Author: shangar
•9:50 PM

எணேய் அம்மா, இவன் தம்பி இன்னும் நித்திரையாலை எழும்பேலை.. பக்கத்து வீட்டில பொங்கும் பூம்புனல் கேட்குது… பள்ளிக்கூடத்துக்கு நேரம் போகுதணை…

நான் வாறன் இப்ப.. உவனுக்கு மேனை கொஞ்சம் தண்ணி, வாளியோடை கொண்டே ஊத்தினனெண்டா எல்லா நித்திரையும் இப்ப போகும்.. சரி மேனைகொப்பர் எங்கே போட்டார்?

அப்பு ஆலங்குச்சி எடுக்கவெண்டு சந்திக்குப் போனவர்.. இன்னும் காணேலை…

இண்டைக்கு பல்லுவிளக்கினமாதிரித்தான். உந்த மனிசனுக்க கதை கண்ட இடம் கயிலாயம் தான்… அங்கை ஆரும் ஓசியிலை பேப்பர் பாக்க வந்திருப்பினம், பின்னை சமா வைக்கினமாக்கும; என்று புறுபுறுத்தாள்..

தம்பி அப்பத்தான் நித்திரையால எழும்பி வாறான்.. எட தம்பி கொப்பர் ஆலங்குச்சி எடுக்க போனவர். சீமான் வரக் காணேலை. ஒருக்கா உந்த சின்னக் காலாலை ஓடிப்போய் குச்சியை கொப்பரிட்டை வாங்கி பல்லை மினிக்கிக் கொண்டு தோட்டத்திலை மிஸின் றைக்குது. அதிலை குளிச்சிட்டுவா பவுண்.

வந்த மணியிடம், கொப்பருக்கு கொஞ்சம் பழஞ்சோறு கிடக்கு… உனக்கு கொஞ்சம் ஒடியல் புட்டு அவிச்சனான் .. மாங்காயும், நேற்று அவிச்சு வைச்ச நெத்தலி மீனும் போட்டனான். கெதிபண்ணி சாப்பிட்டிட்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடு மேனை. உன்ரை கூட்டாளி நீ குளிக்கப் போனாப்போலை வந்தவன். மினைக்கெட்டால் வாத்தியிட்டை இண்டைக்கு பூசை தான் எண்டிட்டு போட்டான்.

அம்மா நாலுறூள் கொப்பி வேண்டி வரச் சொல்லி ஆங்கிலப்பாட வாத்தி சொன்னவர். காசு தாவணெணை. அடுப்படி மட்டை வரிக்கடிலிலை ஒரு தகரப்பேணி கிடக்கு.. அதுக்கை சின்ன மடிலேங்சிக்கை சீட்டுக்காசு கிடக்கு.. அதிலை 2ருபாயை எடன் முருங்கையில கொஞ்ச காய் ஆயலாம் . தேசிக்காயும் கிடக்கு… சந்தையிலை குடுத்திட்டு எடுத்த காசை வைப்பம்.

பள்ளிக்கூடத்தில்

டேய் மணி நேற்று தந்த வீட்டுப்பாடம் செய்து போட்டியே?

இல்லயடா.. நேற்று ரா தோட்டவெளியில அரிச்சந்திரன் கூத்து ஆடினவங்கள் அதுதான் பார்க்கப் போனன். அயத்துப்போனனடா.

சரியடா நான் செய்தனான். கெதியா பார்த்து எழுது.

வாத்தியார் வாரார். வணக்கம் ஐயா. எல்லாரும் இருங்கோ. ஏன் வகுப்புக் கூட்டேலை. கூட்டு முறையாள் வரேலை ஐயா. நல்ல சாட்டு.. சரி எல்லாரும் முழங்காலிலை வெளியிலை நில்லுங்கோ. இண்டைக்கு இந்தப்பாடம் நடத்தேலாது.

வெளில வந்த அதிபர், ஏன் வெளியிலை நிக்கிறியள் என்று கேட்க கணக்கு வாத்தியார் நிப்பாட்டிப் போட்டார் ஐயா.. வகுப்புக் கூட்டேல எண்டு..

சரி.. சரி.. வகுப்பைக் கூட்டிப்போட்டு இருங்கோ. இனிமேல் உப்பிடிச் செய்யக்கூடாது.

மூன்றரை மணியளவில்… பள்ளிக்கூட மணி அடிக்க தேவாரம் பாடி முடிச்சு பொடியள் வெளியே வருகினம். மணி இண்டைக்கு தோட்ட வேலிக்கு கதியால் போடவேணும். வீட்டை வாறியே?. போடா நான் எங்கடை தோட்டத்துக்கு வெருளி கட்டவேணும். கிளியள் எல்லாம் தோட்டத்திலை காய்களை எல்லாம் சிதிலப்படுத்துதுகள்.

வீட்டை வந்தான் மணி..

தம்பி டேய்.. இதிலை புசல்மா வைச்சனான் கண்டனியே? என்ற அக்காவிடம் எனக்குத் தெரியா.. நான் என்ன பெட்டையே? அவவின்ரை கேள்வியெண்டால்…

சரி சரி.. சாப்பாட்டை போட்டுத் தா கெதியா.. விளையாடப் போக வேணும்…

நீயே போட்டுச் சாப்பிடு… அம்மா வரட்டும். அவாட்டை ரண்டு வக்கணை வேண்டித் தாரன். அப்ப சரிவரும் உன்ர வாய்க்கு,.

கண்ணன் வாறான். டேய் மணி.. நாளைக்க திருவிழாவிலை பொம்மலாட்டம் வருகுதாம். நான் போகப்போறன்.

ஏன்டா சின்ன மேளம் இல்லையே?

சின்ன மேளம் வர 3மணியாய் போம். வாணவெடியும் அப்பத்தானே போடுவங்கள். 3மணிக்குப் பிறகு சின்னண்ணணோடையும், பெடியளோடையும் போவம்.

அப்பத்தான் அங்க வந்த அம்மா.. கண்ணனைக் கண்டிட்டு, மருமேன் ஒருக்கா மறக்காமல் கொப்பரட்டைச் சொல்லு வீட்டை வரட்டாம் எண்டு. கனக்க கதைகிடக்கு.

சரி மாமி… சொல்லி விடுறன்.. நாங்கள் திருவிழாக்கு போட்டு வாறம்…

பொருள் விளக்கம்:

எணேய் - வயது கூடியவர்களை மரியாதையாக (பெரும்பாலும் ஒருவித சலிப்புடன்) அழைப்பது

மேனை - வயதானவர்கள் சிறியவர்களை , பிள்ளைகளை அழைப்பது

கொப்பர் -முன்னால் நிற்பவரின் தகப்பனை அழைப்பது

சமா - நிறைய நபர்கள் சேர்ந்து கதைப்பது

புறுபுறுத்தல் - வாய்க்குள் சத்தம் வராமல் தானே ஏசுவது.

சீமான் - மரியாதைக்கும், நக்கலுக்குத் அதை சொல்வார்கள். செல்வந்தர் என்பது பொருள்.

மினைக்கெட்டால் - நேரத்தை விரயம் செய்தால்

பூசை - அடிப்பது

மடிலேஞ்சி - பணம் வைக்கும் சிறிய கை பை(Purse)

ரா -இரவு

அயத்துப்போனனடா - மறந்துபோதல்

கெதியா - விரைவாக

பொடியள் -பிள்ளைகள்.

கதியால் - மரத்தில் இருந்து வெட்டிய கிளைகள்

சிதிலப்படுத்துதுகள். – பழுதுபடுத்துவது.

புசல்மா - முகத்திற்கு போடும் பவுடர். குட்டிகுரோப் அப்போது பிரபலமானது.

சின்ன மேளம் - கோவிலில் குழுவாக நடனமாடும் பெண்கள். சினிமா பாட்டுக்கு ஆடுவார்கள்.

கனக்க - நிறைய

This entry was posted on 9:50 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On July 6, 2009 at 10:30 PM , soorya said...

அப்போ நான் மிக..மிக இளசு.
எனக்கு சின்னமேளம் என்றால் என்றால் கொள்ளைப் பிரியம்.
சின்னமேளக்காரிகளுக்கு...வெக்கம் இல்லை.
இப்போ உள்ள நமீதா போல..அப்போ இல்லை.
அவர்களால் என்ன முடியுமோ அதைச் செய்தார்கள்.
உதாரணமாக..மார்புக் கச்சு இருக்கே..
அதற்கெல்லாம் பித்தளை நகை போட்டு,
அலங்கரித்து,
மின்மினிப் பல்புக்களூடாக....
.........ஆடலுடன் பாடலைக் கேட்டு என்று சுத்திச் சுத்தி ஆடி வந்து
இஸ்கா இஸ்கா... என்று மூச்சுவிடுவார்கள்.
அப்போ அந்தப் பித்தளை நகைகள் மினுங்குமாம்.
(யாரோ சொன்னார்கள்.)
எனக்கிதெல்லாம் தெரியாது.
நான் அப்போ மிக மிகச் சின்னப் பொடியன்.
ஏன் இதுகளுக்க வெக்கம் இல்லையோ என்று ...அதிசயித்ததால் தான்...,
எனக்கு சின்ன மேள்ம் பிடிக்கும்.
பதிவிற்கு நன்றி.

 
On July 6, 2009 at 10:43 PM , வந்தியத்தேவன் said...

நிறையச் சொற்கள் பாவித்து அழகாக எழுதியிருக்கிறீர்கள். நானும் ஒருநாளும் சின்னமேளம் பார்க்கவில்லை, காரணம் எங்கடகாலத்திலை சின்னமேளம் இல்லை. கோஷ்டிதான் இருந்தது. ராஜன், அருணா, பின்னர் சாந்தன் என சில கோஷ்டிகள் இருந்தன.

 
On July 7, 2009 at 3:36 AM , தமிழ் said...

இடுகையின் முடிவில்
சொற்களஞ்சியம் கொடுத்தால்
தமிழகத்தில் வந்து படிக்கும்
வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்

 
On July 7, 2009 at 8:24 AM , சினேகிதி said...

\\தம்பி டேய்.. இதிலை புசல்மா வைச்சனான் கண்டனியே? என்ற அக்காவிடம் எனக்குத் தெரியா.. நான் என்ன பெட்டையே? அவவின்ரை கேள்வியெண்டால்…\\

புசல்மா என்டால் என்ன? மிச்ச சொற்கள் எல்லாம் பரிச்சயமான சொற்கள்தான். அதுவும் அயத்துப்போனன் என்டு ஒவ்வொருநாளும் சொல்லுவா அப்பம்மா. சொற்களை bold பண்ணினது நல்ல ஐடியா.

 
On July 7, 2009 at 10:53 AM , வந்தியத்தேவன் said...

//சினேகிதி said...

புசல்மா என்டால் என்ன?//

புசல் மா என்பது முகத்துக்குபூசுகின்ற பவுடர் என நினைக்கின்றேன். பொண்ட்ஸ், யார்ட்லி என பல ரகங்கள் வந்தாலும் அந்தக்கால நீளப்பேணியில் வரும் ஒரு பவுடரின் வாசனையே தனி. அந்தப் பவுடரின் பெயர் மறந்துபோனேன்.

 
On July 7, 2009 at 4:35 PM , யசோதா.பத்மநாதன் said...

பொங்கும் பூம்புனலை நீங்கள் ஞாபகப் படுத்த அதனைத் தொடர்ந்து பிறந்தநாள் இன்று பிறந்த நாள் நான் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.. என்று வருமே பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் அது ஞாபகத்திற்கு வந்தது.

நீங்கள் நாலுறூள் கொப்பியைப் பற்றிக் குறிப்பிட சதுர றூள் கொப்பியும் ஞாபகத்திற்கு வந்தது.

வந்தி குறிப்பிடும் அந்த நீள ரின் பவுடர் அசாத்தியமான வாசனை கொண்டது தான்.எனக்கும் பெயர் மறந்து போயிற்று.

மிக அருமையாக ஒருகால கட்டத்தைக் கண்முன்னால் கொண்டுவந்தீர்கள் நண்பரே! வருகைக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கள்.

 
On July 8, 2009 at 5:55 AM , வி. ஜெ. சந்திரன் said...

சின்னமேளம் பற்றிய கதைகள் கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் சின்ன மேளம் பார்த்ததில்லை. எங்கள் அயல் ஊரில் வாழ்ந்த ஒருவர் இந்தியாவில் இருந்து சின்ன மேள குழுக்களை திருவிழாக்களுக்கு ஒழுங்கு செய்து கொடுப்பதால் அவருக்கு அடைமொழியுடன் பெயர் இருந்தது.

//அந்தக்கால நீளப்பேணியில் வரும் ஒரு பவுடரின் வாசனையே தனி. அந்தப் பவுடரின் பெயர் மறந்துபோனேன்.
//

பியுட்டிகூரா

 
On July 8, 2009 at 7:53 AM , வந்தியத்தேவன் said...

// வி. ஜெ. சந்திரன் said...

பியுட்டிகூரா//

நன்றிகள் சந்திரன் சிலர் குட்டிக்கூரா என்றுகூடச் சொல்வார்கள்.

 
On July 9, 2009 at 5:28 AM , shangar said...

திகழ்மிளிர்: பொருள் விளக்கம் சேர்த்தாயிற்று…
சினேகிதி: வந்தியத்தேவன் சொன்னது போல முகத்துக்கு பூசுற பவுடர் தான் புசல்மா..

ஆமாம் மணிமேகலை… பிறந்த நாள் பாடல் கேட்டால், அடடா.. பள்ளிக்கூடம் போக நேரம் போட்டுதே என்று ஓடி ஓடிப் போறது அந்த நேரம்…

நல்ல ஞாபக சக்தி வி.ஜே சந்திரன்

 
On July 15, 2009 at 9:53 AM , மாயா said...

அயத்துப்போனனடா என்றால் கண் அயர்வதைக் குறிக்கதா ? (நித்திரை கொள்வது ? )

 
On July 15, 2009 at 9:18 PM , Vasanthan said...

மடிலேஞ்சி என்பது பையைக் குறிக்குமா?
முந்தி லேஞ்சியில்தான் காசை முடிந்து இடுப்பிற் செருகியிருப்பார்கள் பெண்கள். என்ர அம்மம்மா இப்பவும் அப்படித்தான். அதைத்தான் மடிலேஞ்சி என்பார்கள்.
அதைவிட்டு, பணம் வைக்கும் பையை இச்சொல் குறிப்பதாகத் தெரியவில்லை.