Author: வர்மா
•5:57 AM
சிவராத்திரி எண்டால் எங்களுக்கு உசார்வந்துவிடும். விடியவிடிய கன இடங்களீலை கூத்துநடக்கும்.அந்த இரவு மறக்கமுடியாத இரவாக இருக்கும்.கூத்துப்பாக்க எண்டு வீட்டிலை சொல்லிப்போட்டு வெளீக்கிட்டா கன சோலியளை செய்வம்.
அண்ணாச்சாமி வாத்தியாரின்ரை சீன் கன இடங்களூக்குப்போகும்.சீன்,லைற் எஞ்ஜின். ஸ்பீக்கர், மேக்கப் எண்டு எல்லாத்தையும் அண்ணாசாமிவாத்தியார் பொறுப்பெடுப்பார். முல்லைத்தீவு,மீசாலை,அல்வாய்,சமரபாகு,கொடிகாமம் எண்டு அஞ்சு இடத்திலை அவற்றை ஆக்கள்தான் சீன் கட்டுவினம்.
நாங்கள் கூத்துப்பாக்கஎண்டுசொல்லிப்போட்டு வேறை அலுவல்தான் பாப்பம்.இளனி களவெடுக்கிறது, மரவள்ளிக்கிழங்குபிடுகிங்கி அவிக்கிறது,படலையை களட்டி அவற்ரைகோவக்காரரின்ரை வீட்டிலை கட்டுறது,வாளைக்குலை வெட்டுறது எண்டுஎங்கடை வேலை விடியவிடியநடக்கும். சிவராத்திரிக்கு மூண்டாவது ஷோ எண்டாலும்கட்டாயம் பாப்பம்.
நடிகமணீ வி.வி. வைரமுத்துவின் மயானகாண்டம் எங்கையாவது நடக்கும் கட்டாயம் மயானகாண்டம் பாத்துப்போட்டுத்தான் படம் பாப்பம்.வைரமுத்துக்கு சோடியாக அரியாலை ரத்தினம் ஸ்திரிபாட் .சந்திரமதியாகரத்தினம் அழுதா சனமும் அழும். அச்சுவேலி மார்ககண்டுதான் யமனாக வருவார். அவருக்கு பேரேயமன் மார்க்கண்டுதான்.
மயானகாண்டம் நடக்கமுதல் பவூன் சின்னதுரையும் சீனா பானாவும் சனத்தசிரிக்கபண்ணுவினம்.ஒரு இடவெளி பாத்து பருத்துறைக்குப்போய் தோசை அப்பம் சாப்பிடுவம்.
கூத்துப்பாக்ககனசனம் வரும் கொஞ்சப்பேர்தான் விரதகாறர். மிச்சப்பேர் பம்பலுக்கு வாறவை.அது அந்தககாலம். இனிஅது போலைவராது.

கூத்து.........................நாடகம்
கும்மாளம்/குஷி......சத்தோசம்
உசார்..............உற்சாகம்
சீன்............நாடகதிரைச்சீலை
அலுவல் .......வேலை
படலை........வீட்டுக்குவெளீயே உள்ளகதவு
பம்பல்.......பொழுதுபோக்கு
ஸ்திரிபாட்......பெண் வேடமிடும் ஆண்
பவூன்..........நகைச்சுவை நடிகர்
This entry was posted on 5:57 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On July 10, 2009 at 6:13 AM , வந்தியத்தேவன் said...

வர்மா அவர்களே நீங்கள் கூத்துப் பார்க்கிறதை கோடாக போட்டிருக்கிறியள். விரைவில் பெரிய ரோடாகவே போடுகின்றேன்.

என்ன எங்கடை காலத்திலை காத்தவராயன், பூதத்தம்பி என்ற இரண்டு கூத்துகள் தான் அரங்கேறின. மற்றவை எல்லாம் நவீன நாடகங்கள் தான். மண் சுமந்த மேனியார், பொய்க்கால் என பல நாடகங்களை பல தடவை பார்த்திருக்கின்றோம்.

 
On July 10, 2009 at 7:30 AM , யசோதா.பத்மநாதன் said...

கூத்துப் பற்றிப் பார்த்ததும் ஒரு விடயம் ஞாபகம் வந்தது.இதனைச் சொல்லாவிட்டால் எனக்கு மண்டை வெடித்து விடும்.

அப்போது கைலாசபதி கலையரங்கில் காத்தவராயன் கூத்தைத் தொடர்ந்து கூத்தைப் பற்றிய நயப்புரை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

அதற்குப் பேசுவதற்காகக் கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை அவர்கள் அழைக்கப் பட்டிருந்தார்கள்.

மண்டபம் நிறைந்த பல்கலைக்கழக மாணவர் கூட்டம்.அவர் பேச ஆரம்பித்த சில நிமிடங்களுக்குப்பின் பேசுவதற்காக வைக்கப் பட்டிருந்த பீடத்தைத் தாண்டி முழுவதுமாக நாம் பார்க்கக் கூடிய வகையில் நின்று கொண்டார்.அவரது வேட்டியின் முடிச்சு மெல்ல மெல்ல அவிழத்தொடங்கியது. அவருக்கோ அது தெரியவில்லை.தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது சபையிலிருந்த தமிழ் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் (அவர் தான் கூத்தை நெறியாள்கை செய்தார்)மேடைக்குச் சென்று காதில் ரகசியமாக விடயத்தைச் சொன்னார்.

அவர் வெகு நிதானமாக பதட்டமில்லாத புன்னகையோடு வேட்டியை இறுகக் கட்டினார்.பிறகு சொன்னார்."இது தானையா ரசனையின் உச்சக்கட்டம்"

சபையின் கைதட்டலுக்குப் பிறகு கேட்கவா வேண்டும்!

அந்த இக்கட்டான சூழலை உடனடியாக அவர் கையாண்ட விதம் பலரால் விதந்து பேசப்பட்டது.

அவர் தொடர்ந்து பேசும் போது இப்படித்தானாம் தான் சிறுவனாக இருந்தபோது கூத்துப் பார்க்க இரவு நேரம் ரோச் லைட்டும் எடுத்துக்கொண்டு போவாரம். அப்படி ஒரு நாள் போய் கையில் ரோச்சை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தாராம்.யாரோ கையில் வைத்துக் கொண்டிருந்த ரோச்சை எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம். கூத்து முடிந்த பின்பு தானாம் தனக்கு அது தெரிய வந்தது.

அருமையான ஒரு கலா ரசிகர் அவர்.

அந்தக் கூத்தில் நடித்த ஆரியமாலாவுக்கு வந்த மாணவியும் மறக்க முடியாத ஒரு பேரழகி.

 
On July 10, 2009 at 8:27 AM , கானா பிரபா said...

கூத்துப் பற்றிய பதிவு சிறப்பு, என்னிடம் சில கூத்துக்களில் ஒலிவடிவங்கள் இருக்கின்றன அவற்றைப் பின்னர் தருகின்றேன்.

 
On July 10, 2009 at 9:28 AM , வந்தியத்தேவன் said...

நல்லதொரு விடயம் சொல்லியிருக்கிறியள். கலைப்பேரரசு அவர்களின் நாடகம் பார்க்கவில்லை ஒரு முறை கம்பன் விழாவில் படைத்தவனைச் சந்தித்த பாத்திரங்கள் நிகழ்ச்சியில் ஏதோ ஒரு பாத்திரமாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்னர் யாழில் நடந்த நிகழ்ச்சி ஆதலால் பாத்திரத்தின் பெயர் ஞாபகமில்லை.

// மணிமேகலா said...

அந்தக் கூத்தில் நடித்த ஆரியமாலாவுக்கு வந்த மாணவியும் மறக்க முடியாத ஒரு பேரழகி //

அந்தப் பேரழகி நீங்களா ஆச்சி?

 
On July 10, 2009 at 10:02 AM , soorya said...

மணிமேகலா..!
ஏ.ரி பொன்னுத்துரை அவர்கள், மிகவும் அற்புதமான கலைஞர். எனது மதிப்புக்குரியவர். எனக்கு மிக நெருக்கமானவர். நினைக்க வைத்தமைக்கு நன்றி.

 
On July 10, 2009 at 6:17 PM , யசோதா.பத்மநாதன் said...

வந்தி, ஒரு மாதிரி என்னை உச்சி குளிரப் பண்ணிப் போட்டாய்.:)நீ வலு விண்ணனடா!


உண்மை சூர்யா. ஒரு முறைதான் அவரது பேச்சைக் கேட்டேன்,பார்த்தேன்.ஆனால் இன்று வரை அவர் நினைவில் நிற்கிறார்.

கலையை ரசித்து அனுபவித்து அதில் திளைத்து வாழ்ந்த ஒரு மனிதர்.

 
On July 11, 2009 at 7:53 PM , த.அகிலன் said...

சிவ பூசையில் கரடியாய் வாறதுக்கு மன்னிக்கோணும் கூத்தும் நாடகமும் ஒண்டோ.. எனக்கு தெரிஞ்சு ஒண்டில்ல.. இரண்டும் வெவ்வேறு கலை வடிவங்கள்.. கூத்து என்பதை இசை நாடகம் எண்டு சொல்லலாமோ தெரியாது ஆனால் நாடகம் இல்லை கூத்து...

 
On July 12, 2009 at 12:07 AM , வர்மா said...

வந்தியத்தேவனே ரோட்டை போடுங்கள் நானும் சவாரிசெய்கிறேன்.கலைப்பேரரசுவைப்பற்றி தெரிந்தவர்கள் நல்லபதிவை வெளீயிடுங்கள். கானாபிரபா எதற்காக தள்ளிப்போடுகிறீர்கள்.ஒலிவடிவங்களை உடனே தாருங்கள்.த.அகிலன் சிவபூசையில் கரடி அல்ல. கூத்து என்றால் புராண இதிகாசங்களைக்கொண்டாஆடல் பாடல் நிறைந்த நாட்டுப்புறக்கலை காலப்போக்கில் உண்டான வசன நாடகங்களையும் கூத்து என்றே பொத்தாம்பொதுவாகக் கூறுவார்கள். சினிமாவில் புகழ் பரப்பிய பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மககள்திலகம் எம்.ஜி.ஆர்,நடிகர்திலகம் சிவாஜி ஆகியோரையும் கூத்தாடிகள் என்று கூறினார்கள்.
அன்புடன்
வர்மா

 
On July 15, 2009 at 8:11 PM , Vasanthan said...

அகிலனின் குழப்பம் நியாயமானதே.

தற்போதைய நிலையில் நாடகம் என்பது பாடல்களற்ற வடிவமாகவும் கூத்து என்பது பாடல்களால் நகர்த்தப்படும் வடிவமாகவுமே கருதப்படுகிறது.

ஆனால் நாட்டுக்கூத்துக் கலைஞர்கள் தமது கலையை 'நாடகம்' என்றுதான் கதைப்பார்கள். கூத்து என்ற சொல்லால் அதை அவர்கள் குறிப்பதில்லை.

 
On July 15, 2009 at 8:34 PM , Vasanthan said...

நான் காத்தவராயன் கூத்தைப் பார்த்தது வன்னி வந்த பின்புதான். எங்கள் ஊரில் கத்தோலிக்கரின் கூத்துக்கள்தாம் அதிகம் இடம்பெறும். கத்தோலிக்கர்கள் ஊருப்பட்ட கூத்துக்கள் வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட பிரபலமான ஒவ்வொரு புனிதருக்கும் ஒவ்வொரு கூத்து இருக்கிறது.

எங்கள் ஊரில் நான் அதிகம் இரசித்தது சங்கிலியன் கூத்துத்தான். எங்கள் ஊர்த் தேவாலயத் திருநாளொன்றில் இடம்பெற்றது. அதன் பிரபலத்தன்மைக்காக வேறும்சில கிராமங்களில் மீள மேடையேற்றப்பட்டது.

இன்றும் எனக்கு ஆச்சரியமான விடயமென்னவென்றால், சங்கிலி மன்னனின் கதை எப்படி கத்தோலிக்கரின் கூத்தானது என்பதும், கத்தோலிக்கரின் கூத்து என்ற அடையாளத்தைவிட்டு வெளியில் வந்து அது மற்றவர்களால் மேடையேற்றப்படவில்லை என்பதும்.

பம்பல் என்னெண்டா, சங்கிலி மன்னன் ஆட்சிக்காகச் சகோதரப் படுகொலை செய்தான், கத்தோலிக்கத்தை அழிக்க நினைத்தான், கத்தோலிக்கரை வதைத்தான், மன்னாரில் 600 கத்தோலிக்கரைக் கொன்றான், மதம் மாறத் துணிந்த மகனையே கொல்லத் துணிந்தான், மனைவியைச் சிறையிலடைத்தான் என்பவை அக்கூத்தில் விலாவாரியாக இடம்பெறும் (சும்மா இல்லை ஏழரை மணித்தியாலக் கூத்து அது). ஆனால் கூத்து முடிந்தால் சங்கிலி மன்னர் மிகப்பெரிய ஹீரோவாகத்தான் மக்களின் மனதில் நிறைந்திருப்பான். அவன்மீது துளிக்கோபம் வராது. சங்கிலி மன்னன் பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் காட்சியில் மக்கள் ஓவென்று அழுவார்கள்.

கூத்தை எழுதியவர் இப்படி எதிர்பார்த்திருப்பாரா தெரியாது. சிலவேளை யாழ்ப்பாணத்திலன்றி வேறிடத்தில் இக்கூத்து எதிர்மாறான விளைவைத் தரக்கூடும். நாங்கள் இழந்துபோன இராசதானியின் கடைசி மன்னன் அவன் என்ற ஏக்கம் யாழ்ப்பாணத்தாரிடமிருந்து அவ்வளவு விரைவில் அகற்றப்பட்டுவிடுமா என்ன?

 
On July 15, 2009 at 9:00 PM , Vasanthan said...

கூத்துகள் பற்றி நான் 2004 இல நட்சத்திரக் கிழமையில எழுதின ஈரிடுகைகள்
கூத்துக்கள்

கூத்தழிவு

 
On July 15, 2009 at 10:50 PM , வசந்தன்(Vasanthan) said...

அவை 2005 இல் எழுதப்பட்டவை. முதற்பின்னூட்டத்தில் ஆண்டு தவறாக இடம்பெற்றுவிட்டது.

 
On July 20, 2009 at 12:07 PM , சினேகிதி said...

அல்வாயில ஆற்ற படலையைக் கழட்டி ஆற்ற வீட்டில கட்டினீங்கிள் :)

நான் சத்தியவான் சாவித்திரி கூத்து மாலிசந்திப்பிள்ளையார் கோயில்ல பார்த்திருக்கிறன். காத்தவராயன் கூத்தும் பார்த்திருக்கிறன்.

ஓரானைக் கண்ணே கண்ணே உமையாள் பெற்ற பாலகனே என்டு வரும்...பிறகு

ஓடாத வாச்சும் கட்டி ஓட்டைக்கண்ணாடியும் போட்டுக்கொண்டார் டாப்பர் மாமா என்டு வரும்.

மஞ்சள் குளிக்கிற பாட்டென்ன மறந்திட்டன்.

 
On July 24, 2009 at 7:05 PM , குரும்பையூர் மூர்த்தி said...

சூர்யா, வர்மா : தற்சமயமாக google இல் தேடியபோது உங்கள் பின்னூட்டம் பார்க்கமுடிந்தது. கலைப்பேரரசு பற்றிய சிறு பதிவை இன்று பதித்திருக்கிறேன்
http://illakiya.blogspot.com/2009/07/1.html