்ப முட்டி, வீட்ட வந்தவுடன 10 நிமிஷமா அன்-லோட் பண்ணினது வேற கதை.

என்ன தியேட்டர் போகேக்கையும் சரி, வரேக்கையும் சரி ஒரே கூத்தும் கும்மாளமுமா இருப்பம். அனேகமா ஏதாவது நல்ல நாள் பெருநாளிலையும் இப்பிடி படம் பாக்கப் போறதால எங்கள மாதிரி ஆகக் குறஞ்சது அஞ்சு செட்டாவது ஒரு மினி வானில வரும். அண்டைக்கு பஸ்சில வாற பெரிசுகள் எல்லாத்துக்கும் திண்டாட்டம்தான். ட்ரைவர் கொஞ்சம் வயது போனவர் எண்டால் அவருக்கும் திண்டாட்டம்தான். 'அண்ண, உந்தப் பாட்டுப் பெட்டியப் போடு' எண்டு தொடங்கி ஒரே தொல்லை பண்ணுவாங்கள். இதெல்லாத்தையும் சமாளிச்சு பஸ் ஓடுறதுதான் அவர்களின் கெட்டித்தனம்.

பி.கு: அந்தப் பண்டிகைக் கால சினிமா பார்க்கும் அனுபவமும், சந்தோஷமும், மனநிறைவும் இங்கே ஏ.ஸி தியேட்டர்களில், டி.ரி.எஸ் சவுண்டில் எந்த நெருக்கடியும் இல்லாமல் பார்க்கும் படங்களில் எல்லாம் இல்லை.
This entry was posted on 12:20 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On August 5, 2009 at 7:08 PM , வந்தியத்தேவன் said...

கீத் உங்களினதும் வர்மாவினது தேர் திருவிழாவும் அடுத்தடுத்த பதிவுகளாக வந்திருக்கு இரண்டுக்கும் சரியான ஒற்றுமை. இரண்டும் இரண்டும் தலைமுறை இடைவெளியுள்ள பதிவுகள். அவர்கள்(வர்மா) காலத்தில் சிவாஜி படம், உங்கள் காலத்தில் விஜய் படம், ஆனால் இடையில் எங்கள் காலத்தில் கமல் ரஜனி படம் யாழ்ப்பாணத்தில் பார்க்க எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. மினிசினிமாவில் இளையராஜா பாட்டுக்காக ராமராஜன் படங்கள் தான் அதிகம் பார்த்தது.

 
On August 5, 2009 at 9:38 PM , வர்மா said...

நான் எழுத நினைப்பதை நண்பர்கள் எழுதி விடுகிறார்கள்.ரூம் போட்டு யோசிக்கிறார்களோ? தலைமுறை மாறினாலும் களவாகப்படம் பார்க்கும்
அனுபவம் மாறுவதில்லை.
அன்புடன்
வர்மா.

 
On August 5, 2009 at 10:02 PM , Unknown said...

இளையராசா பாட்டுக்காக மாட்டுக் கொட்டகையில் கூட படம் பார்க்கலாம் வந்தியண்ணா...

வர்மா... ஹாஹா...why blood... same blood..

 
On August 6, 2009 at 2:38 AM , யசோதா.பத்மநாதன் said...

!!

அப்ப நீங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் போல?

 
On August 6, 2009 at 3:53 AM , வர்மா said...

ரண்டுபேரும் சுப்பற்றை கொல்லைக்கைதான் சுத்தி இருக்கிறம்.
அன்புட‌ன்
வ‌ர்மா

 
On August 8, 2009 at 12:26 PM , Unknown said...

மணிமேகலா என்னது... விசிலடிச்சான் குஞ்சுகளா.. அப்பிடியெண்டால் என்ன பாருங்கோ... அது ஒண்டும் கெட்ட வார்த்தை இல்லைதானே...

வர்மா..ஆமா..ஒரே கொல்லையிலதான் சுத்தியிருக்கிறம்..